கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label பசி. Show all posts
Showing posts with label பசி. Show all posts

பசி எதனால் உருவாகிறது?

பசி என்பது உடலின் சேமிப்பு சக்திகள் தீர்ந்துவிட்டன, அதனால் புதிய சக்திகளை உற்பத்தி செய்ய உடலுக்கு உணவு தேவை என்ற உடலின் அறிவிப்பாகும்.

நம் உடலின் அசைவுகளும் உழைப்புகளுக்கும் தேவையான ஆற்றல்கள் உணவிலிருந்தே பெரும்பான்மையாகக் கிடைக்கின்றன, அதனால் உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தி முடித்துவிட்டால் அல்லது உடலில் ஆற்றல் குறைவாக இருந்தால் பசி உணர்வு உண்டாகும்.

உணவையும் தண்ணீரையும் ஒரே நேரத்தில் உடல் கேட்குமா?

தாகம் உண்டாகும் வேளைகளில் பசி இருக்காது. பசி உண்டாகும் வேளைகளில் தாகம் இருக்காது. பசியும் தாகமும் ஒன்றாக இருப்பது உடலின் பழக்கத்தினால் கற்பனைகளாலும் மட்டுமே.

நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவை உட்கொள்ள வேண்டும்?

மனிதர்கள் ஒரு நாளைக்கு இத்தனை முறை உணவை உட்கொள்ள வேண்டும் என்று எந்த கணக்கும் இயற்கையில் கிடையாது. சுயமாக பசி உண்டானால் பசியில் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும்.

பசி உண்டாகவில்லை என்றால், உணவை உட்கொள்ளத் தேவையில்லை. ஒரு நாளைக்கு 1 தடவை தான் பசி உண்டாகிறது என்றால் ஒரு தடவை உணவை உட்கொண்டால் போதுமானது.

சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும்?

சிறுவர்களுக்குப் பசியில்லாமல் கொடுக்கப்படும் உணவுகளே பின்னாட்களில் அவர்களின் உடலிலும் மனதிலும் நோய்களாக வெளிப்படுகின்றன. அதனால் சிறுவ சிறுமிகளுக்கு பசி உண்டாகும் வரையில் காத்திருந்து, அவர்களுக்குப் பசி உண்டான பின்பு உணவைக் கொடுக்கவும்.

ஒரு நாளைக்கு இத்தனை முறை என்றோ, கடிகார நேரத்தைக் கணக்கிட்டோ உணவு கொடுக்கக் கூடாது. நன்றாகப் பசி உண்டான பிறகு உணவு கொடுப்பதே குழந்தைகளுக்கு  நன்மையும் ஆரோக்கியமுமாகும்.

பசி உண்டான உடன் சாப்பிடாவிட்டால் வயிற்றில் புண்கள் உண்டாகுமா?

இல்லை. பசி உண்டான உடன் சாப்பிடாவிட்டால் உடலுக்கு எந்த தீங்கும் நிகழாது. மாறாக பசியில்லாமல் சாப்பிடுவதே தீங்காகும்.

பசி உண்டானால் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா?

முடிந்த வரையில் நன்றாக பசி உண்டான உடன் சாப்பிடுவது நல்லது. ஒரு வேளை பசி உண்டானவுடனே சாப்பிட இயலாவிட்டாலும் உடலுக்கு பெரிய பாதிப்புகள் ஒன்றும் நிகழாது.

பசியில்லாமல் சாப்பிடுவதால் உண்டாகும் கேடுகள்

என்னிடம் பெரும்பாலானோர் கேட்கும் இரண்டு கேள்விகள்; “எதை சாப்பிட்டால் என் நோய்கள் குணமாகும்?” மற்றும், “எதை சாப்பிட்டால் என் தொந்தரவுகள் குறையும்?” என்பவை தான். நோய்கள் குணமாக வேண்டுமென்றால் எதையாவது சாப்பிட வேண்டுமென்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். அல்லது மருந்தாகவாவது எதையாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். உணவின் மீது அவ்வளவு பிரியம்

பசி என்றால் என்ன?
நான் யாரிடமாவது, பசி அறிந்து உண்ணுங்கள் என்று சொன்னால் அவர்கள் கேட்கும் அடுத்தக் கேள்வி, “பசி என்றால் என்ன? அது எப்படி இருக்குமென்று சற்று விளக்குங்கள்” என்பார்கள், அல்லது “நான் பசித்துதான் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள்”. பசி என்றால் என்ன என்பதே பலருக்கு தெரியவில்லை. இளம் பிராயம் முதலாக பசி உருவாகும் முன்பே சாப்பிட பழக்கிவிட்டதால், பசி என்ற உணர்வு எப்படி இருக்கும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

குறிப்பாக மலேசியாவில் பார்க்கும் இடமெல்லாம், உணவகங்கள், 24 மணி நேரமும் உணவுகள் கிடைக்கும். இதுதான் இன்றைய மலேசிய மக்களின் சாபக்கேடு. உணவு கிடைக்கிறது என்பதற்காகவே கண்ட நேரங்களில் பசியில்லாமல், உடலுக்கு எந்த தேவையுமில்லாமல் சாப்பிடப் பழகிவிட்டோம். இது கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு கேடான செயலாகும்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

உரை:
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

பசித்துப் புசி, இதுதான் நம் முன்னோர்கள் வகுத்த உணவுமுறை. இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல், வெறும் ஆசைக்காகவும், கடிகாரம் நேரத்தை காட்டுவதால் உணவை உட்கொள்ள தொடங்கிவிட்டோம்.

பசியில்லாமல் சாப்பிடுவதால் உண்டாகும் கேடுகள்
1. முதலில் பசி இல்லாததால், வயிற்றில் ஜீரண சக்தி இருக்காது. உண்ட உணவு அதிக நேரம் வயிற்றில் தங்கி, வயிற்றிலேயே கெட்டுப்போய், இரசாயனங்களையும், கெட்ட வாயுக்களையும் உண்டாக்கும், இந்த சூழ்நிலை பல உடல் உபாதைகளை உண்டாக்கும்.

2. ஜீரண சக்தி குறைவாக இருக்கும் போது சாப்பிடுவதால், மற்ற உடல் உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய சக்தி ஜீரணத்திற்கு வழி மாற்றி விடப்படும். அதனால் உடலில் மந்தமும், சோர்வும், சக்திக் குறைபாடுகளும் ஏற்படும். மூலை சோர்வடையும் அசதியும், தூக்கமும் உருவாகும்.

3. ஜீரண சக்தி இல்லாமல் சாப்பிடுவதால், உடலின் ஜீரண உறுப்புக்கள் மேலும் வலுவிழந்து, சோர்வடைகின்றன. இந்த நிலையில் ஜீரண உறுப்புக்கள் மேலும் மந்தமாக்கி, ஜீரண சக்தியை அறவே பாழாக்கிவிடும்.

4. ஜீரண சக்தி ஒழுங்காக இல்லாததால், வயிற்றில் செரிமானம் முறையாக நடக்காமல், செரிமானத்துக்குப் பின்பாக உருவாகும் சத்துக்கள், தரமற்றவையாகவும், உடலுக்கு கேடானவையாகவும் அமையும். இந்த நிலையே நீரிழிவு நோய், உடல் பருமன், உடல் வலி, வாயுக் கோளாறுகள் என பல தொந்தரவுகளை உருவாக்குகிறது.

பசி இல்லாமல் உண்ணாதீர்கள். பசி இல்லாமல் உட்கொள்ளும் உணவுகள் உடலுக்கு நன்மைகளை தருவதில்லை. அவை வெறும் கெட்ட சக்திகளையும், தொந்தரவுகளையும், நோய்களையுமே உருவாக்குகின்றன. உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். பசியை உணர்ந்து ஆரோக்கியமாக வாழுங்கள்.


வேளாவேளைக்கு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டுமா?

ஆம், நோயாளிகளாக மாற வேண்டுமென்றால் கடிகார நேரத்திற்கு சரியாக சாப்பிட வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பசித்தால் மட்டும் சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

பசியை அறிந்து, பசியின் அளவுக்கு மட்டும், உடலுக்கு ஒப்புக்கொள்ளும், மேலும் உடலால் எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவை உட்கொண்டால், நோய்கள் உருவாகாமல் தவிர்க்கலாம்.