புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label மறுபிறப்பு. Show all posts
Showing posts with label மறுபிறப்பு. Show all posts

குறைகளுடைய, ஊனமுற்ற, குழந்தைகள் ஏன் பிறக்கிறார்கள்

குழந்தைகள் ஊனமாகவோ, குறைகளுடனோ, மூளை வளர்ச்சி குறைவாகவோ, பிறந்தால் இரண்டு விஷயங்களைத்தான் காரணமாக பெரும்பாலானோர் கூறுவார்கள். ஒன்று இறைவன் அந்த குழந்தையையும் பெற்றோரையும் சோதிக்கிறார் என்று கூறுவார்கள். அல்லது அந்தப் பெற்றோர் செய்த பாவம் அல்லது பெற்றோர் பெற்ற சாபத்தினால் அந்த குழந்தை குறைகளுடன் பிறந்திருக்கிறது என்று கூறுவார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டுமே தவறுதான். இந்த உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் அனைத்து நம்பிக்கைகளும் இறைவன் கருணையுடையவன், நியாயமானவன், அன்பானவன், என்று தான் கூறுகின்றன. இறைவன் அன்பும் கருணையும் உடையவன் என்ற கூற்று உண்மையாக இருந்தால் இவ்வாறான குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இவ்வாறான குழந்தைகள் பிறப்பதற்கு இறைவன் தான் காரணம் என்றால், அந்த இறைவனுக்கு அன்பும் கருணையும் இருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்களிலேயே கெட்டவர்கள் கொடூரமானவர்கள் என்று கூறக்கூடிய மனிதர்கள் கூட குழந்தைகளுக்கு தீங்கு செய்ய அஞ்சுவார்கள், அவ்வாறு இருக்கையில் அன்பும் கருணையும் உடைய இறைவன் குழந்தைகளை ஊனமாக படைப்பாரா? என்றால் நிச்சயமாக கிடையாது.

ஆனால் குழந்தைகள் ஊனமாகவும் குறைகளுடன் பிறப்பது நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். நம் கண் முன்னே நடக்கின்ற ஒரு உண்மையான விசயமாக இருப்பதினால் இதற்கு விடை தேட வேண்டியது நம் கடமையாகிறது. எதையாவது ஒன்றை கண்மூடித்தனமாக நம்புவதைவிட சிந்தித்து செயல்படுவது சிறந்ததல்லவா.

மனித வாழ்க்கையில் சத்தியமான ஒரு உண்மை என்னவென்றால் எந்த ஒரு காரண காரியமும் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே நடக்காது. உதாரணத்திற்கு இன்று நம் குழுவில் கேட்கப்பட்ட மூன்று நான்கு கேள்விகளுக்கு கூட ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும். நான் கூறுகின்ற இந்த பதில்கள் கூட யாரோ சிலருக்கு தேவையானதாகவும் இருக்கும். இதைப் போன்றே குழந்தைகள் குறைகளுடன் பிறப்பதற்கும் நிச்சயமாக காரணங்கள் இருக்கும். அந்த காரணம் என்னவென்றால், அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் பெற்றோர், அவர்களின் குடும்பத்தார், அனைவரும் சேர்ந்து முற்பிறவியில் செய்த தவறுகள் தான் இதற்கு காரணம்.

ஒரு குழந்தை ஊனமாகப் பிறந்தால், பெற்றோர்களின் சாபம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனைத்து வேதனைகளையும்  அந்த குழந்தையின் பெற்றோர்கள் மட்டுமே தனியாக அனுபவிப்பதில்லை. அந்தக் குழந்தையும், அந்த குழந்தையின் உறவினர்களும் சேர்ந்து தான் வேதனைகளை அனுபவம் செய்கிறார்கள்.

பெற்றோர்கள், குழந்தை மற்றும் அதன் உறவினர்கள் அனைவரும் வேதனையை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே, சில குழந்தைகள் ஊனமாகப் பிறக்கிறார்கள். இல்லை எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களுக்கு நீங்கள் நம்பவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். ஒரு குழந்தை ஊனமாக பிறப்பதற்கு, அந்த குழந்தையை பராமரிக்க, யார் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பார்கள்.

காட்டுக்குள் வாழும் விலங்குகளை பார்த்தால் விளங்கும். விலங்குகள் கூட மிக மிக அரிதாகத்தான் ஊனமாகப் பிறக்கின்றன. மனிதர்கள் தான் மிக அதிகமான குறைகளுடைய குழந்தைகளை பெற்று இருக்கிறார்கள். குறைகளுடைய குழந்தைகள் பிறப்பதற்கு அவர்களுடைய போன ஜென்மத்து வாழ்க்கை மட்டுமின்றி. இந்த ஜென்மத்தில் இந்த வாழ்க்கையில் குழந்தையின் பெற்றோர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் உட்கொள்ளும் இரசாயன மருந்துகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

சரி பெற்றோர்களின்  இரசாயன பயன்பாட்டினால் கருவில் வளரும் குழந்தை ஊனமாக இருந்தால், குழந்தையின் தவறில்லையே. பின்பு ஏன் குழந்தை துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அந்த குழந்தை வளர வளர பலவகையான இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்குமே; என்று கேட்பவர்களுக்கு. கருவில் குழந்தை வளரும் போது அதன் வளர்ச்சி ஒரு காலகட்டத்தை அடையும் வரையில் அந்த கருவில் உயிர் (ஆன்மா) இருக்காது.

கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பிறகு, அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் குடும்பத்தார், அவர்களின் வாழ்க்கை முறைகளை வைத்து. இந்தக் குழந்தை பிறந்தால் எந்த வகையான இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவம் செய்யும் என்று கணித்து. அந்த அனுபவங்களை, அனுபவிக்க வேண்டிய விதி எந்த உயிர்க்கு இருக்கிறதோ, அந்த உயிர் அந்தக் கருவில் செலுத்தப்படும்.

அந்த உயிர் குழந்தையாக பூமியில் பிறந்து தன் தண்டனைக் காலம் முடியும் வரையில், அந்தக் குழந்தை ஊனத்துடன் உயிரோடு இருக்கும். சிலருக்கு குறுகிய கால தடையாக இருப்பதால், சில ஊனமுற்ற குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்து விடுவார்கள். தண்டனை காலம் அதிகமாக இருந்தால் பல வருடங்கள் உயிரோடு இருப்பார்கள்.

சரி, ஒரு சந்தேகம் குறைகளுடைய குழந்தைகள் பிறக்காமல் தவிர்க்க முடியுமா?. நிச்சயமாக முடியும். ஒரு விதை மரமாக வளர வேண்டுமானால், அதற்கு மண், சூரிய கதிர், நீர், கற்று, சக்தி போன்றவை தேவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும் விதை மரமாகாது. அதைப்போலவே பழைய கர்மாக்கள் கெட்ட பலனை தர வேண்டுமானால், இந்த வாழ்க்கையிலும் தவறான விசயங்களை செய்ய வேண்டும். தவறான வாழ்க்கை முறை, தவறான உணவு முறை, சக்தி குறைபாடு, இரசாயன பயன்பாடு போன்றவை இருந்தால் மட்டுமே குறைகளுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதியை மதியால் வெல்லலாம்" என்று சொன்னார்கள்.

மனதறிந்து பாவங்களை செய்யாதீர்கள், யாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள். யார் நமக்கு என்ன பாவங்கள், துரோகங்கள், செய்திருந்தாலும் அனைத்தையும் மன்னித்துவிடுங்கள். நீங்கள் இதுவரையில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடமோ, இறைவனிடமோ மன்னிப்பு கோருங்கள்.

இந்த வாழ்க்கை அனைவருக்கும் சிறப்பாகவும், மகிழ்ச்சியானதாகவும், அமையட்டும் .


அடுத்த ஜென்மத்தில் எந்த உயிராக பிறப்போம்?

இந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளை கணக்கிட்டு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாக தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து அடுத்த பிறவி நிர்னைக்கப்படும்.

மறுபிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

இந்த வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கும் பற்றில்லாமல் வாழ்பவர்களுக்கும் மறுபிறவி அமையாது.

மறு ஜென்மம் என்பது உண்டா?

உண்டு. ஆன்மாக்கள் அழிவதில்லை அவை மீண்டும், மீண்டும் பிறக்கின்றன.

கர்ம கணக்கும் பிறப்பும்

இந்தியாவில் தோன்றிய சைவம், வைணவம், பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் ஹிந்து மதங்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக மனிதர்களின் ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுக்கும் என்பதை இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. மனிதர்களின் வாழ்க்கை ஒரு முறைதான் என்பதையும், மரணத்துக்கு பின்பு நேரடியாக சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் என்பதையும் இந்த மதங்கள் ஒப்புக்கொள்வதில்லை.

ஆன்மாக்கள் தங்களின் கர்ம கணக்குகள் முடியும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருக்கும் என்பது மேலே குறிப்பிட்ட மதங்களின் நம்பிக்கையாகும். இந்த மதங்களை பின்பற்றும் பலர் பாவம் செய்தவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பெடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான நம்பிக்கையாகும்.

ஆன்மாக்களை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க தூண்டுவது அவை செய்த கர்மாக்களாகும். கர்மா என்ற சொல்லுக்கு பாவம் என்று பொருளல்ல, மாறாக கர்மா என்றால் செயல்கள் என்றுதான் பொருளாகும். ஒருவர் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே பிறப்பெடுக்க காரணமாக இருக்கலாம். ஒரு ஆன்மாவின் உடல், மனம், புத்தி, குடும்பம், ஆரோக்கியம், செல்வம், உறவுகள், போன்றவை அந்த ஆன்மாவின் முந்தைய பிறப்பின் தொடர்ச்சியாகவும் அதன் பலனாகவும் அமைகின்றன.

இறந்த ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு காரணம் கர்ம கணக்கை நிவர்த்தி செய்வதற்காக. கர்ம பலனை அனுபவிப்பதற்காக பிறப்பு எடுப்பதால்தான் சிலர் ஏழைகளாகவும், சிலர் வசதி படைத்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும், சிலர் நோயாளிகளாகவும், சிலர் ஊனமாகவும், இன்னும் பல வித்தியாசங்களில் பிறக்கிறார்கள்.

உழைக்காதவர்களும், எந்தத் திறமையும் இல்லாதவர்களும், எந்த முயற்சியும் செய்யாதவர்களும், மடையர்களும் வசதியாக வாழ்வதற்கும். சிலர் என்ன படித்தாலும், என்ன திறமை இருந்தாலும், என்னதான் முயற்சி செய்தாலும் வாழ்கையில் தோல்விகளும் துன்பங்களும் உண்டாவதற்கும். சிலர் பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறப்பதற்கும், சிலர் பிறக்கும் போதே பெற்றோர்களை இழப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும் அவர்களின் கர்ம பலன்கள் தான் காரணம். அந்த குறிப்பிட்ட ஆன்மா முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் பலனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.

அடுத்த பிறவி சிறப்பாக அமைய வேண்டுமென்றாலோ. அல்லது அடுத்த பிறவி இந்த பூமியில் பிறக்க கூடாது என்றாலோ, இந்த வாழ்க்கையை விழிப்போடும், கவனத்துடனும் வாழவேண்டும். பற்றோடும் நான் என்ற அகந்தையோடும் மனிதர்கள் செய்யும் அத்தனை செயல்களும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும். சில நெல்மணிகளுக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்டு கிடைக்கும் பறவைகளை போல, ஆன்மாக்கள் உலக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு இந்த பூமியில் அடைபட்டு கிடக்கின்றன.