கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label பிறப்பு. Show all posts
Showing posts with label பிறப்பு. Show all posts

இந்த உலகில் ஏற்படும் மரணத்தின் நோக்கம் என்ன?

இந்த உலகில் மரணம் அடையாதவர்கள் எவருமில்லை என்று எல்லோருக்கும் தெரியும். அனைவரையும் மரணம் நிச்சயமாக அடைந்தே தீரும் என்றும் எல்லோருக்கும் தெரியும். நமக்கு முன்னோரும் போய்விட்டார்கள், நமக்கு பின்னோரும் வந்து விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், யாரும் மரணமடைய விரும்புவதில்லை.

மரணத்தை பற்றிய ஒரு மாயையும், பயமும் எல்லோருக்கும் உண்டு. மரணம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு வகையான அச்ச உணர்வு பலரை கவ்விக் கொள்கிறது. அதுவும் ஒரு மருத்துவர் வாயிலிருந்து மரணம் என்ற வார்த்தை வெளிவரும் போது கடவுளே சொல்லிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. எமன் நம் முன்னே நின்றுக் கொண்டு வா வா என்று அழைப்பதைப் போன்ற ஒரு மாயை பலருக்கு உருவாகிவிடுகிறது.

குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு.

திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார். ஒருவன் காலையில் விழித்தெழுவதைப் போன்றது பிறப்பு, இரவு மீண்டும் உறங்குவதைப் போன்றது மரணம். மரணத்தை ஏன் உறக்கத்தோடு தொடர்புபடுத்தி கூறுகிறார் என்றால், நாம் ஒரு முறை மட்டுமே உறங்குவதில்லை, அனுதினமும் உறங்குகிறோம் மறுநாள் மீண்டும் எழுகிறோம். விழித்தெழும் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உறங்கச் செல்வார்கள்.

அந்த சுழற்சியைப் போன்றே பிறந்த அனைவரும் ஒரு காலத் தவணையில் மரணமடைவார்கள். அவர்கள் ஒரு காலத் தவணைக்குப் பிறகு மீண்டும் பிறந்து வருவார்கள். மற்றுமொரு குறளில் இப்படிக் கூறுகிறார்.

குறள் 338:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே, உடம்பொடு உயிரிடை நட்பு.

உடலுக்கும், உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும், பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றது தான் என்கிறார். ஒரு முட்டை முழுமையாக வளர்ச்சி அடையும் போது, அது குஞ்சாக வெளிவருகிறது. அதைப் போன்றே மனித உயிரானது தனக்கான பயிற்சி காலத்தில் முதிர்ச்சி பெறும்போது, அது மேன்மையான அடுத்த பிறப்புக்குச் செல்வதற்காக உடலை விட்டுப் பிரிகிறது. முட்டை ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான், அதனால் பறவையாக பறக்க முடியும். அதைப்போலவே உடம்பெனும் இந்தக் கூட்டை விட்டு வெளியில் பறந்தால் தான், அந்த ஆன்மா அடுத்த மேன்மையான வாழ்க்கையை அனுபவம் செய்ய முடியும்.

ஆகையால் மரணமென்பது பயப்பட வேண்டிய விசயமோ, கொடுமையான விசயமோ அல்ல. மரணம் என்பது மனிதனின் உயிர் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் ஒரு முன்னேற்றம் அல்லது பழைய நோய்வாய்ப்பட்ட, பலகீனமான உடலைத் துறந்து, புதிய ஆரோக்கியமான உடலை அடையும் அழகான நகர்வு மட்டுமே.

உடல் தளர்ந்து விழுவதற்கு முன்பாக, முதுமை முடிவைத் தருவதற்கு முன்பாக, எமன் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக, நீங்களாக மனமுவந்து உயிரைத் துறக்க தயாராக இருங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். மரணம் அமைதியானதாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.

மனிதர்களின் பிறப்பில் வேற்றுமைகளும் ஏற்ற தாழ்வுகளும் இருப்பது ஏன்?

மனிதர்களின் பிறப்பில் வேற்றுமைகளும் ஏற்ற தாழ்வுகளும் இருப்பது ஏன்? சில மனிதர்கள் வசதியான குடும்பத்திலும், மனிதர்கள் ஏழ்மையான குடும்பத்திலும் பிறப்பது ஏன்? அறிவு, திறமை, புத்திக் கூர்மை, நிம்மதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், உடல் அமைப்பு, செல்வம், அத்தனையும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுவது ஏன்?

உயிர்களின் பிறவிகளைத் தீர்மானிப்பது யார்?

ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களைக் கணக்கில் கொண்டும், அவர்கள் செய்த பாவ புண்ணியங்களைக் கணக்கில் கொண்டும், ஆன்மாக்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் எந்தப் பிறவியை எடுக்க வேண்டுமென்பது தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்த ஜென்மத்தில் எந்த உயிரினமா பிறப்போம்?

இந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.

மறுபிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

இந்த வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கும், பற்றில்லாமல் வாழ்பவர்களுக்கும், எந்த மனிதனுக்கும் எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்களுக்கு மறுபிறவி அமையாது.

மனிதர்கள் ஏன் ஊனமாக பிறக்கிறார்கள்?

மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை அனுபவிப்பதற்காக ஊனமாகப் பிறக்கிறார்கள். அதாவது முந்தைய பிறவிகளில் மற்றவர்களை ஊனப்படுத்தியவர்களும், மற்றவர்களைக் கொடுமைப் படுத்தியவர்களும் அதற்குத் தண்டனையாக இந்தப் பிறவியில் ஊனமாகப் பிறக்கிறார்கள்.

இந்த பிறவியில் நாம் ஊனமாக பிறந்ததற்கும், அனுபவிக்கும் வேதனைகளும் நாம் எதோ ஒரு பிறவியில் செய்த தவறுகள் தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு; உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொண்டால். இதுவரையில் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடினால், அடுத்த பிறவி மகிழ்ச்சியான பிறவியாக அமையும்.

கர்ம கணக்கும் பிறப்பும்

இந்தியாவில் தோன்றிய சைவம், வைணவம், பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் ஹிந்து மதங்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக மனிதர்களின் ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுக்கும் என்பதை இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. மனிதர்களின் வாழ்க்கை ஒரு முறைதான் என்பதையும், மரணத்துக்கு பின்பு நேரடியாக சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் என்பதையும் இந்த மதங்கள் ஒப்புக்கொள்வதில்லை.

ஆன்மாக்கள் தங்களின் கர்ம கணக்குகள் முடியும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருக்கும் என்பது மேலே குறிப்பிட்ட மதங்களின் நம்பிக்கையாகும். இந்த மதங்களை பின்பற்றும் பலர் பாவம் செய்தவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பெடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான நம்பிக்கையாகும்.

ஆன்மாக்களை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க தூண்டுவது அவை செய்த கர்மாக்களாகும். கர்மா என்ற சொல்லுக்கு பாவம் என்று பொருளல்ல, மாறாக கர்மா என்றால் செயல்கள் என்றுதான் பொருளாகும். ஒருவர் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே பிறப்பெடுக்க காரணமாக இருக்கலாம். ஒரு ஆன்மாவின் உடல், மனம், புத்தி, குடும்பம், ஆரோக்கியம், செல்வம், உறவுகள், போன்றவை அந்த ஆன்மாவின் முந்தைய பிறப்பின் தொடர்ச்சியாகவும் அதன் பலனாகவும் அமைகின்றன.

இறந்த ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு காரணம் கர்ம கணக்கை நிவர்த்தி செய்வதற்காக. கர்ம பலனை அனுபவிப்பதற்காக பிறப்பு எடுப்பதால்தான் சிலர் ஏழைகளாகவும், சிலர் வசதி படைத்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும், சிலர் நோயாளிகளாகவும், சிலர் ஊனமாகவும், இன்னும் பல வித்தியாசங்களில் பிறக்கிறார்கள்.

உழைக்காதவர்களும், எந்தத் திறமையும் இல்லாதவர்களும், எந்த முயற்சியும் செய்யாதவர்களும், மடையர்களும் வசதியாக வாழ்வதற்கும். சிலர் என்ன படித்தாலும், என்ன திறமை இருந்தாலும், என்னதான் முயற்சி செய்தாலும் வாழ்கையில் தோல்விகளும் துன்பங்களும் உண்டாவதற்கும். சிலர் பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறப்பதற்கும், சிலர் பிறக்கும் போதே பெற்றோர்களை இழப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும் அவர்களின் கர்ம பலன்கள் தான் காரணம். அந்த குறிப்பிட்ட ஆன்மா முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் பலனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.

அடுத்த பிறவி சிறப்பாக அமைய வேண்டுமென்றாலோ. அல்லது அடுத்த பிறவி இந்த பூமியில் பிறக்க கூடாது என்றாலோ, இந்த வாழ்க்கையை விழிப்போடும், கவனத்துடனும் வாழவேண்டும். பற்றோடும் நான் என்ற அகந்தையோடும் மனிதர்கள் செய்யும் அத்தனை செயல்களும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும். சில நெல்மணிகளுக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்டு கிடைக்கும் பறவைகளை போல, ஆன்மாக்கள் உலக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு இந்த பூமியில் அடைபட்டு கிடக்கின்றன.