கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

இறையருள் புரிவான்

திருவிழாவிற்கு குழந்தையை அழைத்துச் செல்லும்போது, தகப்பன் குழந்தையின் கையை இறுகப் பற்றிக்கொள்வான். குழந்தை அதை ஒரு தடையாக எண்ணும், தான் நினைத்தவாறு விரும்பியவாறு ஓட முடியவில்லை, தான் விரும்பியவற்றை அனுபவிக்க முடியவில்லை என்று வருந்தும். தகப்பன் தன் கையை பிடித்திருப்பது தனது நலன் கருதி என்பதை குழந்தை உணராது.

திருவிழாவில் தொலைந்துவிடாமல் பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக தகப்பன் குழந்தையின் கையை பிடித்திருப்பதைப் போன்று, நாம் இந்த உலக மாயையில் தொலைந்துவிடாமல் இருப்பதற்காக இறைவன் நம் கரத்தை பற்றி இருக்கிறான்.

எனக்கு சுதந்திரமில்லை, என்னால் அதை அடைய முடியவில்லை, இதை அடையமுடியவில்லை, எனக்கு இது கிடைக்கவில்லை, அது நடக்கவில்லை, நான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிவதில்லை என்று புலம்புகின்றோம். நமது கரத்தை பற்றிருப்பது யார் என்று உணராமல். என்றோ செய்த நல்வினைகளினால் இறைவன் உங்களை பாதுகாக்கின்றான் ஆனால் மாயையில் மயங்கி அதை குறை அல்லது பலகீனம் என்று எண்ணுகிறீர்கள்.

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இந்த உலகையே உங்கள் காலடிக்குள் அடங்கிவிடும் கரங்களுக்குச் சொந்தக்காரன், உங்களின் அற்ப ஆசைகளை நிறைவேற்ற மாட்டானா? உங்களின் சொந்த முயற்சியால் நடக்க வேண்டும் என்று எண்ணாமல், உங்களைப் பற்றிருப்பவனிடம், பற்றுடன் பணிவுடன் இறைஞ்சுங்கள், உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏன் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன?

மனிதப் பிறவிக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மற்ற எந்த உயிரினத்துக்கும் தன் வாழ்க்கையைத் தனது விருப்பம் போல் வாழும் உரிமை கிடையாது. தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மற்ற உயிரினங்களுக்கு கிடையாது.

மனிதனுக்கு மட்டும் தன் வாழ்க்கையை தனது விருப்பம் போல் வாழும் உரிமையுள்ளதால்; அவன் வாழும் காலங்களில் பல தவறுகளைச் செய்கிறான். இந்த உலக வாழ்க்கையும் மனித பிறப்பும் ஆன்மாவுக்குப் பயிற்சியாக இருப்பதனால்; அவன் செய்த தவறுகளைத் திருத்துவதற்காக அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன.

இந்த வாழ்க்கை அனுதினமும் மாறிக்கொண்டிருக்கிறது

இந்த வாழ்க்கை அனுதினமும் மாறிக்கொண்டிருக்கிறது
மனிதர்களுக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், வசதியாகவும், வாழ்வதற்கும் முதல் தடையாக இருப்பது அவர்களின் மனதில் பதிந்துவிட்ட முன்முடிவுகளே. பெற்றோர்களின் சில நடவடிக்கைகளை வைத்து என் பெற்றோர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று பிள்ளைகளின் மனதில் ஒரு பதிவு உருவாகிறது. பிள்ளைகளின் சில செயல்களை வைத்து என் பிள்ளைகள் இவ்வாறானவர்கள் என்று பெற்றோர்களின் மனதில் ஒரு பதிவு உருவாகிறது.

கணவன் மனைவியிடத்திலும், மனைவி கணவனிடத்திலும், காணும் சில குறை நிறைகளை வைத்து அவர் அப்படிதான் என்று சில பதிவுகளை மனதினுள் உருவாக்குகிறார்கள். சிறு வயது முதலே சில உறவினர்களின் நடவடிக்கைகளையும் செயல்களையும் வைத்து உறவினர்கள் அனைவரும் இந்த குணாதிசயம் உடையவர்கள் அல்லது அந்த குணாதிசயம் உடையவர்கள் என்று மனதினுள் பதிவுகளை உருவாக்குகிறார்கள்.

நாளிதழ்களிலும், பத்திரிக்கைகளிலும், திரைப்படங்களிலும் காட்டப்படும் செய்திகளை வைத்து இந்த சமுதாயம் இப்படிப்பட்டதுதான் என்று ஒரு பதிவை மனதுக்குள் உருவாக்குகிறார்கள். இவ்வாறு சிறுவயது முதலாக மனதுக்குள் உருவாகும் சிறு சிறு பதிவுகளே பின் நாட்களில் பலரது வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பெரும் தடையாக அமைகிறது.

சொந்தங்களுடனும், உறவுகளுடனும், நட்புகளுடனும் பழகுவதற்கு முன்பாக மனதுக்குள் ஒரு முன்முடிவினை வைத்துக்கொண்டு. அந்த பதிவின் கண்ணோட்டத்திலிருந்து அவர்களைப் பார்க்கப் பழகிக் கொண்டோம். அதைப்போல் செயல்களைச் செய்வதற்கு முன்பாகவும், காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவும் மனதினில் இருக்கும் பதிவுகளை வைத்து, அந்த செயல் நடக்கும், நடக்காது, வெற்றி பெரும், தோல்வியடையும் என்று ஏதாவது ஒரு முன் முடிவுகளை உருவாக்கி வைத்துக் கொள்கிறோம்.

நேற்று நல்லவராக இருந்த ஒருவர் இன்று தீயவராக இருக்கலாம். நேற்று தீயவராக இருந்த ஒருவர் இன்று நல்லவராக இருக்கலாம். நேற்றைய உறவு இன்று பகையாகலாம், இன்றைய பகை நாளை நட்பாகலாம் . நேற்று போற்றிய உலகம் இன்று தூற்றலாம், நாளை மீண்டும் பாராட்டலாம். நேற்று உங்களால் இயலாத ஒரு காரியம் இன்று உங்களுக்கு இயன்றதாக இருக்கலாம். நேற்று தோல்வியைத் தந்த அதே முயற்சி இன்று வெற்றியைத் தரலாம்.

இந்த வாழ்க்கை அனுதினமும் மாறிக்கொண்டிருக்கிறது. நேற்று பார்த்த உலகம் இன்று இருப்பதில்லை, அது கடந்து சென்றுவிட்டது. நேற்று பார்த்த மனிதர்கள் இன்று இல்லை, அவர்களும் கடந்து சென்றுவிட்டார்கள். உங்கள் வாழ்க்கையில் எதையுமே நீங்கள் இரண்டு முறைகள் சந்திக்க முடியாது, வெற்றியோ தோல்வியோ , இன்பமோ, துன்பமோ, நேற்று நீங்கள் அனுபவித்தவை வேறு, இன்று அனுபவிப்பவை வேறு, நாளை அனுபவிக்கப் போகின்றவை வேறு.

ஜென் தத்துவம் சொல்கிறது “ஒரே ஆற்றில் இரண்டு முறை யாராலும் குளிக்க முடியாது” என்று. காரணம் ஆறு ஓடிக்கொண்டிருப்பதால் நீங்கள் வலது காலை நினைக்கும் போது இருந்த ஆறு இடது காலை நினைக்கும் போது இருக்காது, அது கடந்து சென்றுவிடும்.

அதைப் போன்றதுதான் வாழ்க்கை, நேற்று என்று நீங்கள் நினைக்கும் அனைத்துமே கடந்து சென்றுவிட்டவை, அவை மீண்டும் திரும்பமாட்டா. அதனால் கடந்த காலத்தை வைத்தும் முன் முடிவுகளை வைத்தும் உங்கள் நிகழ் காலத்தை இடைப் போடாதீர்கள்.

ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், ஒரு செயலை செய்யும் போதும், மனிதர்களுடன் பழகும் போதும் நேற்றைய அனுபவங்களைக் கொண்டு இடைப் போடாதீர்கள். மனதில் இருக்கும் கடந்த கால நினைவுகளைக் கொண்டு முன்முடிவுகளுடன் இருப்பதுதான், பல உறவுகளும் பல முயற்சிகளும் தோல்வி அடைவதற்குக் காரணமாக இருக்கிறது. நேற்று என்பவை வெறும் அனுபவங்கள் மட்டுமே அவை, இன்றைய வாழ்க்கையையே, நாளைய வாழ்க்கையையே நிர்ணயிக்கக் கூடாது.

நாம் கண் விழிக்கும் ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதியது, ஒவ்வொரு நிமிடமும் புதியது. ஒவ்வொரு நாளையும் புதிதாகத் தொடங்குங்கள், இனி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான நாளாக அமையும்.

எந்த சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முன்முடிவுகளை உருவாக்காதீர்கள்

எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த விசயம் இப்படித்தான் நடக்கும், இந்த நோய் இப்படித்தான் குணமாகும், இந்தப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு, இதுதான் உண்மை, இதுதான் பொய், என்று எந்த ஒரு முன்முடிவுக்கும் வராதீர்கள்.

இந்த உலக வாழ்க்கை விசித்திரமானது, எது உண்மை? எது பொய்? எது எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்? எப்போது தீர்வு கிடைக்கும்? என்பனப் பற்றி எதுவும் யாருக்கும் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட காலகட்டம் வரும்போது எல்லாம் சாதகமாக நடக்கும் என்பது மட்டும் உறுதி. ஒவ்வொரு விதைக்கும் அது முளைத்து துளிர்விடும் கால அளவு உள்ளது. அதைப்போன்றே ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு கால அளவு இருக்கும். அந்த கால அளவில் அது மாறும், அதற்கான தீர்வும் கிடைக்கும்.

நம் மனதில் ஏற்கனவே முன்முடிவு இருந்தால், நம் வாழ்க்கையில் நடப்பவை மனதின் பதிவுகளுக்கு ஏற்பவே நடக்கும். சரியாக, எளிதாக, நடக்க வேண்டிய விசயங்கள் கூட நம் மன பதிவுகளால் தவறாக, தாமதமாக, குழப்பத்துடன் நடக்கலாம்.

உதாரணத்துக்கு ஜோதிடத்தை எடுத்துக்கொள்வோம். ஜோதிடம் ஒரு உயரிய வானியல் கணிதம். ஒரு மனிதனின் வாழ்க்கையை துல்லியமாக கணிக்கக் கூடியது. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில், துல்லியமாக ஜோதிடம் சொல்லக்கூடிய மனிதர்கள் மிகக்குறைவு. ஒரு ஜோதிடர் தவறாக ஆருடம் கூறிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதை நம்புபவர்களுக்கு அவர்கள் நம்பும் விசயங்கள் அப்படியே நடக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவருக்கு நல்ல விசயங்கள் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும், ஜோதிடர் கூறியதால் எனக்கு நல்லவை நடக்காது என்று அவர் நம்பிக்கைக் கொண்டாலும், ஒருவருக்கு தீய விசயங்கள் நடக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்தும் ஜோதிடர் கூறியதால், அவர் எனக்கு தீய விசயங்கள் நடக்கும் என்று நம்பினாலும் இரண்டு முன் முடிவுகளும் அவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இதனால் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் ஜோதிடம் பார்ப்பது தடைசெய்யப்பட்டது.

ஒருவரின் மனதில் நான் வெளிநாட்டுக்குச் சென்று உழைத்தால் தான் செல்வந்தனாவேன் என்று முன் முடிவு இருந்தால்; உள்ளூரில் எவ்வளவு உழைப்பைப் போட்டாலும் அவருக்கு போதிய செல்வத்தையும் வெற்றியையும் அது தராது. ஒருவர் பெரிய மருத்துவமனையில் மருத்துவம் செய்தால் தான் எனது நோய்கள் குணமாகும் என்று முன்முடிவை வைத்திருந்தால். எவ்வளவு நல்ல மருந்தை உட்கொண்டாலும் சரியான மருத்துவம் செய்தாலும் அவரது நோய்கள் குணமாகாது.

இன்றைய காலகட்டத்தில் கொரானோ வைரஸ் பரவி அதனால் நோய்கள் உண்டாகும் மனிதர்களில் பெரும்பாலோனோருக்கு உண்மையான நோய் கிடையாது. ஆனால் நான் இருக்கும் ஊரில் கொரானோ வைரஸ் பரவுவதாகச் சொல்கிறார்களே, அது எனக்கும் வந்துவிடும், என்ற முன்முடிவும் அச்சமும், அவர்களின் உடலில் நோய்களையும் நோய்க் கிருமியையும் வளரச்செய்கிறது. இது அவர்களின் மனம் சுயமாக உருவாக்கிய நோய்.

மனதில் ஒரு முன்முடிவு உருவாகிவிட்டால் அந்த எண்ணம் அனைத்து சூழ்நிலைகளில் மீதும் ஆதிக்கம் செலுத்தும். விதியையும் மதியையும் கட்டுப்படுத்தும். துரதிருஷ்டவசமாக மனமானது நல்ல விசயங்களை எளிதில் நம்பாது; ஆனால் கெட்ட விசயங்களை ஏன்? எதற்கு? என்று மறு கேள்விகள் கேட்காமல் உடனே நம்பிவிடும்.

நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட வயதில் தான் எனக்கு நல்லது நடக்கும், இந்த இடத்துக்குச் சென்றால்தான் எனக்கு நல்லது நடக்கும், இவரின் மறைவுக்கு பிறகுதான் எனக்கு நல்லது நடக்கும், இதைச் செய்தால்தான் எனக்கு நல்லது நடக்கும், இவரால் தான் நான் முன்னேற முடியவில்லை, என்பனப் போன்ற பல முன்முடிவுகளை வைத்திருக்கிறோம். அந்த முன்முடிவுகளே நமக்கு பல நல்ல விசயங்கள் நம் வாழ்க்கையில் நடக்கவிடாமல் தடுக்கின்றன. பல நல்ல விசயங்கள் நமக்கு கிடைக்கவிடாமலும் தடுக்கின்றன.

ஒரு குழந்தையைப் போன்று எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் மனதை வெற்று காகிதம் போன்று வைத்திருந்தால், நமது உழைப்புக்கும், நமது முயற்சிக்கும், ஏற்ப நல்ல விசயங்கள் தானாக நம்மைத் தேடிவரும்.


உங்கள் குழந்தைகளுக்கு வாழ்வதற்கு கற்றுக் கொடுங்கள்!

உங்கள் குழந்தைகள் இந்த உலகத்தில் சான்றோராக வாழ வேண்டுமா? இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் மனிதர்களையும் புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? ஆம் என்ற பதில் உங்களிடம் இருந்தால்; இந்த பத்து விசயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

1. பசி உண்டான பிறகு உணவை உட்கொள்ள பழக்குங்கள். பசி உண்டானால் பசியின் தன்மை மற்றும் பசியின் அளவை அறிந்து சாப்பிட கற்றுக் கொடுங்கள். பசி இல்லையென்றால் எனக்கு உணவு வேண்டாம் என்று தைரியமாக சொல்ல பழக்குங்கள்.

2. கேள்விகள் கேட்க ஊக்குவியுங்கள். யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? எதனால்? அதன் நோக்கம் மற்றும் விளைவு என்ன? என்று கேள்விகள் கேட்கச் சொல்லுங்கள். கேள்வி கேட்காமல் எதையும் நம்பக் கூடாது என்று பழக்குங்கள்.

3. வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். நீங்களும் உடன் அமர்ந்து பயனுள்ள எதையாவது வாசியுங்கள்.

தமிழ் வாசிக்க கற்றுக்கொடுங்கள். தமிழில் தான் உலகின் அனைத்து இரகசியங்களும் ஞானங்களும் உள்ளன. இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் அவசியம் தேவைப்படும்.

4. செல்வத்தின் அவசியத்தை புரியவையுங்கள். இந்த உலகில் வாழ்வதற்கு பணம் மிகவும் அவசியம் என்பதை விளக்குங்கள். அதே நேரத்தில் பணம் சேர்ப்பதற்காக மனிதப் பிறப்பு எடுக்கவில்லை என்பதையும் புரியவையுங்கள்.

5. நம் எண்ணப்படிதான் நம் வாழ்க்கை இருக்கும், அதனால் வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால், மனதை வளமாக வைத்திருக்க வேண்டும் என்பதை புரியவையுங்கள். மனதில் எப்போதும் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும் தீயனவற்றை விளக்க வேண்டும்.

6. இந்த உலகில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது. அதனால் எதற்கும் களங்க வேண்டாம் அனைத்தும் நிச்சயமாக மாறும் என்று கூறுங்கள்.

7. அன்பை அறிமுகப்படுத்துங்கள். மனிதர்களை அறிமுகப்படுத்துங்கள். உறவுகளை பேண கற்றுக்கொடுங்கள். உறவுகளின் முக்கியத்துவத்தை விளக்குங்கள்.

8. இயற்கையை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். புற்கள் முதலிய, மரங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள், பூமி, கிரகங்கள், அனைத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

9. உங்கள் குழந்தைகளை சிந்திக்க தூண்டுங்கள். சுயமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். அவர்களுக்கு எது தேவை என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

10. தானமும் தர்மமும் செய்ய பழகுங்கள். தர்மங்கள் கொடுக்கும் போது அவர்களின் கைகளால் கொடுக்கப் பழகுங்கள்.

நீங்கள் வாழ்ந்துக் காட்டும் வழியிலும், நீங்கள் கற்றுக் கொடுக்கும் பழக்க வழக்கங்களையும் கொண்டும் தான் உங்கள் பிள்ளைகள் தங்களின் எதிர்கால வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் வையுங்கள். பள்ளிப் பாடங்கள் மட்டும் ஒருவனை சிறப்பாக வாழ வைக்காது.

ஏறதாள 7 வருடங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் குணங்கள் மாற்றம் அடையும். முதல் ஏழு வருட அனுபவங்களை கொண்டு எட்டாவது வருடம் முதல் வாழ்வார்கள். அடுத்த 7 வருடம் அனுபவங்களைக் கொண்டு 14 ஆவது வருடம் முதல் வாழ்வார்கள். மனதின் இந்த மாற்றம் இருதிவரையில் தொடர்ச்சியாக நடக்கும். மனப் பதிவுகள் சரியாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக சில குறிப்புகள்வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். இந்தக் காணொளியில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் வாழ்க்கையில் அனைத்து வகையான தடங்கல்களும் நீங்கி, எல்லா நல்ல விசயங்களும் உங்களை நாடிவரும்.

நமது தேவைகளை நிறைவேற்ற பிரபஞ்சம் காத்திருக்கிறது.

மனிதன் விரும்பும் அனைத்தும் அவனுக்குக் கிடைக்குமா? அவனது ஆசைகள் நிறைவேற அவன் ஏதாவது செய்ய வேண்டுமா? கடவுளும் இயற்கையும் எந்த வகையில் மனிதனுக்கு உதவுவார்கள்? இவ்வாறான  கேள்விகளுக்கு விளக்கம் புரிய ஒரு உதாரணம் கூறுகிறேன்.

ஒரு விவசாயி கால நேரம் கருதாமல் கடுமையாக உழைப்பதின் நோக்கமென்ன? அவரின் தேவையென்ன? ஒரு விவசாயியின் மிகப்பெரிய ஆசை போதிய விளைச்சல் மட்டும்தானே?. அவர் ஆசைப்பட்டதைப் போலவே வயல் முழுவதும் நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவை நிறைவேறுகிறது.

அந்த விளைச்சலை உண்டாக்க, நேரடியாக அந்த நெற்கதிர்களுக்கு அவர் எதையாவது செய்தாரா? அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா? எதுவும் கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவாகிறது.

அப்படியென்றால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவும் செய்யவில்லையா? என்றால்... செய்யாமல் எப்படி இருப்பார்? கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளைத் தூவினார், தேவைப்படும்போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரம் போட்டார், களை எடுத்தார், நெற்பயிர்கள் உருவாகத்  தேவையான சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துத் தந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்தது, அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதுதான் மனித வாழ்க்கை.

மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் பிரபஞ்சம் வழங்கும். அவனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு.  ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரம் மனிதனுக்குக் கிடையாது. மனிதன் எதற்காக உழைக்கின்றானோ, அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ, கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் பிரபஞ்சம் உதவி செய்யும், அது நிச்சயமாக  வழங்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும்  கடவுளும், இயற்கையும் குறுக்கிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்குத் தேவையானவற்றை தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இரகசியத்தைப் புரிந்துக் கொள்ளாமல் ஆசைகளை மட்டும் உருவாக்கிக் கொள்வதில் எந்த பயனுமில்லை. உங்களின் தேவைகள்  நிறைவேற, உங்களால் இயன்ற உழைப்பை மட்டும் வழங்குங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். நீங்கள் நினைத்தவை நிச்சயம் நிறைவேறும்.

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.


எண்ணம் போல் வாழ்க்கை, முதலில் எண்ணத்தை மாற்றுவோம்.

எண்ணம் போல் வாழ்க்கை என்பது சான்றோர் வாக்கு. நமது மனதில் உண்டாகும் எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதை நம் முன்னோர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திச்  சென்றனர். நல்ல எண்ணங்கள் என்று கூறும்போது பெரும்பாலும் செயற்கையாக, நல்ல விஷயங்களை நினைத்துப் பார்க்கச் சொல்வார்கள். ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எண்ணம் வேறு, சிந்தனை வேறு.

நாமாக ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பது சிந்தனையே ஒழிய, எண்ணம் அல்ல. எண்ணங்கள் என்பவை நம் மனதில் ஏற்கனவே பதிந்திருக்கும் பதிவுகளினால் சுயமாக உருவாகுபவை. எண்ணங்களை யாராலும் உருவாக்க முடியாது. நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டுமென்றால் மனதினில் நல்ல பதிவுகளைப் பதிய வேண்டும்.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் நமது ஐம்பொறிகளான பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, மற்றும் உணர்வின், மூலமாக நமது மனப் பதிவுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நல்ல விஷயங்களை விட, தீய விஷயங்களே அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான, கெட்ட விசயங்களும், நம் வாழ்க்கைக்கு  எந்தப் பயனும் தராத தீய விசயங்களும் நம் மனதுக்குள் பதியப்படுகின்றன.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; 
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே;
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; 
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
ஒளவையார், மூதுரை

நல்ல மனிதர்களுடனான தொடர்பு மிகவும் பயனானது என்பதை இந்தப் பாடலின் மூலமாக ஒளவையார் உணர்த்துகிறார். அவர் பாடிய இந்தப் பாடலை எதிர்ப்பதமாக எடுத்துக்கொண்டால் தீய மனிதர்களுடன் எந்த வகையான தொடர்பு வைத்திருந்தாலும் அது நமக்குக் கெடுதலையே செய்யும் என்பது புரியும்.

முடியாது, நடக்காது, கிடைக்காது, போன்றவற்றை எதிர்மறை வார்த்தைகள் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நமது மனநிலையை மாற்றக்கூடிய அனைத்துமே எதிர்மறை வார்த்தைகள்தான். நமது மனதின் பதிவுகளைப் பாதிக்கக்கூடிய அல்லது தவறான பதிவுகளை உண்டாக்கக்கூடிய அனைத்துமே தீய விஷயங்கள் தான். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான, கெட்ட விஷயங்கள் நம்மை வந்தடைகின்றன.

நமது மனப் பதிவுகளை மாற்ற வேண்டுமானால், முதலில் நல்ல பதிவுகளை உருவாக்க வேண்டும். பழைய பதிவுகளை அழிப்பது கடினம். ஆனால் புதிய பதிவுகளை நல்லவையாக ஆக்கிக் கொண்டால் பழைய பதிவுகள் செயலிழந்துவிடும்.

ஒரு பதிவை வாசித்து, பின்பு அது நன்மையானதா? தீமையானதா? அது நமக்கு எந்த வகையிலாவது நன்மையானதாக   இருக்குமா? என்பதை ஆராய்வதை விடவும், அவற்றை வாசிக்காமல் விடுவதே சிறந்ததாகும். தவறான பதிவுகளைப் பகிரும் நண்பர்களின் உறவை முதலில் தவிர்த்துக் கொள்ளுங்கள். தவறான விசயங்களை பதியும், பரப்பும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்களில் இருந்து வெளியேறி விடுங்கள். நீங்கள் எந்தத் தவறான மற்றும் எதிர்மறை விஷயங்களையும் பகிராதீர்கள். எதிர்மறை விசயங்களைக் காட்டும் மற்றும் பரப்பும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், இணையப்பக்கம் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எவையெல்லாம் தவறான விஷயம் அல்லது எதிர்மறையான செய்திகள் மற்றும் விஷயங்கள் என்றால், எவையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புவீர்களோ அவையெல்லாம் தீய விஷயங்கள். அவற்றைப் பரப்பும் மற்றும் நினைவுபடுத்தும் அத்தனை விஷயங்களையும் விட்டு விலகியிருங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.


இந்த உலகில் ஏற்படும் மரணத்தின் நோக்கம் என்ன?

இந்த உலகில் மரணம் அடையாதவர்கள் எவருமில்லை என்று எல்லோருக்கும் தெரியும். அனைவரையும் மரணம் நிச்சயமாக அடைந்தே தீரும் என்றும் எல்லோருக்கும் தெரியும். நமக்கு முன்னோரும் போய்விட்டார்கள், நமக்கு பின்னோரும் வந்து விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், யாரும் மரணமடைய விரும்புவதில்லை.

மரணத்தை பற்றிய ஒரு மாயையும், பயமும் எல்லோருக்கும் உண்டு. மரணம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு வகையான அச்ச உணர்வு பலரை கவ்விக் கொள்கிறது. அதுவும் ஒரு மருத்துவர் வாயிலிருந்து மரணம் என்ற வார்த்தை வெளிவரும் போது கடவுளே சொல்லிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. எமன் நம் முன்னே நின்றுக் கொண்டு வா வா என்று அழைப்பதைப் போன்ற ஒரு மாயை பலருக்கு உருவாகிவிடுகிறது.

குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு.

திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார். ஒருவன் காலையில் விழித்தெழுவதைப் போன்றது பிறப்பு, இரவு மீண்டும் உறங்குவதைப் போன்றது மரணம். மரணத்தை ஏன் உறக்கத்தோடு தொடர்புபடுத்தி கூறுகிறார் என்றால், நாம் ஒரு முறை மட்டுமே உறங்குவதில்லை, அனுதினமும் உறங்குகிறோம் மறுநாள் மீண்டும் எழுகிறோம். விழித்தெழும் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உறங்கச் செல்வார்கள்.

அந்த சுழற்சியைப் போன்றே பிறந்த அனைவரும் ஒரு காலத் தவணையில் மரணமடைவார்கள். அவர்கள் ஒரு காலத் தவணைக்குப் பிறகு மீண்டும் பிறந்து வருவார்கள். மற்றுமொரு குறளில் இப்படிக் கூறுகிறார்.

குறள் 338:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே, உடம்பொடு உயிரிடை நட்பு.

உடலுக்கும், உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும், பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றது தான் என்கிறார். ஒரு முட்டை முழுமையாக வளர்ச்சி அடையும் போது, அது குஞ்சாக வெளிவருகிறது. அதைப் போன்றே மனித உயிரானது தனக்கான பயிற்சி காலத்தில் முதிர்ச்சி பெறும்போது, அது மேன்மையான அடுத்த பிறப்புக்குச் செல்வதற்காக உடலை விட்டுப் பிரிகிறது. முட்டை ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான், அதனால் பறவையாக பறக்க முடியும். அதைப்போலவே உடம்பெனும் இந்தக் கூட்டை விட்டு வெளியில் பறந்தால் தான், அந்த ஆன்மா அடுத்த மேன்மையான வாழ்க்கையை அனுபவம் செய்ய முடியும்.

ஆகையால் மரணமென்பது பயப்பட வேண்டிய விசயமோ, கொடுமையான விசயமோ அல்ல. மரணம் என்பது மனிதனின் உயிர் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் ஒரு முன்னேற்றம் அல்லது பழைய நோய்வாய்ப்பட்ட, பலகீனமான உடலைத் துறந்து, புதிய ஆரோக்கியமான உடலை அடையும் அழகான நகர்வு மட்டுமே.

உடல் தளர்ந்து விழுவதற்கு முன்பாக, முதுமை முடிவைத் தருவதற்கு முன்பாக, எமன் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக, நீங்களாக மனமுவந்து உயிரைத் துறக்க தயாராக இருங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். மரணம் அமைதியானதாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.

நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்கிறோம் என்பதை இறுதிவரை உணராமல் வாழ்கிறோம்!


என்னிடம் அது இல்லை இது இல்லை என்ற புலம்புவது நிறுத்திவிட்டு. என்னிடம் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்து வாழுங்கள். அப்போது புரியும் உங்கள் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது.