கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label மனிதன். Show all posts
Showing posts with label மனிதன். Show all posts

மனிதர்கள் ஏன் தீயவர்களாக இருக்கிறார்கள்?

அவன் திமிர் பிடித்தவன், அவன் கெட்டவன், அவன் பொறாமை பிடித்தவன், என்று குற்றச்சாட்டும் பலர், தங்களுடைய குணங்கள் எதிரியிடமும் இருக்கும் என்று நம்புவதால் ஏற்படும் விளைவுகள் தான் இவை. பிற மனிதர்களிடம் நீங்கள் காணும் குணாதிசயங்கள், பெரும்பாலும் வெறும் கண்ணாடியைப் போன்று பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. உங்களுடைய குணாதிசயங்களைத்தான் நீங்கள் பிறரிடம் காண்கிறீர்கள்.

மேலும் மனிதர்கள் எனது ஆசையும் தேவையும் நிறைவேறினால் போதும் என்று இருப்பதால், பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் சுயநலவாதிகளாகவும் தீயவர்களாகவும் இருக்கிறார்கள்.

எது தர்மம்? எது அதர்மம்?

யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்ற கேள்விக்கு ஒரு அறிஞர் கூறிய பதில். எவரொருவர் தனக்குள் உதிக்கும்  எண்ணங்களையும், செய்த செயல்களையும் எந்த ஒரு ஒளிவுமறைவுமின்றி யார் எப்போது கேட்டாலும் வெளியில்  சொல்ல முடிகிறதோ! அவர் நல்லவர். எவருக்கெல்லாம் வெளியில் சொல்ல முடியாத எண்ணங்கள் தோன்றுகிறதோ, எவரெல்லாம் வெளியில் சொல்ல முடியாத செயல்களை செய்கிறார்களோ, அவர்கள் கெட்டவர்கள்.

இன்றைய மனிதர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என்பதை தன்னுடைய சுய நலத்திற்கு ஏற்பவே முடிவு செய்கிறார்கள். தனக்குப் பிடித்த விசயம் சரியோ தவறோ அதை செய்பவர்கள் நல்லவர்கள். தனக்குப் பிடிக்காத விஷயம் எவ்வளவு நன்மையானதாக இருந்தாலும் அதைச் செய்பவர்கள் கெட்டவர்கள். அவ்வளவு தான் இன்றைய மனிதர்களுக்கு புரிந்த தர்மம். தர்மம் என்ற சொல்லைக்கூட பிச்சை என்று தான் பலர் எண்ணுகிறார்கள். தர்மம் என்றால் எந்த ஒரு செயலும் எண்ணமும் யாராவது ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்திற்கோ, இயற்கைக்கோ  பயனுள்ளதாக அமைந்தால் அது தர்மம். எந்த ஒரு எண்ணமும் செயலும் பிற மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்திற்கோ, இயற்கைக்கோ பாதகமாக அமைந்தால் அது அதர்மம்.

இந்த உலகில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? விலங்குகளில் நல்ல விலங்கு எது? கெட்ட விலங்கு எது?. நான் பலமுறை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டது, நாயை விழுங்கி விட்டது, வளர்ப்பு பிராணிகளை விழுங்கி விட்டது என்று அதை மனிதர்கள் அடித்துக் கொலை செய்வார்கள். சிலவேளைகளில் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டால் அந்த மலைப்பாம்பை கொன்று அதன் வயிற்றைக் கிழித்து அது விழுங்கிய ஆட்டை வெளியே எடுப்பார்கள். மனிதர்கள் ஆடு மலைப் பாம்பின் உணவு தானே என்று சற்றும் சிந்திப்பதில்லை.

மலைப்பாம்பு ஆட்டை விழுங்கியதில் ஒரு தர்மம் இருக்கிறது சிறிய விலங்குகளை மலைப்பாம்பின் உணவுகளாகவே இயற்கை அமைத்திருக்கிறது. அந்த விலங்குகளை மலைப்பாம்பு கொன்று தின்பதில் எந்த தவறும் இல்லை. இயற்கையின் அமைப்பை புரிந்து கொள்ளாத மனிதர்கள், மலைப்பாம்பை கொல்வது ஒரு முட்டாள்தனமான செயல் ஆகும்.

சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை கொடிய விலங்குகள் என்று மனிதர்கள் அழைப்பார்கள். கொடிய விலங்குகள் என்று அழைக்கும் அளவுக்கு அந்த விலங்குகள் என்ன தவறுகள் செய்தன? ஆசைக்காக கொலைகள் செய்தனவா?  பணத்துக்காக மற்றவரை ஏமாற்றியதா? அப்படி ஒன்றுமில்லை. இயற்கையின் சட்டத்திற்கு உட்பட்டு தன் பசிக்காக விலங்குகளை வேட்டையாடுகின்றன. இயற்கையை புரிந்துக் கொள்ளாத மனிதர்கள் மாமிசம் உண்ணும் விலங்குகளை கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரர்களைப் போன்று பார்க்கிறார்கள்.

இந்த உலகில் மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் சுயலாபத்திற்காக மற்ற உயிர்களை கொள்வதில்லை.

மனிதர் எதை தேடி ஓடி கொண்டிருக்கிறார்கள்?

ஜப்பானின் ஜென் மார்க்கத்தில் ஒரு அருமையான தத்துவம் இருக்கிறது. “நீங்கள் மலையின் மீது காணும் ஞானம் கீழிருந்து எடுத்துச் சென்றது தான்” என்பதுதான் அந்த தத்துவம். இதன் பொருள் “ஞானத்தை நீங்கள் எங்கேயும் தேடி கண்டுபிடிக்க முடியாது” என்பதாகும். அதைப் போல் நீங்கள் ஞானத்தை தேடி எங்கும் செல்லத் தேவையில்லை அது உங்களுக்குள் தான் இருக்கிறது என்றும் பொருளாகும்.

இந்த உலகத்தில் பரம ஏழைகள் முதல் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வரையில். அடிமைகள் முதல் உயரிய அதிகாரத்திலுள்ளவர்கள் வரையில் அனைவருக்கும் உள்ளத்தில் ஒரு தேடல் இருந்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் என்ன தேடுகிறார்கள்? ஏன் தேடுகிறார்கள்? என்பது விளங்குவதில்லை. ஆனால் மனம் எதையோ தேடி அலைகிறது என்பது மட்டும் விளங்கும். மனதில் எப்பொழுதும் ஒரு வெறுமை இருக்கும். எதை கொடுத்தாலும் மனம் திருப்தி அடையாது.

எனக்கு 14 வயது இருக்கும்போது எனக்குள் தேடல்கள் தொடங்கின. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஏன் இந்த பூமிக்கு வந்தேன்? எங்கிருந்து இந்த பூமிக்கு வந்தேன்? பிறப்பதற்கு முன்பாக எங்கிருந்தேன்? மரணத்துக்கு பின்பாக என்ன நடக்கும்? என்னை யாராவது படைத்தார்களா? படைத்திருந்தால் என்னை ஏன் படைத்தார்கள்? இறைவன் என்று ஒருவர் உண்டா? சொர்க்கம் நரகம் என்பவை இருக்கின்றனவா? சொர்க்கம் நரகம் என்பவை இருந்தால் நான் தவறு செய்ய எல்லா வாய்ப்புகளையும் சக்தியையும் கடவுளே கொடுத்துவிட்டு அந்த தவற்றை செய்த பிறகு என்னை ஏன் நரகத்தில் போட வேண்டும்? மனிதர்கள் எந்த தவறும் செய்யாமல் ஒழுக்கமாக வாழக்கூடிய வகையில் இறைவனால் அவர்களை படைக்க முடியுமா? முடியாதா? முடியுமென்றால் ஏன் அவ்வாறு படைக்கவில்லை?

இன்னும் பல நூறு கேள்விகள் என்னுள் எழுந்தன அந்த கேள்விகளுக்கு விடை தேடி பயணித்ததில் பலவற்றை கற்றுக் கொண்டேன். சில தெளிவுகளை அடைந்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை தான் இந்த இணையதளத்தின் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

மனம்தான் மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்வதற்கு காரணம் மனிதர்களின் மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை. மனம் பெரும்பாலான நேரங்களில் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைவதற்கு காரணம் நாம் மனதை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். மனம் எதை நாடுகிறது? எதைத் தேடுகிறது? என்று தெளிவாக கவனித்து புரிந்து கொள்ளாமல். நம் மனதில் இருக்கும் பதிவுகளின் அடிப்படையிலும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும், வாழ்க்கை முறைகளின் அடிப்படையிலும், மனதை திருப்திப்படுத்த முயலும்போது மனம் ஒருகாலும் திருப்தி அடைவதில்லை.

நம் உயிரில் ஒரு தேடல் தொடங்கும்போது அல்லது ஒரு தேடல் உருவாகும்போது மனம் அதற்கு உறுதுணையாக சேர்ந்து செயல்படுகிறது. உயிரின் தேவைகளை, தேடல்களை பூர்த்தி செய்யாமல் நம் இச்சைகளை மட்டும் பூர்த்தி செய்ய முயல்வதனால், மனம் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறது. நம் மனதிலும் அமைதி குறைகிறது. எந்த ஒன்றை சிந்திக்கும்போது, நினைத்துப் பார்க்கும்போது, அனுபவிக்கும்போது, வாசிக்கும்போது மனம் மகிழ்ச்சிக்கு பதிலாக அமைதியை அடைகிறதோ அதுதான் உண்மையில் உங்கள் உயிர் தேடும் பொருள் என்று அர்த்தம். மனதுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அளிப்பவை மட்டுமே மனம் தேடும் உண்மையான பொருளாகும்.


மனிதர்கள் ஏன் வெவ்வேறு குணாதிசியங்களுடன் இருக்கிறார்கள்?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், பிறப்பின் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட சிந்திக்கும் முறை இருக்கும். இந்த வாழ்க்கையைப் பற்றிய சுயப் பார்வை இருக்கும். ஒரு தனிப்பட்ட இயல்பு இருக்கும். ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும்.

மேலும் அவர்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட விசயங்களைக் கொண்டு ஒரு தனிப்பட்ட தன்மை உருவாகும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் சுய குணாதிசயத்தை முடிவு செய்கிறது.

ஆறாவது அறிவு என்பது என்ன?

உணர்தல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து பொறிகள் அனுபவிக்கும் விசயங்களை ஆராய்வதும் முடிவுகளை எடுப்பதும் மனதின் வேலையாகும்.

மனிதன் இயற்கையைச் சார்ந்தவனா?

ஆம். மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. 

மனித இனம் அழிய வாய்ப்புகள் உள்ளனவா?

இயற்கையை எதிர்த்து வாழும்போது, இந்த பூமியில் இருந்து மனித இனம் முற்றிலுமாக அழிந்து போக வாய்ப்புகள் உள்ளன.

இறைவனின் இரகசியம் மனிதன்

மனிதனின் இரகசியம் இறைவன், இறைவனின் இரகசியம் மனிதன் என்று கூறுவார்கள். இறைவனைப் பற்றி மனிதர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அதனால் இறைவன் மனிதனின் இரகசியம் என்று கூறுவது சரி. ஆனால் மனிதர்களை படைத்த இறைவனுக்கு மனிதன் ஒரு இரகசியம் என்று ஏன் கூறுகிறார்கள்? இறைவனால் கூட அறிந்துக் கொள்ள முடியாத இரகசியம் என்ன இருந்து விட போகிறது மனிதனிடம்.

இறைவனின் படைப்பில் ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையில் உள்ள தாவரங்கள், புழு பூச்சிகள், ஊர்வன, நீந்துவன, பறப்பன, விலங்குகள், என எதற்குமே சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலும் உரிமையும் வழங்கப்படவில்லை. இறைவன் எவ்வாறு படைத்திருக்கிறானோ, பிறப்பு முதல் இறப்பு வரையில் அவ்வாறு மட்டுமே அவை செயல்பட முடியும். ஒரு ஆடோ, மாடோ, கரடியோ, சிங்கமோ, கடல்வாழ் உயிரினங்களோ எதை சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்க முடியாது. அவற்றின் உணவுகள் எவை என்பது முன்பே தீர்மானிக்கப் பட்டவை அவற்றை தவிர வேறு எதையும் அந்த உயிரினங்கள் உணவாக எண்ணாது தேடியும் செல்லாது.

இந்த உலகில் இருக்கும் அனைத்து தாவரங்களுக்கும் ஒரு குணமும், தன்மையும், தொழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை மீறி எந்த ஒரு தாவரமும் செயல்பட முடியாது. அதைப்போல் அனைத்து விலங்குகளுக்கும் ஒரு குணமும், தன்மையும், தொழிலும் கொடுக்கப் பட்டுள்ளது. அவற்றை மீறி எந்த ஒரு உயிரினமும் செயல்பட முடியாது. அதனால் தாவரங்களும் விலங்குகளும் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் வாழும் என்று இறைவனுக்கு தெரியும்.

ஆனால் ஆறாவது அறிவுடைய மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றலும், அறிவும், முடிவெடுக்கும் உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறது. அவன் இந்த பூமியில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அவனுக்கு எந்த தடைகளும் உருவாகாது. அவனை மட்டுப்படுத்த எந்த சக்தியும் கிடையாது.

மனிதர்களின் வாழ்க்கையிலும், சிந்தனையிலும், முடிவுகளிலும் இறைவனும் குறுக்கிடுவதில்லை. அதனால் மனிதன் எவ்வாறு வாழ்வான்? எவ்வாறு சிந்திப்பான்? எவ்வாறு முடிவெடுப்பான்? என்ன செய்யப் போகிறான்? என்று இறைவனுக்கு கூட தெரியாது. அதனால்தான் மனிதர்கள் இறைவனின் ரகசியம் என்று குறிப்பிடுகிறார்கள்.


அனைத்து மனிதர்களும் சமமே

நமக்கு கீழே இருப்பவர்களை மதிக்க தொடங்குவோம்
இந்த உலகில், குறிப்பாக இந்த சமுதாய அமைப்பில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வது அறவே சாத்தியமற்றதாக ஆகிவிட்டது. அனைத்து இன மக்களுக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையும் வாய்ப்பும் வசதிகளும் வழங்கபடுவதில்லை. மக்கள் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கொண்டே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். கல்வி, அறிவு, செல்வம், மரியாதை, வாய்ப்புகள், என அனைத்தும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும்.

ஒரு நாய்க்கு உணவு, வாகனம், இருப்பிடம், என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கக் கூடிய மனிதர்கள் இருக்கக்கூடிய இந்த உலகில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத இலட்சக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். பிறப்பு முதல் இறப்பு வரையில் இருப்பிடம் இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். நம்மை சுற்றி வாழும் மற்ற மனிதர்களை விடவும் சற்று மேற்பட்ட வாழ்க்கை நமக்கு அமைந்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக தன் சக மனிதனை அவமானப்படுத்தவோ வேதனைப் படுத்தவோ எந்த ஒரு மனிதனுக்கும் உரிமை கிடையாது.

இந்த உலகில் மனிதர்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய பாவங்களில் ஒன்று மற்றவர்களின் மனதை வேதனைப் படுத்துவது. “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு” என்று திருவள்ளுவப் பெருந்தகை கூறியதற்கு இணங்க ஒரு மனிதனின் மனதை வேதனைப் படுத்துவது மிகப்பெரிய பாவமாகும்.

நம்முடன் வேலை செய்பவர்கள், நமக்கு கீழ் வேலை செய்பவர்கள், நம் வீட்டில் வேலை செய்பவர்கள் என அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவ்வளவு ஏன் பிச்சை எடுப்பவரைக் கூட பிச்சைக்காரன் என்று ஏளனமாக பேசக்கூடாது. கொடுக்கும் மனமும் வசதியும் இருந்தால் நிச்சயம் கொடுக்கலாம், இல்லையென்றால் அமைதியாக சென்று விட வேண்டும். பிச்சை கொடுக்கும் பொழுது கூட மனமுவந்து மகிழ்ச்சியாக கொடுக்க வேண்டுமே ஒழிய வேண்டா வெறுப்பாக முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு கொடுக்கக் கூடாது. வேண்டா வெறுப்பாக கொடுப்பதைவிடவும் கொடுக்காமல் இருப்பது நலம்.

கூலித் தொழிலாளி, சாக்கடையை சுத்தம் செய்பவர், மலத்தொட்டியை சுத்தம் செய்பவர், ரோடு போடுபவர், விவசாயம் செய்பவர், கட்டிடம் கட்டுபவர், ஆட்டோ ஓட்டுபவர், வியாபாரி, தொழிலதிபர், பொறியியலாளர், மருத்துவர், ஆசிரியர் , என அனைத்து தொழில் செய்யும் மனிதர்களும் இன்னும் சொல்லப்போனால் அனைத்து உயிர்களும் இந்த உலகில் சமமானவையே. செய்யும் தொழில் ஏற்ற தாழ்வு இருக்கலாம் ஆனால் அந்த தொழிலை செய்யும் மனிதர்களிடம் பேதம் பார்க்க கூடாது. இந்த சமுதாய அமைப்பில் எந்த ஒரு தொழில் செய்யும் மனிதர்களை கழித்தாலும் சமுதாய வாழ்க்கை சீராக இருக்காது.

மனிதர்களின் பிறப்பும், இறப்பும், வாழ்க்கையும், அவர்களின் கர்ம விதிகளின்படி நடப்பதனால் இன்னாருக்கு இந்த மாதிரியான வாழ்க்கைதான் அமையும் என்று யாராலும் கூற முடியாது. விதிவசத்தால் சிலருக்கு நல்ல வாழ்க்கையும், சிலருக்கு சற்று குறைவான வாழ்க்கை வசதிகளும் அமையலாம். இதைப் புரிந்துகொண்டு அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்த வேண்டுமே ஒழிய, யாரையும் அவரின் செல்வத்துக்காகவும், தொழிலுக்காகவும், பிறப்புக்காகவும், ஜாதிக்காகவும், உயர்வாகவோ, தாழ்வாகவோ நடத்துவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.