புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label ஹோலிஸ்டிக் ரெய்கி. Show all posts
Showing posts with label ஹோலிஸ்டிக் ரெய்கி. Show all posts

தியானத்துக்கு ஒரு அறிமுகம்

தியானம்
தியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். தியானம் என்பது எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லாதது. சற்று உன்னிப்பாக கவனித்தால் தியானம் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் வெவ்வேறான வடிவில் இருப்பது புரியும்.

தியானம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும் சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் சேர்த்தும் செய்கிறார்கள். பல்வேறு வழிமுறைகளில் பயிற்சி செய்தாலும் தியானத்தின் நோக்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்துவதும் மற்றும் சீராக வைத்திருப்பதும் மட்டுமே. 

மூச்சு பயிற்சி 
மூச்சு பயிற்சி உடலையும், மனதையும், ஆற்றலையும் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூச்சு பயிற்சி என்பது மூச்சுக் காற்றை கட்டுப்படுத்தும் பயிற்சியல்ல மாறாக மூச்சுக் காற்றை சீர்படுத்தும் பயிற்சி மட்டுமே. சுவாசத்தின் போது உள்ளே செல்லும் மூச்சையும் வெளியேறும் மூச்சையும் கவனிப்பது மனதையும் உடலின் ஆற்றலையும் சமப்படுத்தும். உடலும் மனமும் இணைந்து செயல்பட உதவும். சம நிலையில் இருக்கும் மனமும் ஆற்றலும் சுலபமாகவும் முழுமையாகவும் தியானம் செய்ய உதவும்.

மூச்சுப்பயிற்சி செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமரவும்.

2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோஃபாவில் அமரவும்.

3. முதுகு தண்டை நேராக வைத்துக் கொள்ளவும்.

4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.

5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக் கூடாது.

பயிற்சி முறைகள் 
1. ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாகவும் மென்மையாகவும் வெளியில் விடவும். 3 முறைகள்

2. மூக்கின் வலது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வெளியில் விடவும். 3 முறைகள்

3. மூக்கின் இடது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வெளியில் விடவும். 3 முறைகள்

4. மூக்கின் வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு. வலது துவாரம் வழியாக மூச்சை விடவும். 3 முறைகள்.

5. மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு. இடது துவாரம் வழியாக மூச்சை விடவும். 3 முறைகள்.

6. மூச்சு ஆழமாக உள்ளே இழுத்து. இயன்ற வரை மூச்சை உள்ளே அடக்கவும். பின்பு மெதுவாக வெளியில் விடவும். 3 முறைகள்

7. இப்போது தியானத்தை தொடங்கவும்.


தியானம் செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமரவும்.

2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோஃபாவில் அமரவும்.

3. முதுகு தண்டை நேராக வைத்துக் கொள்ளவும்.

4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.

5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக் கூடாது.

6. மூச்சுப்பயிற்சி செய்யவும்.

7. மூச்சு பயிற்சி முடிந்ததும் தளர்வாகவும், அமைதியாகவும் அமரவும்.

8. இரு கைகளையும் தொடைகளின் மீது உள்ளங்கைகள் மேலே பார்ப்பதை போன்று வைத்துக் கொள்ளவும். அல்லது உங்களுக்கு பிடித்த முத்திரையில் வைத்துக் கொள்ளவும்.

9. கண்களை மூடிக் கொள்ளவும்.

10. உங்களின் சுவாசத்தை மட்டும் கவனிக்கவும்.

11. மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள்ளே செல்கிறது? உடலில் எங்கெல்லாம் செல்கிறது? அது மீண்டும் எவ்வாறு வெளியேறுகிறது? என்பதை மட்டும் எண்ணத்தால் கவனிக்கவும்.

12. நல்லதோ கெட்டதோ எந்த எண்ணம் தோன்றினாலும் அதை கட்டுப்படுத்தக் கூடாது.

13. ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்து உங்கள் உடலிலும், மனதிலும் நடப்பனவற்றை கவனிக்கவும்.

குறிப்புகள்

1. தொடக்கத்தில் 5 நிமிடங்கள் தியானத்தில் இருந்தால் போதுமானது.

2. உங்களுக்கு தியானம் பயிற்சியான பிறகு, 5-5 நிமிடங்களாக பயிற்சி நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. தொடக்க காலத்தில் தியானம் செய்ய இசையை பயன்படுத்தலாம். பயிற்சியான பிறகு இசையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

4. எவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சுக் காற்றை கவனிக்கிறார்களோ அவ்வளவு நன்மைகளை அடைவீர்கள்.


தியானத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை

தியானத்திற்கென்று எந்த கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் கிடையாது. ஆனால் தியானம் எளிதாகவும் இயல்பாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக சில வழிகாட்டுதல்கள்.

1. காலியான வயிற்றில் தியானம் செய்ய வேண்டும்.
2. தரையில் ஆசனமிட்டு அதன் மீது அமர வேண்டும்.
3. மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
4. வசதியாகவும் தளர்வாகவும் அமர வேண்டும்.
5. அமைதியாக அமர வேண்டும்.
6. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
7. மூச்சை கவனிக்க வேண்டும்.
8. சிந்தனையை கவனிக்க வேண்டும்.
9. பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

தியானத்தின் போது செய்யக் கூடாதவை

1. ஆபரணங்களை அணியக் கூடாது.
2. வெறும் தரையில் அமரக் கூடாது.
3. சாயக்கூடாது.
4. படுக்கக் கூடாது.
5. தியானத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட கூடாது.
6. வற்புறுத்தக் கூடாது.
7. பயம், கவலை, துக்கம், குழப்பம் கூடாது.
8. வற்புறுத்தி மூச்சு விட கூடாது.
9. சிந்தனை செய்யக் கூடாது.
10. கற்பனை செய்யக் கூடாது.
11. எண்ணங்களை கட்டுப்படுத்த கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே வழிகாட்டுதல்கள் தான். உண்மையில் தியானம் என்பது சுயமாக நடக்கும் ஒரு பரிமாற்றம் அதில் நாம் செய்வதற்கு ஒன்றுமே கிடையாது. உடலின் உள்ளுறுப்புகளை போன்று தியானமும் சுயமாக இயங்கும் இயல்புடையது.

ஆற்றலை சரியான இலக்கை நோக்கி அனுப்ப

பிரபஞ்ச ஆற்றலை முறையாகவும் இலகுவாகவும் தன் இலக்கை நோக்கி அனுப்ப. ரெய்கியை அனுப்புபவரும் அதை பெறுபவரும் அமைதியாகவும், சாந்தமாகவும், மன ஓர்மையுடனும் இருத்தல் வேண்டும்.

ஆற்றல் பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த உலகில் அனைத்துமே ஆற்றல் தான். மனிதர்கள் முதல் தாவரங்கள் வரையில் அனைத்துமே ஆற்றலின் மறு உருவங்கள்தான். அதனால் அனைத்து உயிர்களுக்கும், இயற்கையின் படைப்புகளுக்கும் ஆற்றல் தேவைப்படும்.

அதனால் ரெய்கியை அனுப்புபவரும் அதை பெறுபவரும் ஒரே மன நிலையில் இல்லாவிட்டால், அனுப்பிய ஆற்றல் போய் சேருவதற்குள் பாதி வழியில் கரைந்துவிட அல்லது முழுமையாக சென்று அடையாமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மற்ற உயிர்களும் பொருட்களும் அந்த ஆற்றல்களை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன.

ஆற்றலின் வீரியத்தையும் அதிகரிக்கும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றல் பயிற்சிகள் 
உடலில் ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சில பயிற்சிகள்.

1. ஆற்றலை அடிக்கடி கைகளில் குவித்து, ஆற்றல் பந்தை (energy ball) உருவாக்க வேண்டும்.

2. உள்ளங்கையில் உருவாகும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

3. உடலில் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக உணரவும் கவனிக்கவும் வேண்டும்.

4. இயற்கையிலும் நம்மை சுற்றியும் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை எப்போதும் கூர்மையாக உணரவும் கவனிக்கவும் வேண்டும்.

5. எப்போதுமே இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டும்.


ரெய்கி ஆற்றலை அனுப்பும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றலை ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்துக்கோ, இடத்துக்கோ எளிதாக அனுப்பலாம். மன அமைதியுடனும், மன ஓர்மையுடனும், உங்கள் கரங்களை அந்த மனிதர், விலங்கு, பொருள் அல்லது இடத்தின் மீது காட்டி மனதுக்குள் ரெய்கி ஆற்றல் அவர் மீது பரவட்டும் என்று நினைத்தாலே போதும். நீங்கள் நினைத்த மாத்திரமே ரெய்கி ஆற்றல் உங்கள் உள்ளங்கைகளின் மூலமாக பரவ தொடங்கிவிடும். அதை நீங்கள் உணரவும் முடியும்.

ஒரு குறிப்பிட்ட நோயோ, தொந்தரவோ, நோக்கமோ, தேவையோ இருந்தால். அந்த நோக்கத்தை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், ரெய்கி ஆற்றலை அனுப்பலாம். உங்கள் உள்ளங்கைகளை காட்டி கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். அவ்வளவு எளிமையானது ரெய்கி. இரண்டு கரங்களையும் பயன்படுத்தலாம் அல்லது வலது கரத்தை மட்டுமே பயன்படுத்தலாம். (Reiki symbols) ரெய்கி முத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

1. அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி ரெய்கி ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

2. நம் வீட்டை சுற்றி இருக்கும் செடி, கோடி, மற்றும் மரங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

3. நோய்வாய்ப் பட்டிருக்கும் வீட்டு அல்லது சாலையோர விலங்குகளுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும். 

4. கர்ப்பம் தரித்திருக்கும் விலங்குகளுடன் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

5. விபத்துகளில் பாதிப்படைந்த அல்லது ஊனமுற்ற விலங்குகளுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

6. ஆபத்தில், அவசரத்தில், அல்லது ஆம்புலன்சில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

7. முதுமையுற்ற, ஏழ்மையில் இருக்கும் அல்லது இயலாமையில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றல்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8. கர்ப்பம் தரித்த தாய்மார்களுடன் ரெய்கி ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

9. வீட்டுக்காக நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற உணவு பண்டங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்புங்கள்.

காய்கறிகளோ, பழங்களோ, தானியங்களோ வாங்கினால். வீடு திரும்பியதும் அவற்றின் மீது ரெய்கி ஆற்றலை அனுப்பினால் அவை அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். இதை முயற்சி செய்துபாருங்கள்.

 (கைகளில் ஆற்றல் பந்தை உருவாக்கும் உதாரணம்) 
 
(கைகளில் ஆற்றலை உணர்தல் உதாரணங்கள்) 

நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர்

உண்மையான மருத்துவர் 
நோயாளிகளின் நோய்களை குணப்படுத்துவது தாங்கள் அல்ல என்பதை, ரெய்கி சிகிச்சை அளிக்கும் அனைவரும் உணர வேண்டும். சிகிச்சை பெறுபவரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல் தான் அவரின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது என்பதை உணர வேண்டும்.

ரெய்கி சிகிச்சை அளிப்பவர் அல்லது மற்ற இயற்கையை சார்ந்த சிகிச்சையை அளிப்பவர் நான்தான் சிகிச்சை அளிக்கிறேன், நான்தான் குணப்படுத்துகிறேன் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தான் மக்களுக்கு நோய்களை குணப்படுத்துகிறேன், துன்பங்களில் உதவுகிறேன் என்பன போன்ற எண்ணங்கள் உருவாக தொடங்கிவிட்டால் அவருக்குள் ஆணவமும் கர்வமும் உண்டாகி விட்டது என்று அர்த்தம். 

நடப்பான அனைத்தும் அவன் செயல், அவன் அருளாலே, அவன் உதவியைக் கொண்டு நான் என் முயற்சியை செய்கிறேன். முடிவை இறைவன் கையில் ஒப்படைக்கிறேன் என்று நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இறைவன் மீது சாற்றி விட வேண்டும். நான் தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால், முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம் மேலும் மற்றவர்களின் கர்மாக்களையும் நாம் சுமக்க நேரிடலாம். 

நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள் 
ஒரு மனிதர் நோய்வாய்ப் படும்போது அதை முழுமையாக குணப்படுத்த அவர் ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இந்த ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்கும் போது அவர் விரைவாக குணமடைவார். இந்த ஒழுக்கங்களை கடை பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும். 

1. உணவை உட்கொள்ளும் முறைகள் 
உணவு உண்ணும் பழக்கத்தை முதலில் முறைப்படுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும். அந்த உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ள கூடியதாகவும் எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

2. தண்ணீர் அருந்தும் முறை 
தேவையில்லாமல் தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்த கூடாது. தாகம் உண்டானால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சீனி, வர்ணங்கள், வாசனைகள், இரசாயனங்கள், போன்றவை கலக்கப்பட்ட பானங்களை அருந்த கூடாது. சுடவைத்த அல்லது அதிகமாக வடி கட்டப்பட்ட தண்ணீரை அருந்தக் கூடாது. 

3. உடலுக்கு போதிய ஓய்வு வேண்டும் 
உடலில் சோர்வு உண்டானால் ஓய்வெடுக்க வேண்டும். அசதியாக இருக்கும் போது வற்புறுத்தி வேலைசெய்யக் கூடாது.  

4. இரவு உறக்கம் அவசியம் 
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் வரவில்லை என்றாலும் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்.  

5. மன அமைதி அவசியம் 
மனதை கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், எரிச்சல், கர்வம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

இந்த 5 விசயங்களை சரி செய்யும் போதே உடல் பாதி குணமாகிவிடும். மீதியை ரெய்கி சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். 

நேர்மறை ஆற்றல்களை பெற


ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை உணவின் மூலமாகவும். வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீக பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆற்றல் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது என்று முன்னரே பார்த்தோம். அந்த ஆற்றல்களை நாம் சேகரித்துக் கொள்ள சில வழிமுறைகளை பார்ப்போம்.

உணவின் மூலமாக ஆற்றல்களை பெற
எளிதாக உடலால் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டால் உடல் சுயமாகவே நல்ல ஆற்றல்களை உற்பத்தி செய்துக் கொள்ளும். மேலும் நாம் உட்கொள்ளும் உணவானது மனதுக்கும், கண்களுக்கும், நாவுக்கும் விருப்பமானதாக இருக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதன் மூலமாக பிரபஞ்ச ஆற்றலை அதிகமாக உடலில் சேகரிக்கலாம். காய்கறிகளின் ஆற்றல் அவற்றை சமைக்கும் போது குறைந்து போகலாம் அல்லது சிதைந்து போகலாம். ஆனால் பழங்களில் இருக்கும் ஆற்றல்கள் மட்டும் மனிதர்களுக்கு முழுமையாக கிடைக்கும், காரணம் பழங்களை சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். பழங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக உடலில் அதிகபடியான ஆற்றல்களை சேகரிப்பது மட்டுமின்றி நோய்களையும் குணப்படுத்தலாம்.

இயற்கையிலிருந்து ஆற்றல்களை பெற
இயற்கையான தூய காற்றை சுவாசிக்கும் போது அவற்றில் கலந்திருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களை உடல் கிரகித்துக் கொள்ளும். காடு, மலை, குகை, புல்வெளி, போன்ற இடங்களுக்கு சென்று வெறும் காலில் செருப்பில்லாமல் நடக்கும்போது உடல் அந்த நிலத்தில் இருந்தும், காற்றில் இருந்தும், வெளியில் இருந்தும் பிரபஞ்ச ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும். கடல், ஆறு, குளம், குட்டை, போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளிக்கும் போது உடல் அவற்றில் இருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும். பஞ்சபூதங்களில் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, நிலம் போன்றவற்றில் உருவாகும் ஆற்றல்களையும் சுயமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை நம் உடலுக்கு உள்ளது. 

பயிற்சிகளின் மூலமாக ஆற்றல்களை பெற
மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம், தைச்சி, நோன்பு, வழிபாடுகள், தொழுகை, வணக்கங்கள் போன்றவற்றின் மூலமாகவும் உடல் பிரபஞ்ச ஆற்றல்களை கிரகித்தும் அவற்றை சீர் செய்தும் கொள்கிறது.