கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label துன்பம். Show all posts
Showing posts with label துன்பம். Show all posts

வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருப்பது ஏன்?

பலாபழத்தின் மேற்புறத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சுவையான சுளை இருக்கும். பலாப்பழத்தை திறந்து பார்க்காமல் அதன் தோலையே வேடிக்கைப் பார்ப்பதைப் போன்று. வாழ்க்கையில் எது நடந்தாலும் ஏன் நடக்கிறது? அதன் நோக்கம் என்ன? என்று சிந்திக்காமல் அந்த நிகழ்வுகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கை போராட்டமாக தெரிகிறது.

மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதேன்?

மனிதர்கள் இந்த மனித பிறவி எடுத்ததின் நோக்கமே வாழ்க்கை பாடத்தை படிக்கத்தான். இன்பமோ துன்பமோ எது ஒன்று தொடர்ச்சியாக இருந்தாலும் வாழ்க்கை கசந்துவிடும். அதனால்தான் வாழ்க்கையில் இம்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன.

நல்லவர்களுக்கும் வாழ்வில் துன்பங்கள் உண்டாவது ஏன்?.

சிறு வயது முதலாக கனவிலும் யாருக்கும் கெடுதல் செய்யாதவர்கள். யாருக்கும் எந்த வகையிலும் தொந்தரவுகள் கொடுக்காதவர்கள். மனதறிந்து எந்தப் பாவமும் செய்யாதவர்கள். அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணங்களை உடையவர்கள் கூட சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கையில் சில இன்னல்களை அனுபவிப்பார்கள். இதற்கு காரணம் என்ன?.

நல்லவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும். தீயவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை துன்பகரமானதாக இருக்க வேண்டும். இதுதான் எல்லோரும் எதிர்பார்ப்பது. காரணம் அனைவரும் தன்னை தானே நல்லவர்கள் என்றும் மற்றவர்கள் ஏதாவது ஒரு வகையில் தீயவர்கள் என்றும் நம்புகிறார்கள். இன்பம் - துன்பம், நல்லவை - தீயவை, புண்ணியம் - பாவம், அனைவருக்கும் சமமானது. நல்லவர்கள் கெட்டவர்கள் என எந்த பாகுபாடுமின்றி அனைவரும் அனைத்தையும் தங்களின் வாழ்நாளில் அனுபவிப்பார்கள்.

இயற்கையின் நியதியால் உண்டாகும் துன்பங்கள்
சிலர் தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனையாக சில துன்பங்களை அனுபவிப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ எந்த பாவங்களும் செய்யாமல் ஒழுக்கமாக வாழ்ந்தும் பல துன்பங்களை அவர்களின் வாழ் நாட்களில் அனுபவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையை விளங்கிக்கொள்ள மானையும் புலியையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மான் எந்த ஒரு உயிரினத்திற்கும் எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது ஆனாலும் மான்கள் தொடர்ச்சியாக புலிகளால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மானுக்கும் புலிக்கும் எந்த வகையான பகையும் கிடையாது, ஆனால் பசி உண்டானால் புலிகள் மான்களை வேட்டையாடுகின்றன. மான்களை புலிகள் வேட்டையாடும் போது கடவுளோ இயற்கையோ வந்து காப்பாற்றுவது கிடையாது. ஆனால் மான்களுக்கு புலிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள ஏதுவான உடல்வாகும் புத்திக் கூர்மையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு இயற்கையின் நியதி.

இந்த உலகம் நல்லவர்கள் கெட்டவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை உள்ளதாக படைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூமியில் நல்லவர்கள் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை தீயவர்கள் வாழ்வதற்கும் இருக்கிறது. நன்மைக்கான பலனும், தீமைக்கான தண்டனையும் நிச்சயமாக கிடைக்கும். ஆனால் ஒருவர் நல்லவராக வாழ்கிறார் என்பதற்காக அவருக்கு தீயவர்களால் எந்த தீங்கும் செய்ய முடியாது என்று இந்த பூமியில் ஒரு சட்டம் கிடையாது. ஆனால் நல்லவர்கள் தீயவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள எல்லா வாய்ப்புகளும் வழங்கப்படும்

தீய மனிதர்களால் உண்டாகும் துன்பங்கள்
நல்லவர்கள் அவர்களின் ஒழுக்கத்திற்கும், நல்ல எண்ணத்திற்கும், நல்ல செயல்களுக்கும், உரிய பலன்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள். அதே நேரத்தில் தீயவர்கள் தீய செயல்களை செய்யும்போது அதில் சில நல்லவர்களும் பாதிக்கப்படலாம், இதை மாற்ற முடியாது. வயலில் விளைந்திருக்கும் களைகளை பறிக்கும் பொழுது ஒரு சில நெல் கதிர்களும் களைகளோடு சேர்ந்து போய்விடும். இது திட்டமிடப்பட்ட செயலோ அல்லது இயற்கையின் நீதியோ அல்ல. களைப் பறிப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை. நெல்லுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமைகளை பறிப்பவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிலத்தில் வளர்வது நெல்லுக்கும் புல்லுக்கும் உரிமை அதே நேரத்தில் அவற்றை மனிதர்கள் விதைப்பதையும் வளர்ப்பதையும் பறிப்பதையும் இயற்கை அனுமதிக்கின்றது.

அதைப்போலவே நல்ல மனிதர்கள் பூமியில் அமைதியாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், வாழ்வது அவர்களின் உரிமை. அவர்களின் நல்ல வாழ்க்கைக்கு எல்லா வகையிலும் இயற்கையும் இறைவனும் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் நல்ல மனிதர்களுக்கு தீய மனிதர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அதை யாரும் வந்து தடுக்க மாட்டார்கள் . இது சத்தியமான உண்மை. தமிழ்த் திரைப்படங்களில் வருவதைப்போல நல்லவர்களுக்கு தீங்கு ஏற்படும் போது தெய்வங்களோ, ஞானிகளோ, பிற மனிதர்களோ, மற்ற உயிரினங்களை உதவிக்கு வருவார்கள் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

அப்படியென்றால் யாரும் நல்லவர்களாக வாழத் தேவையில்லை அல்லவா. அப்படி இல்லை நல்லவர்களுக்கு ஒரு துன்பமோ, துயரமோ உருவாவதற்கு முன்பாகவே அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்படும். எந்த இடத்தில் அவர்களுக்கு தீங்கு நடக்க வாய்ப்பு இருக்கிறதோ அந்த இடத்துக்கு அவரை செல்ல விடாமல் அனைத்து வகையான தடங்கல்களும் உருவாகும். நல்லவர்களின் வாழ்க்கையில் தீய விசயங்கள் நடக்காமல் எல்லாவகையிலும் இயற்கை அவர்களை பாதுகாக்கும். இயற்கையின் எல்லா அறிவிப்புகளையும், வழிகாட்டுதல்களையும், தடைகளையும், மீறிச் சென்று ஒரு துன்பத்தில் சிக்கிக் கொண்டால் அவர்கள்தான் அதிலிருந்து சுயமாக மீண்டுவர வேண்டும்.

நல்லவர்களுக்கு கிடைக்கும் இறைவனின் உதவிகள்
நல்லவர்கள் துன்பத்தில் இருக்கும்போது இறைவனின் உதவி கிடைக்காத என்றால், நிச்சயமாக கிடைக்கும். ஆனால் அந்த உதவி நேரடியான உதவியாக இருக்காது. உதாரணத்திற்கு ஒரு நல்லவர் வறுமையில் இருக்கிறார் என்பதற்காக பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டாது . பண மூட்டையுடன் எந்த தெய்வமும் அவர் வீட்டுக்கு வராது. ஆனால் வறுமையான சூழ்நிலையிலும் எவ்வாறு நிம்மதியாக வாழமுடியும்? எவ்வாறு அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும்? அதிலிருந்து எவ்வாறு மீண்டு வரமுடியும்? என்று சிந்தனைகளும் எண்ணங்களும் அவர்களின் மனதில் உருவாகிக் கொண்டே இருக்கும். அவர்களை சுற்றிலும் இந்த சூழலிலிருந்து வெளிவருவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் இருந்து கொண்டே இருக்கும். அவர்தான் அவற்றை புரிந்து கொண்டு அந்த வழிமுறைகளை பின்பற்றி பயன்படுத்தி துன்பங்களிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் என்று கூறுவார்களே அது பொய்யா?. இல்லை! நல்லவர்களுக்கு துன்பம் உருவாகும் வரையில் இறைவனும் இயற்கையும் காத்திருக்க மாட்டார்கள். துன்பங்கள் உருவாவதற்கு முன்பாகவே உள்ளுணர்வு மூலமாகவோ, அறிகுறிகள் மூலமாகவோ, பிற மனிதர்கள் மூலமாகவோ, நிச்சயமாக அந்த துன்பங்களை தவிர்க்கும் வழிகளை நமக்கு இறைவனும் இயற்கையும் காட்டுவார்கள்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும் பல வேளைகளில் துன்பங்களில் அல்லது தொந்தரவுகளில் சிக்கிக் கொண்ட பிறகு பெரும்பாலும் நாம் சொல்லும் ஒரு வாக்கியம் “அப்பவே அவர் சொன்னார் நான் தான் கேட்கல” “அப்பவே எனக்கு தோணிச்சு இது சரிவராது என்று” “அப்பவே நினைத்தேன் இது தப்புன்னு” “அப்பவே என் மனசு சரியில்ல”. இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் நாமே இவ்வாறு கூறி இருப்போம். இவைகள் தான் நமக்கு வழங்கப்பட்ட முன்னறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் ஆகும். இவற்றை செவிகொடுத்து கேட்டு சற்று சிந்தித்து செயல்பட்டிருந்தால் துன்பங்களிலிருந்து நாம் விடுபட்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

கர்மாவினால் உண்டாகும் துன்பங்கள்
புத்தர் வாழ்ந்த காலத்தில் சில புத்த துறவிகள் கொள்ளையர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். புத்தரின் சிஷ்யர்கள் இந்த நிகழ்வு சம்பந்தமாக புத்தரிடம் கேட்டார்கள். இந்த துறவிகள் அனைவரும் முற்றும் துறந்தவர்கள் உணவுக்காகக் கூட விலங்குகளை துன்புறுத்தாதவர்கள். சங்கத்தின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்களுக்கு ஏன் கொடூரமான மரணம் நிகழ்ந்தது என்று கேட்டார்கள்.

அதற்கு புத்தர் கூறிய பதில். அகால மரணமடைந்த புத்தத் துறவிகள் இந்தப் பிறவியில் துறவியாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்தாலும் கூட அவர்களின் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களுக்காக அவர்களுக்கு இவ்வாறான துன்பங்களும் மரணமும் ஏற்பட்டது. மேலும் ஒரு மாட்டு வண்டி, அதில் கட்டப்பட்டிருக்கும் காளையை பின் தொடர்வதைப் போல மனிதர்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் அவர்களை பிறவிகள் தோறும் பின் தொடரும் என்றும் கூறினார்.

பிற மனிதர்களின் தவறுகளால் உண்டாகும் துன்பங்கள்
ஒரு விமான விபத்து நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 200 பேர் உயிரிழக்கிறார்கள். அந்த 200 நபர்களுக்கு அகால மரணமடைய வேண்டும் என்று விதி இருந்திருக்குமா?. இல்லை கண்டிப்பாக இருக்காது. இலங்கைப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் துன்பப்பட்டார்கள் மற்றும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் அகால மரணமடைய வேண்டும் என்று விதி இருந்திருக்குமா?. இல்லை கண்டிப்பாக இருக்காது. ஆனால் மனிதர்களுக்கு இயற்கை முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்க்கையில் மாறுதல்களை உருவாக்குகிறார்கள். நல்லவர்கள் நல்ல விளைவுகளையும் தீயவர்கள் தீய விளைவுகளையும் மற்றவர்களின் வாழ்க்கையில் உருவாக்குகிறார்கள்.

உலக வாழ்க்கையின் சட்டம்
கர்மாவினால் உண்டாகும் துன்பங்களை தவிர்ப்பது மிக கடினம். அதைத் தவிர மற்ற அனைத்து வகையான துன்பங்களையும் சற்று கவனமாக இருந்தால் தவிர்க்க முடியும்.

நல்லவர்களுக்கு இந்த பூமியில் எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை தீயவர்களுக்கும் இருக்கிறது. எந்த தீயவரும் எந்த நல்லவருக்கும் கெடுதல்கள் செய்ய முடியும். அதனால் நீங்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட அவர்களிடமிருந்து எந்த ஒரு தொந்தரவும் உருவாகாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருங்கள். இயற்கை காட்டும் வழிகளைப் பின்பற்றுங்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை தெளிவாக கவனித்து பின்பற்றி வாருங்கள். மாற்றவே முடியாதவற்றை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும். வாழ்க வளமுடன்.