கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

தற்கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் - சமுதாயத்தின் தோல்வி - பாகம் 2

மன தைரியமும், எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளும் துணிவும் இருந்தால் தற்கொலை என்ற பேச்சே எழாது. ஆனால் மன தெரியத்தை திடீரென உருவாக்க முடியாது. மனதின் திடம், தைரியம் என்பது புரிதலினால் உண்டாகும் துணிவாக இருக்க வேண்டும். வெறுமனே வாயால் சுடும் வடையாக இருக்கக் கூடாது.

இளமைப் பருவம் என்பது மிகவும் முக்கியமான, ஒரு மனிதனின் மரணம் வரையிலான எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய பருவமாகும். இளம் பிராயத்தில் ஒரு மனிதன் பார்க்கும் மனிதர்களும், அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும், அவன் கற்றுக்கொள்ளும் விஷயங்களும் தான் அவனது வாழ்வின் ஏற்றத்தையும் தாழ்வையும் நிர்ணயிக்கின்றன.

குழந்தைகளுக்கு இன்பங்களையும், மகிழ்ச்சியையும் மட்டுமே காட்டி வளர்க்கக் கூடாது. இந்த உலகில் இருக்கும் தீயவற்றையும் காட்டி வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால்தான் இந்த உலக வாழ்க்கையை பற்றிய தெளிவான பார்வை அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

கூட்டுக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலாக பல்வேறு பிரச்சினைகள் அந்தக் குடும்பங்களில் நடப்பதைப் பார்த்து வளர்வார்கள். இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை, வாழ்க்கையில் இது போன்ற பல்வேறு விஷயங்களை நாம் சந்திக்க நேரிடும் என்று சிறுவயதிலேயே அதற்குத் தயாராகிறார்கள். சிறு பாலியம் முதலே எந்தப் பிரச்சனையை எவ்வாறு அணுக வேண்டும் என்று பெரியவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பார்த்தும் பழக்குகிறார்கள்.

சிறு குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு அதிக கவனிப்பும் சந்தோஷமும் கிடைக்கும். அதனால் அவர்கள் இதுதான் உலகம் என்று எண்ணி வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு வாழ்க்கையில் தோல்விகளும், நஷ்டங்களும், கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும், உண்டானால் அவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறிப் போகிறார்கள். சிலர் அச்சத்தினால் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.

பள்ளிக்கூட படிப்பை மட்டுமே நம்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கக் கூடாது. பள்ளிக்கூட படிப்பு என்பது குழந்தைகளை சிறந்த வேலைக்காரர்களாக, அரசாங்கத்துக்கு அடங்கி ஒடுங்கி வாழும் மனிதர்களாக்க மாறும் வேலைகளை மட்டுமே செய்யும். இந்த உலகில் தைரியமாக தலைநிமிர்ந்து வாழ கற்றுத்தராது. இந்த உலகில் தலைநிமிர்ந்து வாழவும், பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், பெற்றோர்களும் குடும்ப உறவுகளும் தான் கற்றுத்தர வேண்டும்.

நமது பாரம்பரியம், பண்பாடு, நமது நாகரீகம், நமது வரலாறு, நமது முன்னோர்களின் வீரம் வரலாறு போன்றவற்றை சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும். இறைவன், மதம், சமயம், ஆன்மீகம் போன்ற விஷயங்களை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். ஆன்மீக அறிமுகம் என்பது நமது நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை பிள்ளைகளின் மீது திணிப்பதாக இருக்கக்கூடாது. நாம் கூறும் விஷயங்களைக் கேட்டு சிந்தித்து, பிள்ளைகள் எதிர்க் கேள்விகள் கேட்கும் அளவுக்கு பயனானதாக இருக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நடக்கும் நல்ல மாற்றும் கெட்ட விஷயங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் ஒவ்வொரு பிரச்சனையையும் பிள்ளைகளுடன் விவாதியுங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆலோசனைகளை கேளுங்கள். இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதைப் புரியவையுங்கள். வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள், குறிப்பாக தினமும் பத்திரிகைகளை வாசிக்கத் தூண்டுங்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளைகளுக்கும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் அவர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்று தோன்றும். நாளை பெரியவர்கள் ஆனதும் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளே அடக்கி வைக்காமல் மற்றவர்களுடன் கலந்தாலோசனை செய்து, அதற்கான தீர்வை தேடுவார்கள்.

சிறுவயது முதலே மன திட்டத்துடன் வளரும் பிள்ளைகள் எந்த வகையான சவாலையும் சமாளித்து தைரியமாக, வெற்றிகரமான மனிதர்களாக வளர்வார்கள் வாழ்வார்கள்.

தற்கொலை, தற்கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டுதல் - பாகம் 1

அண்மைக்காலங்களில் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் நாம் அதிகமாகக் காணக்கூடிய ஒரு செய்தி தற்கொலை, தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல். ஒரு காலத்தில் வாழ வழியில்லாமலும், வாழத் தெரியாமலும், ஒடுக்குமுறைகளாலும் பல தற்கொலைகள் நடந்தன. பின்பொரு காலத்தில் காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனைகள், வாழ்க்கையில் தோல்வியென பலக் காரணங்களுக்காக தற்கொலைகள் நடந்தன. எந்தக் காரணத்துக்காக நடந்தாலும், தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவுதான்.

ஓரறிவு ஜீவன்கள் முதலாய அத்தனை ஜீவன்களுக்கு இந்த உலகில் பறந்து விரிந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வாழ்விலும் பல இன்னல்கள் வந்துபோகின்றன. அவை எந்த இழப்புக்காகவும், எந்த பிரிவுக்காகவும், எந்த காரணத்துக்காகவும் தற்கொலை செய்துகொள்வதில்லை. அநியாயம் இழைக்கப்பட்ட, அனாதையான, உடல் ஊனமான விலங்குகள் கூட தைரியமாக வாழ்கின்றன, ஆனால் மனிதர்கள் மட்டும் வாழ்கையைக் கண்டு அச்சப்பட்டு தற்கொலை செய்துகொள்ளத் துணிக்கிறார்கள். சாவதற்கு அவர்களிடம் இருக்கும் துணிச்சல் கூட வாழ்வதற்கு இருப்பதில்லை.

அறியாதவர்கள், தெரியாதவர்கள், அறியாமையில் இருப்பவர்கள், பலகீனமானவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்ட காலம் மாறி, தற்போது படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், வசதிபடைத்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இந்த உலகில் மனித பிறப்பு எடுத்தது வாழ்வதற்காக, அந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குக்கூட கற்றுத்தராத இந்த கல்விமுறையின் பயந்தான் என்ன?

தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக நான் பார்ப்பது குடும்பங்களின் சிதைவுதான். கூட்டுக் குடும்பங்கள் என்பவை அடக்குமுறை, ஒடுக்குமுறை, கூட்டுக் குடும்பங்களில் பெண்களுக்கு சுதந்திரமில்லை , உழைப்புகள் சுரண்டப்படுகின்றன என்று பல்வேறு காரணங்களைக் கூறி சிறு சிறு குடும்பங்களாகி. பின்னர் அதுவும் சுருங்கி ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்ற நிலையை உருவாக்கிக்கொண்டார்கள்.

இவற்றுக்குக் காரணம் மனிதர்களின் அச்ச உணர்வும், அறியாமையும், மேற்கத்திய நாகரீக மோகமும். தாய், தந்தை, அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கை, தாத்தா பாட்டி, சிற்றப்பா சித்தி, பெரியப்பா பெரியம்மா, மாமா மாமி என்று வாழ்வாங்கு வாழ்த்த குடும்பங்களும், சமுதாயமும் மாறி, சிறை கைதிகள் போன்று இரண்டு மூன்று நபர்களாக வாழத் தொடங்கியதன் விளைவுதான் இவை.

சிறு குடும்பங்களில் வளர்ந்த மனிதர்களின் மனதில் பெரும்பாலும் தைரியம் போதவில்லை, பிரச்சனைகளை சந்திக்கும் மனோபலமில்லை, எனக்கு யாருமில்லை, நான் தனியாக இருக்கின்றேன் என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. மேலும் அவர்களுக்கு உறவின் நெருக்கமும் வழிகாட்டுதல்களும் கிடைப்பதில்லை. ஒரு சின்ன பிரச்சனை தொற்றினாலும் நான் தனியாக இருக்கிறேன் எனக்கு யாருமில்லை என்று அஞ்சி பிரச்சனைகளுக்கு தீர்வை தேடாமல், குறுக்குவழியை நாடுகிறார்கள்.

மனித உடலில் நோய் தோன்றுவதற்கு முன்பாகவே அதற்கான மருந்து தோன்றிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதைப்போன்றே மனித வாழ்க்கையில் ஒரு பிரச்சனை தோன்றுவதற்கு முன்பாக நிச்சயமாக அதற்கான தீர்வு தோன்றியிருக்கும். அந்த தீர்வை தேடும் தைரியமில்லாமல் தற்கொலைக்குத் துணிவது கோழைத்தனம் மட்டுமல்ல, மடத்தனம்.

பல வேளைகளில் மனிதர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவது அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வுதான். குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார்கள் நம்மைப்பற்றி அவதூறு பேசுவார்கள், தாழ்த்திப் பேசுவார்கள் என்ற அச்சத்தில் சிலர் தற்கொலை செய்துகொள்வார்கள். மனிதர்களுக்குத் துன்பத்தில் உதவாத, உறவினர்களுக்கு துன்பத்தில் துணைநிற்காத, தவித்த வாய்க்கு தண்ணீர் தராமல் குறைமட்டும் கூற தயாராக இருக்கும் இந்த உறவுகளுக்கும் சமுதாயத்துக்கும் அஞ்சி தற்கொலை செய்துகொள்வது போன்ற ஒரு மடமை உண்டா?

…. தொடரும்

மனதுக்கு அறிவு உள்ளதா?

மனதுக்கு பகுத்தறிவு கிடையாது. அதற்கு நல்லது கெட்டது தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப்பார்க்கும் தன்மையும் கிடையாது. மனம் மனதுக்குள் பதிந்திருக்கும் பதிவுகளைக் கொண்டே முடிவுகளை எடுக்கிறது.

மனம் எவற்றையெல்லாம் பதிவு செய்கிறது?

மனிதர்களின் மனம், கண்களின் மூலமாக 180 பாகையில் பார்க்கும். கண்கள் காணும் எல்லைக்குள் இருக்கும் அத்தனை விஷயங்களையும் பதிவு செய்யும். அதே நேரத்தில் தன்னை சுற்றி நடக்கும், அசைவுகளையும், உணர்ச்சிகளையும், மனம் பதிவு செய்யும்.

மனித அறிவால் அறிய முடியாத விஷயங்களையும் மனம் காணும், பதிவு செய்யும். அதனால் நாம் எவற்றைக் காணுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மனதுடன் தொடர்புகொள்ள முடியுமா?

மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. தியான நிலையில் அல்லது நான் என்ற உணர்வு இல்லாத நிலையில் மனதுடன் தொடர்புகொள்ள முடியும், மனதில் இருக்கும் பதிவுகளை அறிந்து கொள்ளவும், மாற்றவும் முடியும். அதே நேரத்தில் புதிய பதிவுகளையும் உருவாக்க முடியும்.

எந்த சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முன்முடிவுகளை உருவாக்காதீர்கள்

எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த விசயம் இப்படித்தான் நடக்கும், இந்த நோய் இப்படித்தான் குணமாகும், இந்தப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு, இதுதான் உண்மை, இதுதான் பொய், என்று எந்த ஒரு முன்முடிவுக்கும் வராதீர்கள்.

இந்த உலக வாழ்க்கை விசித்திரமானது, எது உண்மை? எது பொய்? எது எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்? எப்போது தீர்வு கிடைக்கும்? என்பனப் பற்றி எதுவும் யாருக்கும் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட காலகட்டம் வரும்போது எல்லாம் சாதகமாக நடக்கும் என்பது மட்டும் உறுதி. ஒவ்வொரு விதைக்கும் அது முளைத்து துளிர்விடும் கால அளவு உள்ளது. அதைப்போன்றே ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு கால அளவு இருக்கும். அந்த கால அளவில் அது மாறும், அதற்கான தீர்வும் கிடைக்கும்.

நம் மனதில் ஏற்கனவே முன்முடிவு இருந்தால், நம் வாழ்க்கையில் நடப்பவை மனதின் பதிவுகளுக்கு ஏற்பவே நடக்கும். சரியாக, எளிதாக, நடக்க வேண்டிய விசயங்கள் கூட நம் மன பதிவுகளால் தவறாக, தாமதமாக, குழப்பத்துடன் நடக்கலாம்.

உதாரணத்துக்கு ஜோதிடத்தை எடுத்துக்கொள்வோம். ஜோதிடம் ஒரு உயரிய வானியல் கணிதம். ஒரு மனிதனின் வாழ்க்கையை துல்லியமாக கணிக்கக் கூடியது. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில், துல்லியமாக ஜோதிடம் சொல்லக்கூடிய மனிதர்கள் மிகக்குறைவு. ஒரு ஜோதிடர் தவறாக ஆருடம் கூறிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதை நம்புபவர்களுக்கு அவர்கள் நம்பும் விசயங்கள் அப்படியே நடக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவருக்கு நல்ல விசயங்கள் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும், ஜோதிடர் கூறியதால் எனக்கு நல்லவை நடக்காது என்று அவர் நம்பிக்கைக் கொண்டாலும், ஒருவருக்கு தீய விசயங்கள் நடக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்தும் ஜோதிடர் கூறியதால், அவர் எனக்கு தீய விசயங்கள் நடக்கும் என்று நம்பினாலும் இரண்டு முன் முடிவுகளும் அவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இதனால் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் ஜோதிடம் பார்ப்பது தடைசெய்யப்பட்டது.

ஒருவரின் மனதில் நான் வெளிநாட்டுக்குச் சென்று உழைத்தால் தான் செல்வந்தனாவேன் என்று முன் முடிவு இருந்தால்; உள்ளூரில் எவ்வளவு உழைப்பைப் போட்டாலும் அவருக்கு போதிய செல்வத்தையும் வெற்றியையும் அது தராது. ஒருவர் பெரிய மருத்துவமனையில் மருத்துவம் செய்தால் தான் எனது நோய்கள் குணமாகும் என்று முன்முடிவை வைத்திருந்தால். எவ்வளவு நல்ல மருந்தை உட்கொண்டாலும் சரியான மருத்துவம் செய்தாலும் அவரது நோய்கள் குணமாகாது.

இன்றைய காலகட்டத்தில் கொரானோ வைரஸ் பரவி அதனால் நோய்கள் உண்டாகும் மனிதர்களில் பெரும்பாலோனோருக்கு உண்மையான நோய் கிடையாது. ஆனால் நான் இருக்கும் ஊரில் கொரானோ வைரஸ் பரவுவதாகச் சொல்கிறார்களே, அது எனக்கும் வந்துவிடும், என்ற முன்முடிவும் அச்சமும், அவர்களின் உடலில் நோய்களையும் நோய்க் கிருமியையும் வளரச்செய்கிறது. இது அவர்களின் மனம் சுயமாக உருவாக்கிய நோய்.

மனதில் ஒரு முன்முடிவு உருவாகிவிட்டால் அந்த எண்ணம் அனைத்து சூழ்நிலைகளில் மீதும் ஆதிக்கம் செலுத்தும். விதியையும் மதியையும் கட்டுப்படுத்தும். துரதிருஷ்டவசமாக மனமானது நல்ல விசயங்களை எளிதில் நம்பாது; ஆனால் கெட்ட விசயங்களை ஏன்? எதற்கு? என்று மறு கேள்விகள் கேட்காமல் உடனே நம்பிவிடும்.

நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட வயதில் தான் எனக்கு நல்லது நடக்கும், இந்த இடத்துக்குச் சென்றால்தான் எனக்கு நல்லது நடக்கும், இவரின் மறைவுக்கு பிறகுதான் எனக்கு நல்லது நடக்கும், இதைச் செய்தால்தான் எனக்கு நல்லது நடக்கும், இவரால் தான் நான் முன்னேற முடியவில்லை, என்பனப் போன்ற பல முன்முடிவுகளை வைத்திருக்கிறோம். அந்த முன்முடிவுகளே நமக்கு பல நல்ல விசயங்கள் நம் வாழ்க்கையில் நடக்கவிடாமல் தடுக்கின்றன. பல நல்ல விசயங்கள் நமக்கு கிடைக்கவிடாமலும் தடுக்கின்றன.

ஒரு குழந்தையைப் போன்று எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் மனதை வெற்று காகிதம் போன்று வைத்திருந்தால், நமது உழைப்புக்கும், நமது முயற்சிக்கும், ஏற்ப நல்ல விசயங்கள் தானாக நம்மைத் தேடிவரும்.


உங்கள் குழந்தைகளுக்கு வாழ்வதற்கு கற்றுக் கொடுங்கள்!

உங்கள் குழந்தைகள் இந்த உலகத்தில் சான்றோராக வாழ வேண்டுமா? இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் மனிதர்களையும் புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? ஆம் என்ற பதில் உங்களிடம் இருந்தால்; இந்த பத்து விசயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

1. பசி உண்டான பிறகு உணவை உட்கொள்ள பழக்குங்கள். பசி உண்டானால் பசியின் தன்மை மற்றும் பசியின் அளவை அறிந்து சாப்பிட கற்றுக் கொடுங்கள். பசி இல்லையென்றால் எனக்கு உணவு வேண்டாம் என்று தைரியமாக சொல்ல பழக்குங்கள்.

2. கேள்விகள் கேட்க ஊக்குவியுங்கள். யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? எதனால்? அதன் நோக்கம் மற்றும் விளைவு என்ன? என்று கேள்விகள் கேட்கச் சொல்லுங்கள். கேள்வி கேட்காமல் எதையும் நம்பக் கூடாது என்று பழக்குங்கள்.

3. வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். நீங்களும் உடன் அமர்ந்து பயனுள்ள எதையாவது வாசியுங்கள்.

தமிழ் வாசிக்க கற்றுக்கொடுங்கள். தமிழில் தான் உலகின் அனைத்து இரகசியங்களும் ஞானங்களும் உள்ளன. இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் அவசியம் தேவைப்படும்.

4. செல்வத்தின் அவசியத்தை புரியவையுங்கள். இந்த உலகில் வாழ்வதற்கு பணம் மிகவும் அவசியம் என்பதை விளக்குங்கள். அதே நேரத்தில் பணம் சேர்ப்பதற்காக மனிதப் பிறப்பு எடுக்கவில்லை என்பதையும் புரியவையுங்கள்.

5. நம் எண்ணப்படிதான் நம் வாழ்க்கை இருக்கும், அதனால் வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால், மனதை வளமாக வைத்திருக்க வேண்டும் என்பதை புரியவையுங்கள். மனதில் எப்போதும் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும் தீயனவற்றை விளக்க வேண்டும்.

6. இந்த உலகில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது. அதனால் எதற்கும் களங்க வேண்டாம் அனைத்தும் நிச்சயமாக மாறும் என்று கூறுங்கள்.

7. அன்பை அறிமுகப்படுத்துங்கள். மனிதர்களை அறிமுகப்படுத்துங்கள். உறவுகளை பேண கற்றுக்கொடுங்கள். உறவுகளின் முக்கியத்துவத்தை விளக்குங்கள்.

8. இயற்கையை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். புற்கள் முதலிய, மரங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள், பூமி, கிரகங்கள், அனைத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

9. உங்கள் குழந்தைகளை சிந்திக்க தூண்டுங்கள். சுயமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். அவர்களுக்கு எது தேவை என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

10. தானமும் தர்மமும் செய்ய பழகுங்கள். தர்மங்கள் கொடுக்கும் போது அவர்களின் கைகளால் கொடுக்கப் பழகுங்கள்.

நீங்கள் வாழ்ந்துக் காட்டும் வழியிலும், நீங்கள் கற்றுக் கொடுக்கும் பழக்க வழக்கங்களையும் கொண்டும் தான் உங்கள் பிள்ளைகள் தங்களின் எதிர்கால வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் வையுங்கள். பள்ளிப் பாடங்கள் மட்டும் ஒருவனை சிறப்பாக வாழ வைக்காது.

ஏறதாள 7 வருடங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் குணங்கள் மாற்றம் அடையும். முதல் ஏழு வருட அனுபவங்களை கொண்டு எட்டாவது வருடம் முதல் வாழ்வார்கள். அடுத்த 7 வருடம் அனுபவங்களைக் கொண்டு 14 ஆவது வருடம் முதல் வாழ்வார்கள். மனதின் இந்த மாற்றம் இருதிவரையில் தொடர்ச்சியாக நடக்கும். மனப் பதிவுகள் சரியாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக சில குறிப்புகள்வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். இந்தக் காணொளியில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் வாழ்க்கையில் அனைத்து வகையான தடங்கல்களும் நீங்கி, எல்லா நல்ல விசயங்களும் உங்களை நாடிவரும்.

அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம்?

புத்தி மற்றும் அறிவு,  இவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிப்பதைப் போன்று இருந்தாலும் இவையிரண்டும் மனதின் வெவ்வேறு தன்மைகளை குறிக்கின்றன. இவையிரண்டுக்கும் மனதின் ஆற்றலுடன் தொடர்பிருந்தாலும், இவற்றின் சிந்திக்கும் தன்மைகளும் ஆழங்களும் மாறுபட்டவை.

மனம் என்பது நமது ஐம்பொறிகளைக் கொண்டு கற்றுக்கொண்ட அனுபவங்கள். ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனுபவங்கள் மனதில் பதிவாகி மனதை உருவாக்குகின்றன. ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனுபவங்களை சிந்திக்கும்போதும், ஆராயும்போதும் அவை அறிவாக மாறுகின்றன.

புத்தி என்பது பிறப்பால் வருவது. குழந்தைகள் பிறக்கும்போதே புத்தியும் கூடவே பிறந்துவிடும். குழந்தை பிறக்கும்போதே அதற்கு பசி என்றால் என்னவென்று தெரிகிறது, சிறுநீர், மலம் கழிக்க தெரிகிறது, பால் அருந்துவது எவ்வாறு என்று தெரிகிறது, பசித்தால் அழவேண்டும் என்பது தெரிகிறது. கண், காது, வாய், கை, கால் மற்றும் ஏனைய உடல் உறுப்புகளையும் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது.

அதைப் போன்றே ஒரு குழந்தை இந்த பூமியில் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் அத்தனை விசயங்களும், குழந்தை பிறக்கும்போது குழந்தையின் மனதில் (உடலில்) பதிந்தே இருக்கும். இந்த அடிப்படை அறிவுகளை புத்தி என்று அழைக்கிறோம்.

பிறவியிலேயே சிந்திக்கும் ஆற்றலும், ஒரு விஷயத்தை எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றலும், ஒரு சூழ்நிலையை பல கோணங்களில் அணுகக் கூடிய ஆற்றலும், உள்ளவர்களை புத்திசாலிகள் என்று அழைக்கிறோம். காரணம் அந்த அறிவும் திறமையும் அவர்களுக்கு பிறவியிலேயே வந்தவை.

பிறந்த பிறகு வெளியிலிருந்து கற்றுக்கொண்டு புத்திக்கூர்மையுடன் இருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கிறோம். அறிவாளிகளும் புத்திசாலிகளும் ஒன்றைப் போல் தெரிந்தாலும் இருவருக்குள்ளும் சில வித்தியாசங்கள் உள்ளன.

அறிவாளி தான் கற்றுக்கொண்ட அல்லது தன் அனுபவத்தில் உள்ளவற்றை வைத்துக்கொண்டு ஒரு விசயத்தை அணுகுவார். ஆனால் புத்திசாலி ஒரு விசயத்தை பல கோணங்களில் ஆராய்ந்து தன் சொந்த அறிவையும் அனுபவங்களையும் பயன்படுத்தி அதற்கு தீர்வு காண்பார்.

அறிவாளிக்கு தனது அனுபவத்தில் இல்லாத ஒன்றை விளங்கிக்கொள்ளவோ, அவற்றுக்குத் தீர்வு காணவோ தெரியாது.  ஆனால் புத்திசாலிகள் எந்த புதிய விசயத்தையும் எளிதாக அறிந்துக்கொள்வர். எவ்வாறான புதிய சூழ்நிலையானாலும் அவற்றுக்கு சுயமாகவே தீர்வு காண்பார்.

பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வது அறிவு, வாழ்கையில் கற்றுக்கொள்வது புத்தி.

எண்ணம் போல் வாழ்க்கை, முதலில் எண்ணத்தை மாற்றுவோம்.

எண்ணம் போல் வாழ்க்கை என்பது சான்றோர் வாக்கு. நமது மனதில் உண்டாகும் எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதை நம் முன்னோர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திச்  சென்றனர். நல்ல எண்ணங்கள் என்று கூறும்போது பெரும்பாலும் செயற்கையாக, நல்ல விஷயங்களை நினைத்துப் பார்க்கச் சொல்வார்கள். ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எண்ணம் வேறு, சிந்தனை வேறு.

நாமாக ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பது சிந்தனையே ஒழிய, எண்ணம் அல்ல. எண்ணங்கள் என்பவை நம் மனதில் ஏற்கனவே பதிந்திருக்கும் பதிவுகளினால் சுயமாக உருவாகுபவை. எண்ணங்களை யாராலும் உருவாக்க முடியாது. நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டுமென்றால் மனதினில் நல்ல பதிவுகளைப் பதிய வேண்டும்.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் நமது ஐம்பொறிகளான பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, மற்றும் உணர்வின், மூலமாக நமது மனப் பதிவுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நல்ல விஷயங்களை விட, தீய விஷயங்களே அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான, கெட்ட விசயங்களும், நம் வாழ்க்கைக்கு  எந்தப் பயனும் தராத தீய விசயங்களும் நம் மனதுக்குள் பதியப்படுகின்றன.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; 
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே;
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; 
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
ஒளவையார், மூதுரை

நல்ல மனிதர்களுடனான தொடர்பு மிகவும் பயனானது என்பதை இந்தப் பாடலின் மூலமாக ஒளவையார் உணர்த்துகிறார். அவர் பாடிய இந்தப் பாடலை எதிர்ப்பதமாக எடுத்துக்கொண்டால் தீய மனிதர்களுடன் எந்த வகையான தொடர்பு வைத்திருந்தாலும் அது நமக்குக் கெடுதலையே செய்யும் என்பது புரியும்.

முடியாது, நடக்காது, கிடைக்காது, போன்றவற்றை எதிர்மறை வார்த்தைகள் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நமது மனநிலையை மாற்றக்கூடிய அனைத்துமே எதிர்மறை வார்த்தைகள்தான். நமது மனதின் பதிவுகளைப் பாதிக்கக்கூடிய அல்லது தவறான பதிவுகளை உண்டாக்கக்கூடிய அனைத்துமே தீய விஷயங்கள் தான். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான, கெட்ட விஷயங்கள் நம்மை வந்தடைகின்றன.

நமது மனப் பதிவுகளை மாற்ற வேண்டுமானால், முதலில் நல்ல பதிவுகளை உருவாக்க வேண்டும். பழைய பதிவுகளை அழிப்பது கடினம். ஆனால் புதிய பதிவுகளை நல்லவையாக ஆக்கிக் கொண்டால் பழைய பதிவுகள் செயலிழந்துவிடும்.

ஒரு பதிவை வாசித்து, பின்பு அது நன்மையானதா? தீமையானதா? அது நமக்கு எந்த வகையிலாவது நன்மையானதாக   இருக்குமா? என்பதை ஆராய்வதை விடவும், அவற்றை வாசிக்காமல் விடுவதே சிறந்ததாகும். தவறான பதிவுகளைப் பகிரும் நண்பர்களின் உறவை முதலில் தவிர்த்துக் கொள்ளுங்கள். தவறான விசயங்களை பதியும், பரப்பும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்களில் இருந்து வெளியேறி விடுங்கள். நீங்கள் எந்தத் தவறான மற்றும் எதிர்மறை விஷயங்களையும் பகிராதீர்கள். எதிர்மறை விசயங்களைக் காட்டும் மற்றும் பரப்பும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், இணையப்பக்கம் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எவையெல்லாம் தவறான விஷயம் அல்லது எதிர்மறையான செய்திகள் மற்றும் விஷயங்கள் என்றால், எவையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புவீர்களோ அவையெல்லாம் தீய விஷயங்கள். அவற்றைப் பரப்பும் மற்றும் நினைவுபடுத்தும் அத்தனை விஷயங்களையும் விட்டு விலகியிருங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.