கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label ரெய்கி. Show all posts
Showing posts with label ரெய்கி. Show all posts

மனித உடலில் சக்ராக்கள் என்பது என்ன?

மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் அமைந்துள்ளன. அவற்றை சக்ரா என்று அழைப்பார்கள். சக்ரா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சக்கரம் அல்லது சுழல்வது என்று பொருளாகும். மனித உடலில் அமைந்திருக்கும் இந்த சக்தி மையங்கள் எப்போதும் சுழன்றுக் கொண்டே இருக்கும் தன்மையுடையவை. ஆற்றல்களை உருவாக்குவதும் அதன் தொடர்புடைய பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பதும் இவற்றின் வேலையாகும்.

இந்த சக்கரங்களில் ஏற்படும் குறைபாடுகளும், சத்தி தட்டுப்பாடுகளும் அதன் தொடர்புடைய உறுப்புகளில் நோய்களையும், அதன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மனித வாழ்க்கையில் சில சிக்கல்களையும் உருவாக்குகின்றன.

சக்ராக்கள் உடலளவில் மட்டுமின்றி சக்தி நிலையிலும் மனிதர்களுக்கு பலவகையில் உதவியாக இருக்கின்றன. உடலின் சக்ராக்களை சரி செய்வதம் மூலமாக மனிதர்களின் அனைத்து வகையான நோய்களையும். வாழ்க்கையின் அனைத்து வகையான துன்ப துயரங்களையும் களைய வாய்ப்பிருக்கிறது.

(மனிதர்களின் ஏழு சக்கரங்களும் அவற்றின் அமைவிடமும்)

1. மூலாதாரம் - முதுகெலும்பின் ஆக கடைசியில் வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.

2. சுவாதிஸ்தானம் - தொப்புளிலிருந்து இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது.

3. மணிபூரகம் - தொப்புளுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது.

4. அனாகதம் - நெஞ்சு பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

5. விசுத்தி - கழுத்தில் தொண்டை குழியின் பின் அமைந்துள்ளது.

6. ஆக்ஞை - இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது.

7. சஹஸ்ராரம் - உச்சந்தலையின் மேற்புறம். தலையிலிருந்து ஒரு அங்குலம் மேலே அமைந்துள்ளது.


ரெய்கி ஹீலர்களின் விவரங்கள்Healers  List
https://www.reikitamil.com/p/healers.html

ரெய்கி சின்னம் (Symbol) சோ-கு-ரேய் (Cho-Ku Rei

ரெய்கியில் பல சின்னங்கள் பயன்படுத்தப் பட்டாலும். சோ-கு ரேய் (Cho-Ku Rei) என்ற சின்னம் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சோ-கு ரேய் என்பதை பிரபஞ்ச ஆற்றலே ஒன்று கூடுங்கள் என்று மொழிபெயர்க்கலாம். ஹோலிஸ்டிக் ரெய்கியில் ரெய்கி சின்னங்கள் இல்லாமலேயே நோய்களை குணப்படுத்தலாம் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனாலும் ரெய்கி சின்னத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது தானே.


சோ-கு ரேய் (Cho-Ku Rei) சின்னம் 1 (உருவாக்க)


சோ-கு ரேய் (Cho-Ku Rei) சின்னம் 2 (குறைக்க)

சின்னங்களை பயன்படுத்தும் வழிமுறைகள்
இந்த சின்னங்களை இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். பிரபஞ்ச சக்தியை ஒன்று திரட்ட, அனுப்ப முதல் படத்தில் உள்ளது  போலவும்,பிரபஞ்ச ஆற்றலை வெளியேற்ற மற்றும் குறைக்க இரண்டாவது படத்தில் உள்ளது போலவும் வரையலாம்.

சிகிச்சை செய்பவர் அவரின் இரு உள்ளங்கைகளில் இந்த சின்னத்தை ஆட்காட்டி விரலால் வரைந்துப் பின் இரு உள்ளங்கைகளையும் சிகிச்சைத்  தேவைப்படும் நபரை நோக்கியோ, இடத்தை நோக்கியோ, பொருளை நோக்கியோ காட்டலாம். நெடுந்தூர சிகிச்சைக்கும் சின்னத்தைப் பயன்படுத்தலாம்.

ஆற்றல் குறைபாட்டால் தொந்தரவுகள் உருவாகும் போது முதல் சின்னத்தையும், ஆற்றல் அதிகமாகி தொந்தரவுகள் உருவானால் இரண்டாவது சின்னத்தையும் பயன்படுத்தலாம். இந்த சின்னங்களை வரைய படங்களில் எண்களின் வழிகாட்டுதலின்படி 1 என்ற எண்ணில் தொடங்கி 5 என்ற எண்ணில் முடிய வேண்டும்.

ஹோலிஸ்டிக் ரெய்கியினால் அடையக் கூடிய நன்மைகள்


முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, ரெய்கியை பயிற்சி செய்யும்போது தனி நபர் வாழ்க்கையில் அடையக்கூடிய நன்மைகள்.

1. மனம் எப்போதும் அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும்.

2. புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த விசயத்தையும் எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

3. ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தற்போது நோய்கள் கண்டவராக இருந்தால் அவர்களின் நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும்.

4. செல்வம் சேர்ப்பது எளிதாக இருக்கும்.

5. குடும்பத்தாரிடமும், சமுதாயத்திடமும் அவரின் மரியாதையும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

6. முகம் வெளிச்சமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

7. ஆண்மை, பெண்மை ஆற்றல் அதிகரிக்கும். இல்லற வாழ்க்கையில் திருப்தி கிடைக்கும்.

8. பிரபஞ்சத்திடமிருந்து வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

9. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மேம்படும்.

10. ஆரா தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

11. தீய சக்திகளும், செய்வினைகளும் எளிதில் நெருங்க முடியாது.

12. அவர்களை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தூய்மையாகிவிடும்.

13. ஆரோக்கியம் குறைவாக இருந்தால், விரைவாக குணமடைவார்கள்.

14. உடல் பலமாகவும் வீரியமாகவும் இருக்கும்.


முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, ரெய்கியை பயிற்சி செய்யும்போது குடும்பம், உறவுகள் மற்றும் சமுதாயத்தில் உண்டாகும் மாற்றங்கள்.

1. இந்த பூமியில் அவர்கள் செய்ய வேண்டியக் கடமைகள் எளிதில் புரிந்துவிடும்.

2. கணவன் மனைவிக்கிடையில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.

3. குடும்பத்தினர்கள் மத்தியில் அன்பும், உறவும் அதிகரிக்கும்.

4. பிள்ளைகள் உடனான உறவின் நெருக்கம் அதிகரிக்கும்.

5. நண்பர்களுக்கிடையில் மரியாதை கிடைக்கும், முக்கியத்துவம் வழங்கப்படும்.

6. வாடிக்கையாளர்கள் இவர்களுடன் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்வார்கள்.

7. சமுதாயத்தில் மதிக்கப்படுவார்கள், முக்கியத்துவம் வழங்கப்படும்.

8. விலங்குகளுடனும், தாவரங்களுடனும் நெருக்கம் உண்டாகும்.

9. இந்த பூமியில் நடந்துக் கொண்டிருக்கும் விசயங்களும், நடக்கப்போகும் விசயங்களும் இவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தப்படும்.


ஹோலிஸ்டி ரெய்கி

இன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய 64 வகையான ரெய்கி கலைகள் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒரு பிரபல்யமான ரெய்கி கலைதான் குண்டலினி ரெய்கி. இந்த ரெய்கி முறை மிகவும் எளிமையானது. ரெய்கி சின்னங்களோ, மந்திரங்களோ, சிக்கலான நடைமுறைகளோ எதுவுமே இல்லாமல் எளிமையாக பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்குவதின் மூலமாகவும்; குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் சக்கரத்துக்கு கொண்டுசெல்வதின் மூலமாகவும் நாம் நினைப்பதை அடையக்கூடிய மற்றும் செய்யக்கூடிய ரெய்கி முறையாகும்.

மனத் தூய்மையுடன் நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் போது இந்த ரெய்கி நல்ல பலனைத் தரும். கைகளை காட்டும் போதே எண்ணத்தில் நினைப்பதை செயல்படுத்தும் ஆற்றல் இந்த ரெய்கிக்கு உள்ளது. இந்த ரெய்கி முறையுடன் சிறிது உடலியல், வாழ்க்கை முறைகள், மற்றும் கர்ம கோட்பாடுகள் போன்றவற்றை இணைத்து நான் வடிவமைத்தக் கலை தான் ஹோலிஸ்டிக் ரெய்கி.

ஹோலிஸ்டிக் என்ற வார்த்தைக்கு “முழுமை” என்று பொருளாகும். ஹோலிஸ்டிக் ரெய்கிப் பயிற்சி, மனித வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளையும், சூழ்நிலைகளையும் உள்ளடக்கியிருப்பதால் இதற்கு “ஹோலிஸ்டிக் ரெய்கி” என்று பெயரிட்டுள்ளேன்.

ஹோலிஸ்டிக் ரெய்கி மனிதர்களின் வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், முழுமையான வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும். ஹோலிஸ்டிக் ரெய்கி, ஆற்றல், சக்தி, உடல், மனம், புத்தி, அலைகள், அதிர்வுகள், ஆன்மா, ஆன்மீகம் என பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மகிழ்ச்சியான மனித வாழ்க்கைக்கான முழுமையான தீர்வையும் கொடுக்கும்.

பிரபஞ்ச ஆற்றலுக்கு அறிமுகம்

பிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு அதிசயமான சக்தியோ, ஆச்சரியமான சக்தியோ, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ அல்ல. நீங்களும், நானும், மற்ற உயிர்களும், நம் கண்ணில் காணும் அனைத்து விசயங்களும், பிரபஞ்ச ஆற்றலிலிருந்து உருவானவைதான். அனைத்து படைப்புகளும், உயிரினங்களும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன. பிரபஞ்ச ஆற்றலானது, தான் இயங்கும் இடத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப உருவமும், செயலும், சக்தியும் அமையப்பெறுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நானும், இதை வாசிக்கும் நீங்களும், நீங்கள் வாசிக்கப் பயன்படுத்தும் கணினியும், கையடக்க தொலைப்பேசியும், பிரபஞ்ச ஆற்றலின் மாறுபட்ட உருவங்கள் தான். எளிமையாகச் சொல்வதானால் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் கண்களால் காணக்கூடிய மனிதனாகவும், விலங்குகளாகவும், தாவரங்களாகவும், கருவிகளாகவும் பரிமாணம் அடைந்திருக்கிறது. அந்த பரிமாணங்களைத் தான் நாம் நம் கண்களால் காண்கிறோம்.

பரஞ்சோதி மகான் அழகான ஒரு தத்துவத்தைக் குறிப்பிடுவார். “இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக இறைவனையன்றி எதுவுமே இல்லாததால், ஏதோ ஒன்றை எடுத்து இறைவன் அனைத்தையும் படைத்திருக்கிறான் என்பதல்ல. இறைவன் தன் சுயத்திலிருந்து அனைத்தையும் படைத்திருக்கிறான். நாம் காணும் அனைத்தும் இறைவனின் மறு உருவமாகவே இருக்கின்றன” என்பார்.

அதைப் போலவே இந்த பூமியில் எந்தப் படைப்பு உருவானாலும், அந்த படைப்பின் அடிப்படை, பிரபஞ்ச ஆற்றலாக இருப்பதினால் நாம் காணும் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலின் மறு உருவமாகவே இருக்கின்றன. மனிதர்களின் கைகளில் டார்ச் லைட் அடித்தால் அதன் வெளிச்சம் கையின் மறுபக்கம் தெரியும். இதற்குக் காரணம் மனிதன் திடமான அமைப்பைக் கொண்ட உருவமல்ல. பல கோடி நுண்ணிய செல்களின் தொகுப்புதான் மனிதன். அந்த செல்கள் உருவாக அடிப்படை ஆதாரமாக இருந்தவை பிரபஞ்ச ஆற்றல் தான். அந்த ஆற்றலைப் பற்றியும், அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும், அதனால் அடையக்கூடிய நன்மைகளைப் பற்றியும் புரிந்து மற்றும் உணர்ந்துக் கொள்வதுதான் நான் வழங்கும் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சியாகும்.

ராஜா முகமது காசிம்

கர்மா


கர்மா என்பது ஒரு சமஸ்கிருத சொல். அதன் மூலச்சொல் "கம்ம" இது புத்தர் பேசிய பாலி மொழி சொல். கர்மா என்றால் செயல் என்று அர்த்தம். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் செயல்களை கர்மா என்ற சொல் குறிக்கிறது. செய்த கர்மத்தினால் விளைந்த விளைவுகளை “ரிபக” என்று குறிப்பிடுவார்கள்.

ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் ஒவ்வொரு செயலும், அந்த செயலுக்கேற்ற விளைவை அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்கும். நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும், தீய செயல்களுக்கு தீய பலன்களும் விளையும் என்பதே கர்மா கோட்பாடாகும்.

கர்மா கோட்பாட்டை நாம் தினமும் செய்யும் ஒரு செயலை வைத்துப் புரிந்துக் கொள்வோம். நாம் அனுதினமும் உணவை உட்கொள்கிறோம். உணவை உட்கொண்ட பிறகு அவற்றின் எச்சில்கள் நம் கையில் ஒட்டிக் கொள்ளும் அல்லவா?. உண்ட உணவுக்கு ஏற்ப சுவையும், சத்தும், கழிவும் உடலில் உருவாகும் அல்லவா?. உணவை உட்கொண்டது ஒரு செயல் (கர்மா). அதனால் உருவான சுவை, சத்து, எச்சில் மற்றும் கழிவுகள் செயலின் விளைவுகள் (ரிபக).

எந்த வகையான உணவை நீங்கள் உட்கொண்டீர்கள் என்பதை வைத்து நீங்கள் எந்த வகையான சுவையை அனுபவிப்பீர்கள்? எந்த வகையான சத்துக்கள் கிடைக்கும்? எவ்வளவு கழிவுகள் உருவாகும்? என்பவை மாறுபடும்.

மனிதனின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் ஒரு விதையைப் போன்றது. ஒருநாள் அது கண்டிப்பாக துளிர்விட்டு முளைத்து புல்லாகவோ, செடியாகவோ, மரமாகவோ வளர்ந்து நிற்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஒவ்வொரு விதைக்கும் அது முளைக்கும் காலம் மாறுபடும். சில விதைகள் சில நாட்களில் முளைக்கும். சில விதைகள் சில வாரங்களில் முளைக்கும். சில விதைகள் சில மாதங்களில் முளைக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது, ஒவ்வொரு விதையும் கண்டிப்பாக முளைக்கும்.

அதைப் போலவே மனிதன் செய்த அல்லது செய்யும் செய்யல்களின் பலன்கள் அவனை வந்தடையும் கால அளவு மாறுபடலாம், ஆனால் வராமல் போகாது. அவன் அவன் செய்ததை அவன் அவன் அனுபவித்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். 

கர்மா கணக்கு

பாவ கணக்குகள் உள்ள ஒருவர், நன்மைகளை செய்து அவரின் பாவங்களை கழித்துக்கொள்ள முடியாது. ஒருவர் பற்பல நல்ல காரியங்களில் ஈடுபட்டாலும் அவர் செய்யும் தீய காரியங்களுக்கும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். உதாரணத்துக்கு ஒருவர் 10 நல்ல காரியங்களை செய்து 10 புண்ணியங்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே நபர் 5 தீய செயல்களை செய்து 5 பாவங்களை சேர்த்துக் கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் 10 நன்மைகளை கொண்டு அவர் செய்த 5 பாவங்களை கழித்துக் கொண்டு மீதம் 5 புண்ணியங்கள் மிஞ்சாது. 

அல்லது ஒரு நபர் 10 பாவங்களும் 10 புண்ணியங்களும் சேர்த்துக் கொண்டார் என்றால் இவை இரண்டையும் கழித்து கொள்ள முடியாது. கர்மா கோட்பாட்டில் கணிதம் கிடையாது. ஏன் ஒரு செயலை செய்தோம்? என்ற செயலின் நோக்கத்தின் அடிப்படையில்தான் அதன் பலன்கள் அமையும்.

ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது, துரோகம் செய்வது, கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற கெட்ட செயல்கள் மட்டுமே தீய கர்மாக்கள் அல்ல. ஆனால் மனதாலே செய்யும் தீங்கும், நன்மையான செயல்களை செய்ய விடாமல் தடுப்பது, மற்றும் மற்றவர்களின் மனதை வேதனைப் படுத்தக்கூடிய அனைத்து செயல்களும் தீய கர்மாக்கள் தான்.

ஒரு நபர் 10 புண்ணியங்களும் 10 பாவங்களும் செய்திருக்கிறார் என்றால் அவர் 10 நல்ல மகிழ்ச்சியான அனுபவங்களையும், 10 துன்பகரமான அனுபவங்களையும் அனுபவிப்பார். ஒரு மனிதர் செய்திருக்கும் பாவம் புண்ணியங்கள் அனைத்தையும் தனி தனியாக அனுபவித்தே தீர்க்க வேண்டும். எந்த பாவ மன்னிப்பும், பரிகாரமும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

கர்மா என்பது பாவ புண்ணியங்களையும் தாண்டி அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அனைத்து விசயங்களும் கர்மாக்கள்தான். உதாரணத்திற்கு நாம் உண்ணுவதும் பருகுவதும் கர்மாக்கள்தான். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ன அருந்துகிறோம் என்பதை வைத்து உடலிலும் மனதிலும் விளைவுகள் உருவாக்குகின்றன அல்லவா?. யோகா, தியானம், தொழுகை, வழிபாடுகள், பிரார்த்தனைகள் போன்றவையும் கர்மாக்கள்தான் அவை உடலிலும், மனதிலும், உடலின் சக்தியிலும் பல மாற்றங்களை உருவாக்குகின்றன அல்லவா?.

பணம் சம்பாதிக்க ஒரு மனிதன் செய்யும் தொழிலும் வேலையும் கர்மா தான். அவர் செய்யும் தொழிலும் வேலையும் அவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்குகின்றன அல்லவா?. மனிதர்களுக்கு இடையில் உள்ள உறவுகளும் கர்மாக்கள்தான். ஒவ்வொரு உறவும் நட்பும் ஒரு வகையான நன்மையையோ தீமையையோ அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்குகிறது அல்லவா? மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், மீன்கள், தாவரங்கள், என அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களின் வாழ்க்கையில் சில மாறுதல்களை உண்டாக்குகின்றன. அவைகளுடனான உறவுகளும் கர்மாக்கள்தான். மனிதனின் சிந்தனையில் உண்டாகும் காமம், கோபம், எரிச்சல், பயம், ஆசை, பற்று, பொறாமை அனைத்துமே கர்மாக்கள் தான். அவை கண்டிப்பாக மனிதனின் உடலிலும், மனதிலும், சக்தி நிலையிலும் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மனிதன் தனது பஞ்சேந்திரியங்களாலும் மனதாலும் செய்யும் அனைத்து செயல்களும் கர்மாக்கள்தான். பார்ப்பது, கேட்பது, நுகர்வது, உணர்வது, சுவைப்பது, சிந்திப்பது இவை அனைத்துமே கர்மாக்கள்தான். அவற்றுக்கு நிச்சயமாக எதிர் விளைவுகள் உண்டாகும். அந்த விளைவுகள் நன்மையாக விளையுமா? தீமையாக விளையுமா? என்பது செயல்களின் நோக்கத்தை பொறுத்தே அமையும்.

கர்மாக்களின் விதங்கள்

நல்ல கர்மாக்கள் 
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம் எதுவாக இருந்தாலும். அந்த செயல் அல்லது எண்ணம் அந்த செயலை புரிந்தவருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஏதாவது ஒரு வகையில் நன்மையானதாக இருந்தால் அது நல்ல கர்மா.

தீய கர்மாக்கள் 
தீய கர்மாக்கள் என்பவை உடலாலோ, மனதாலோ, எண்ணத்தாலோ தனக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, ஏதாவது ஒரு துன்பத்தை அல்லது தீமையை விளைவிப்பதாகும்.

பழைய கர்மாக்கள்  
பழைய கர்மாக்கள் என்பவை சிறுவயது முதலாக இன்று வரையில் உடலாலோ மனதாலோ செய்த செயல்கள். ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பதனால் அவை சென்ற பிறவிகளில் செய்தவையாகவும் இருக்கலாம். எத்தனை பிறப்புகள் எடுத்தாலும் நாம் செய்த பாவ புண்ணியங்கள் நம்மை கண்டிப்பாக பின்தொடரும்.

மனதினால் உண்டாகும் கர்மாக்கள் 
மனதினால் உண்டாகும் கர்மாக்கள் என்பவை ஒரு மனிதன் அவனது மனதாலும் எண்ணங்களாலும் உருவாக்கும் கர்மாக்கள். ஒரு மனிதன் மற்ற மனிதர்களின் மீது மனதளவில் பொறாமை படும்போதும், கோபம், வெறுப்பு, பகைமை கொள்ளும் போதும் அங்கே ஒரு கர்ம கணக்கு உருவாகும். நேரடியாக எதுவும் செய்யாமல் இருந்தாலும் மனதளவில் ஒருவர் மற்ற மனிதர்களுக்கு செய்யும் அல்லது நினைக்கும் தீங்குகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் மீண்டும் அவரையே வந்தடையும்.

கர்மாக்களினால் சிலருக்கு நன்மைகள் உண்டாகலாம். சிலருக்கு துன்பங்கள் உண்டாகலாம். ஆனால் இவை இரண்டுமே நாம் விதைத்த விதைகள்தான். இவற்றுக்கு வேறுயாரும் காரணமில்லை, கடவுளும் காரணமில்லை. இதை மனதில் நிறுத்தி வாழ்க்கையில் உண்டாகும் இன்பங்களையும் துன்பங்களையும் மன ஓர்மையோடும் சம தன்மையோடும் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் துன்பங்கள் நிச்சயமாக வராது. என் கஷ்டங்களுக்கு நான்தான் காரணம் என்று மனதார ஏற்றுக் கொண்டால் கஷ்டங்கள் வந்த தடம் தெரியாமல் மறைந்து போகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

யின் யாங்

ஒரு வட்டம், அதில் இரு பிரிவுகள். ஒரு பகுதி கருப்பு, ஒரு பகுதி வெள்ளை. கருப்பு பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளி. வெள்ளை பகுதியில் ஒரு கருப்புப் புள்ளி. வெள்ளையும் கருப்பும் சுழல்வதைப் போன்ற ஒரு உருவ அமைப்பு. அதுதான் யின் யாங் சின்னம்.


(யின் யாங் சின்னம்)

முழுமைதான் யின் யாங் சின்னத்தின் தத்துவம். இந்த உலகில் இரு வெவ்வேறு தன்மைகள் சேரும் போது ஒரு முழுமை உருவாகிறது. உதாரணத்திற்கு இரவும் பகலும் சேரும்போது ஒரு முழுமையான நாள் உருவாகிறது. வெளிச்சமான பகலின் பகுதியும் இருளான இரவின் பகுதியும் சேருவதுதான் முழுமையாக ஒரு நாள் உருவாக காரணமாக அமைகிறது. பகலிலும் சில இடங்கள் இருட்டாகவே இருக்கும் அல்லவா? அதனால் வெள்ளையான பகுதியில் ஒரு கருப்பு புள்ளி. இரவிலும் சில இடங்கள் வெளிச்சமாகவே இருக்கும் அல்லவா? அதனால் கருப்பான பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளியை குறியீடாக காட்டுகிறார்கள்.

யின் யாங் தத்துவம் (philosophy) 
சீனாவின் தாவோயிசத்தின் தத்துவமான யின் யாங் இந்த உலகில் எதுவுமே தனியாக இல்லை என்ற தத்துவத்தையும். இரண்டு எதிர்மறையான விசயங்கள் ஒன்று சேருவதுதான் முழுமை என்ற தத்துவத்தையும் குறிக்கிறது. தாவோயிசம் அனைத்து விடயங்களிலும் முழுமை பெருவதையே முன்னிறுத்துகிறது. யின் மற்றும் யாங் இணைவதே முழுமை என்றும் ஜோடியாக இணைவதே முழுமை என்றும் குறிப்பிடுகிறது.

ஒரு ஆணோ பெண்ணோ தனியாக வாழ்வது முழுமையான வாழ்க்கையாகாது. அந்த ஆணோ பெண்ணோ ஒரு எதிர் பாலினத்தை சார்ந்த ஜோடியுடன் திருமணத்தின் மூலமாக இணைவதே முழுமையான வாழ்க்கையாகிறது. ஒரு நாள் முழுவதும் பகலாக அல்லது வெளிச்சமாக இருந்தால் அந்த நாள் முழுமைப் பெறாது. அல்லது முழு நாளும் இரவாக இருட்டாக இருந்தாலும் அந்த நாள் முழுமை பெறாது. பாதி பகலும் பாதி இரவும் ஒன்றாக இணையும் போதுதான் ஒரு நாள் முழுமை பெறுகிறது. சூரியன் மட்டுமே நாள் முழுவதும் இருந்தால் அது முழுமையாகாது. சூரியனும் சந்திரனும் பாதி அளவு நாளை பிரித்துக் கொள்வதே முழுமையான சுழற்சியாகிறது.

ஒரு பூ மலர்ந்திருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அது முழுமையான மலராகாது. அந்த பூவுடன் வாசனையும் சேரும்போது தான் அது ஒரு முழுமை பெற்ற மலராக இருக்கும். மனித உடலில் கை, கால், தலை, மற்றும் உடலின் மற்ற உள்ளுறுப்புகள் அனைத்தும் இருந்தாலும், உயிர் இல்லாவிட்டால் அது முழுமையான மனிதனாக இருக்காது. அந்த உடலில் உயிர் இருந்தால் மட்டுமே அவனை மனிதன் என்று இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. அதைப்போல் உயிர் மட்டும் இருந்து உடல் இல்லாவிட்டாலும் அது மனிதன் ஆகாது.

இந்த உலகில் எதுவுமே தனியாக இருக்காது. தனியாக இருக்கும் எதுவுமே முழுமையாகாது. இரு வெவ்வேறான விசயங்கள், வெவ்வேறு தன்மைகள் ஒன்று சேர்வதே இந்த உலகில் முழுமையாகும்.

யின் யாங் உதாரணங்கள் 
யின் - யாங்
இரவு - பகல்
நிலவு - சூரியன்
பெண் - ஆண்
நோய் - ஆரோக்கியம்
மனம் - உருவம்
நல்லது - கேட்டது
மகிழ்ச்சி - துக்கம்
உயிர் - உடல்
குளுமை - உஷ்ணம்
மென்மை - கடினம்
கருப்பு - வெள்ளை

யின் யாங் தத்துவத்தை நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம். மனிதன் என்றால் ஆரோக்கியமாக இருப்பதும், நோய்கள் உண்டாவதும் சாதாரணமாக நடக்கும் ஒரு விசயம் தான். ஆரோக்கியமாக இருப்பவர்கள் நோய்வாய்ப் படுவதும். நோய்வாய்ப் பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவதும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்தான். ஆரோக்கியத்தையும் ஆரோக்கியமின்மையையும் சமபடுத்தி வாழ்வதே சிறப்பான வாழ்க்கையாகும்.

நல்ல ஆற்றல்கள் எங்கும் நிறைந்திருப்பதைப் போன்றே தீய ஆற்றல்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டையும் புரிந்துக் கொண்டு சமபடுத்தி வாழ்வதே சிறப்பான வாழ்க்கையாகும். மனித வாழ்க்கையில் யின்னும் யாங்கும் அல்லது நல்லதும் கெட்டதும் மாறி மாறி வருவதுதான் இயல்பு. எந்த ஒரு அனுபவத்திலும் நல்ல விசயமும் தீய விசயமும் இணைந்து இருப்பதுதான் இயல்பு. 

இதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள். குறிப்பாக வாழ்க்கையையும் வாழ்க்கையில் நடப்பனவற்றையும் புரிந்துக் கொண்டு வாழுங்கள்.