கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label திரிகால ஞானம். Show all posts
Showing posts with label திரிகால ஞானம். Show all posts

முக்காலத்து செய்திகளும் கிடைக்கும் வழிமுறைகள்

மன ஓர்மை பெற்றவர்களுக்கு திரிகாலத்தில் இருந்தும் எவ்வாறான செய்திகள் கிடைக்கும்? அந்த செய்திகள் எவ்வாறு அவர்களை வந்தடையும்?

இந்த ஆற்றலை பெற்றவர்களுக்கு தொடக்கத்தில் அவர்கள் விரும்பிய செய்திகளை அறிந்துக்கொள்ள முடியாது. எதர்ச்சையாக ஓரிரு செய்திகள் மட்டுமே அவர்களை வந்தடையும். அவர்களின் மனமானது பக்குவமடைய தொடங்கும்போது, அவர்களுக்கு நன்மை தரக்கூடிய செய்திகளும். அவர்களை எச்சரிக்கும் செய்திகளும் கிடைக்கும். பின்பு அவர்களின் குடும்பத்தார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஏற்படக்கூடிய கெடுதல்கள் எச்சரிக்கை செய்திகளாக கிடைக்கும்.

பின்பு அவர்களின் குடும்பத்திலும், உறவிலும் நடக்கவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகள் முன்னதாகவே கிடைக்க தொடங்கும். பிறகு சிறிது காலத்தில், மற்ற மனிதர்களின் வாழ்விலும், இந்த உலகத்திலும் நடக்கவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்கள் தெரிய தொடங்கும்.

மனம் முதிர்ச்சி அடையும்போது அவர்களின் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கான காரண காரியங்களும் விளங்கத் தொடங்கும். பின்பு இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு முற்கால வாழ்கையில் நடந்த நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்புகள் கிடைக்க தொடங்கும். இப்போது செய்யும் செயல்கள் பிற்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் விளங்கும். இறுதியாக அவர்கள் விரும்பும் காலத்துக்கு மனம் சென்று, விரும்பிய காலத்தில் நடந்த, நடக்கும் மற்றும் நடக்கவிருக்கும் விஷயங்களை அறிந்துக் கொள்ளலாம்.

செய்திகள் கிடைக்கும் வழிமுறைகள்

1. சிலருக்கு காதுகளில் மெல்லிய குரலாக செய்திகள் கேட்கும்

2. சிலருக்கு மனதுக்குள் குரலாக செய்திகள் கிடைக்கும்.

3. சிலருக்கு மனதுக்குள் எழுத்துக்களாகத் தெரியும்.

4. சிலருக்கு அந்த நிகழ்ச்சி அவரின் முன்பாக நடப்பதை போன்றும், அவர் அதை காண்பதை போன்றும் இருக்கும்.

5. சிலருக்கு சில நிகழ்வுகள் நிழலைப் போன்று தெரியும்.

6. சிலருக்கு புகைப் போன்றும் நிழலைப் போன்றும் உருவங்களும், காட்சிகளும் தெரியும்.

7. சிலருக்கு நடக்கவிருக்கும் அல்லது நடந்த விசயங்கள் சினிமா காட்சிகளைப் போன்று கண்களுக்குள் ஓடும். சிலருக்கு மனதுக்குள் ஓடும். சிலருக்கு தலைக்குள் ஓடும்.

8. சிலருக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகள் முன்கூட்டியே கனவில் காட்டப்படும்.

9. சிலருக்கு மற்ற மனிதர்கள் மூலமோ, பத்திரிக்கைகள், புத்தகங்கள், தொலைக்காட்சி, வானொலி, போன்ற விசயங்கள் மூலமோ உணர்த்தப்படும்.

10. சிலருக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகள் நடந்துவிட்டவைப் போன்றும் அதை அவர் முன்கூட்டியே கண்டுவிட்டதை போன்றும் அனுபவித்ததைப் போன்றும் தோன்றும்.

11. சிலருக்கு மனதுக்குள்ளேயே விவாதங்கள் நடக்கும். அதாவது அவரே கேள்விகளை கேட்டுக்கொண்டு, அவரே பதில்களையும் சொல்லிக்கொள்வார். ஆனால் அந்த பதிலை அப்போதுதான் அவர் முதன் முதலில் அறிவார். அந்தக் கேள்விகளும், பதில்களும் அவருக்கு அறிவிக்கப்படுகின்ற செய்திகளாக இருக்கும். மனதுக்குள் நடைபெறும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி, அவருக்கு தெரியாத விஷயங்களை அவருக்கு கற்றுத்தரும் ஒரு வழிமுறையாகும்.

சிலருக்கு இவற்றில் ஒன்று இருக்கும், சிலருக்கு இவற்றில் சில இருக்கும், சிலருக்கு அனைத்துமே இருக்கும். சிலருக்கு மற்ற வழிமுறைகளிலும் செய்திகள் கிடைக்கலாம். இதுவும் அவர் அவர் கர்மப் பலனை பொறுத்தே அமையும்.

நடக்கப்போகின்ற, விஷயங்களை எவ்வாறு அறிந்துக்கொள்கிறார்கள்?

நடந்த, நடக்கின்ற, நடக்கப்போகின்ற, விஷயங்களை எவ்வாறு அறிந்துக் கொள்கிறார்கள்?.

இப்போது நடக்கின்ற ஒரு விஷயத்தை விளக்கினால் புத்திக் கூர்மை என்று கூறலாம். பல வருடங்களுக்கு முன்பாக நடந்து முடிந்த ஒரு விஷயத்தை இன்று திடீரென உணர்ந்துக் கொள்கிறார்கள் என்றால், அதற்குரிய விளக்கம் கூறுகிறார்கள் என்றால் அதை எவ்வாறு விளக்குவது? நடந்து முடிந்தவற்றை எப்படியோ அறிந்துக் கொண்டார்கள் என்றாலும், இன்னும் நடக்காத பல வருடங்கள் கடந்து நடக்கவிருக்கும் ஒரு விஷயத்தை இன்றே முன்னறிவிப்பு செய்கிறார்கள் என்றால் அதை எவ்வாறு விளக்குவது? அந்த விசயங்கள் அவர்களுக்கு எவ்வாறு தெரிந்தது?

அது ஒன்றும் பெரிய வித்தையல்ல, அதுதான் மனதின் ஆற்றல். மனமானது முக்காலத்திலும் பயணிக்கும் ஆற்றலுடையது. மனமானது ஒருநிலையில் நிற்கும்போது, அது தனது கால எல்லைகளை கடந்துவிடுகிறது. ஒருவரின் மனம் ஒருநிலையில் நிற்கும்போது அவர் முக்காலத்திலும் நடந்த விசயங்களை அறிந்துக்கொள்ளும் ஆற்றலை பெறுகிறார். மனம் மட்டும் ஒருநிலை பெற்றுவிட்டால், இந்த உலகத்து உயிர்களும் இயற்கையும் உற்பட இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அவருக்கு கட்டுப்படும்.

ஒரு சிலருக்கு பிறக்கும்போதே இந்த ஆற்றல் இருந்து பின் மறையும். ஒரு சிலருக்கு பிறந்து சில காலங்களில் உருவாகும். ஒரு சிலருக்கு சில பயிற்சிகளின் மூலமாக சித்திபெறும். ஆனால் ஒரு சிலருக்கு பிறந்தது முதல் இறுதி வரையில் இருக்கும். இந்த ஆற்றல் தன்னிடம் இருப்பதை சிலர் உணர்வார்கள், சிலர் உணரவே மாட்டார்கள். அனைத்துமே அவர் அவர் கர்ம பலன்களை பொறுத்து அமையும்.


திரிகால ஞானம் என்பது என்ன?

திரிகால ஞானம் என்பது என்ன?
திரிகாலம் என்ற சொல் மூன்று காலங்களை குறிக்கிறது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். இவை மூன்றையும் அறிந்துக் கொள்ளக்கூடிய ஆற்றல்தான் திரிகால ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

திரிகால ஞானம் உடையவர்கள் தன் வாழ்விலும், தன் அன்புக்குரியவர்களின் வாழ்விலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்விலும், எதிர்காலத்தில் நடக்கக் கூடிய முக்கியமான விஷயங்களை முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். ஒருவர் ஒரு விஷயத்தை இவரிடம் கூறும்போதே, அது நடக்குமா நடக்காதா?, வெற்றி பெறுமா பெறாதா? அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்று முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஆற்றலையும் பெற்றிப்பார்கள்.

உறவினர்களின் நோய்களையும், துன்பங்களையும், அழிவுகளையும், மரணங்களையும், அவர்கள் வாழ்வில் நடக்கக் கூடிய நல்ல விஷயங்களையும், தீய விஷயங்களையும் முன்கூட்டியே கணிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்கள் மட்டுமின்றி, தற்போது நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களைக் கூட அவை ஏன் நடக்கின்றன? என்ன காரணத்திற்காக நடக்கின்றன? அவற்றின் மூலம் என்ன? அவற்றின் நோக்கம் என்ன? அவற்றின் முடிவுகள் என்னவாக இருக்கும்? என்பனப போன்ற நிகழ்காலத்தைப் பற்றிய அறிவும், தெளிவும், விளக்கங்களும் இவர்களுக்குக் கிடைத்துவிடும்.

அவற்றைப் போலவே கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கான, காரண காரியங்களும், அவற்றுக்கும் நிகழ்காலத்துக்கும் உள்ள தொடர்புகளும், அந்த நிகழ்வினால் எதிர்காலத்தில் விளையக்கூடிய விளைவுகளும், இவர்களுக்கு முன்கூட்டியே அறியமுடியும். பல வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு காரியம் அல்லது ஒரு செயலின் விளைவு இன்று நிகழ்காலத்தில் எவ்வாறு விளைச்சலைத் தருகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு அமையப் பெற்றிருப்பார்கள்.

இன்று செய்து கொண்டிருக்கும் ஒரு காரியம், எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகளை விளைவிக்கும் என்றும் அறிந்து கொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கும். ஒரு சிலருக்கு விலங்குகளின் முக்காலத்து வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். இன்னும் சிலருக்கு மற்றவர்கள் வாழ்விலும், தனது ஊரிலும், நாட்டிலும், உலகத்திலும் முக்காலத்திலும் நடந்த, நடக்கின்ற மற்றும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் கூட கணிக்கும் ஆற்றல் இருக்கும்.

இவ்வாறு நடந்த நடக்கின்ற மற்றும் நடக்கப்போகின்ற முக்காலத்து விஷயங்களையும் அறியக்கூடிய ஆற்றலை திரிகால ஞானம் என்றும். இந்த ஆற்றலை உடையவர்களை திரிகால ஞானிகள் என்றும் அழைப்பார்கள்.

திரிகால ஞானம் பயனுள்ளதா பயனற்றதா?

முயற்சியும் உழைப்பும் இருந்தால் திரிகால ஞானத்தை அனைவராலும் அடைந்துவிட முடியும். ஆனால் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் அதை அடையாமல் இருக்கும் வரையில்தான் மனிதன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நாளை நடக்கப்போகின்ற ஒரு விஷயம் இன்றே தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு வாகன விபத்து இன்றே தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? பத்து வருடங்கள் கழித்து நடக்கவிருக்கும் ஒரு சொத்து இழப்பு இன்றே தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்?

உங்கள் அன்புக்குரிய ஒருவர் உங்களுக்கு துரோகம் செய்யப்போகிறார் என்று முன்கூட்டியே தெரிந்து விட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் அன்புக்குரிய ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாளில் மரணமடையப் போகிறார் என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால் எப்படி இருக்கும்? மனம் பக்குவ நிலையை எட்டி விட்டவர்களுக்கு இவை எதுவுமே பெரிதாக தெரியாது. ஆனால் மற்றவர்களுக்கு, இந்த விசயங்கள் நடந்து பின் வேதனைகளை உண்டாக்குவதை விடவும். இவ்வாறு நடக்கப்போகிறதே என்ற எண்ணமே பெரும் வேதனையை உண்டாக்கிவிடும்.

உங்கள் அன்புக்குரிய ஒருவர் பல வருடங்களுக்கு முன்பாக உங்களுக்கு துரோகம் செய்திருக்கிறார் என்பது இப்போது தெரிந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அல்லது அந்த விசயம் இப்போது தெரிந்ததால் ஏதாவது நன்மை உண்டாக போகிறதா? முடிந்தவை கடந்து சென்று விட்டவை அவற்றை அறிந்துக் கொண்டால் என்ன? அறிந்துக் கொள்ளவில்லை என்றால் என்ன? இரண்டுமே ஒன்றுதான்.

பல வேளைகளில் என் குடும்பத்தாருக்கு நடக்கவிருக்கும், துன்பங்களையும், நோய்களையும், நஷ்டங்களையும், மரணங்களையும், முன்கூட்டியே தெரிவித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை எதையுமே பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, நான் சொன்ன விஷயம் நடக்கும் போது இவன் சொன்னதால்தான் இவ்வாறு நடந்தது என்று, என் மீது பழியைப் போடுகிறார்கள்.

என்னை ஏதோ கெட்ட சகுனமாக மட்டும்தான் எண்ணுகிறார்கள். இவன் கெட்ட விசயங்களை மட்டும்தான் பேசுவான், எதையுமே தடங்கள் செய்வான் என்று எண்ணுகிறார்கள். அவர்களின் மீது பரிதாபப்பட்டு, அவர்கள் துன்பங்களிலும் கஷ்டங்களிலும் இருந்து தப்பித்து நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் வாழட்டும் என்று நடக்கவிருக்கும் விசயங்களை முன்னெச்சரிக்கை செய்தால், அதை கெட்ட சகுனம் என்கிறார்கள். இவர்களைப் பார்த்து எனக்கு பரிதாபமாகவும் இருக்கிறது, கோபமும் உண்டாகிறது.

ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துக் கொண்டேன். எந்த மனிதனும் தன் விதியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. அவனுக்கு விதிக்கப்பட்டவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இன்று வரையில் நான் எச்சரிக்கை செய்த அத்தனை விசயங்களும் நடந்துவிட்டன. ஆனால், நான் முன்கூட்டியே தெரிவித்தும் அதை பயன்படுத்தி துன்பங்களில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள், ஒருவர் கூட கிடையாது.

விலங்குகளின் திரிகால ஞானம்

திரிகால ஞானம் அனைத்து உயிரினங்களுக்கும் பிறவியிலேயே இருக்கும். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு சுனாமி வந்தபோது, கடலில் இருந்து மீன்கள் எதுவும் கரைக்கு வரவில்லை. பல கோடி லிட்டர் கடல்நீர் நிலத்துக்கு வந்த போதும், கடல்வாழ் உயிரினங்கள் எதுவுமே நிலத்துக்கு வரவில்லையே ஏன்? சுனாமி வருவதற்கு முன்பு சில நாட்களாக மீனவர்களுக்கு வலைகளில் மீன்கள் குறைவாகவே கிடைத்தன.

அலைகள் உயரமாக எழுந்து கரைக்கு செல்லப்போகிறது. நாம் கரையோரம் இருந்தால் நாமும் கரைக்கு சென்றுவிடுவோம் என்பது கரையோரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்களுக்கு தெரிந்து அவை ஆழ்கடலுக்குள் சென்றுவிட்டன. கடல்வாழ் உயிரினங்களுக்கு பூமியில் நடக்கவிருக்கும் விஷயங்கள் முன்கூட்டியே தெரிகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு அத்தாட்சி.

அதைப்போல் சுனாமி வந்த பொழுது காடுகளில் வாழ்ந்த விலங்குகளும் செத்ததாக ஒரு செய்திக் கூட நமக்கு எட்டவில்லை. மனிதர்கள் அடைத்து அல்லது கட்டி வைத்து வளர்த்த விலங்குகள் மட்டுமே இறந்தன. மற்றபடி காடுகளில் இயற்கையோடு வாழ்ந்த எந்த விலங்குகளும் மரணிக்கவில்லை. அனைத்து விலங்குகளும் சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து கடலிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டன.

காடுகளில் வாழும் விலங்குகளுக்கு வறட்சி காலம் வரப்போவது முன்கூட்டியே தெரிகிறது. மழை பெய்யப்போவது முன்கூட்டியே தெரிகிறது. கால பருவ மாற்றங்கள் நிகழப்போவதும் முன்கூட்டியே தெரிகிறது.

இன்றும் கூட நம் கிராமங்களில் விலங்குகளைப் பார்த்தும், பறவைகளைப் பார்த்தும், சில விசயங்களை கணிப்பார்கள். இவற்றையெல்லாம் நாம் மூட நம்பிக்கைகள் என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் விலங்குகளுக்குள் திரிகால ஞானம் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை அறிந்த நம் முன்னோர்கள் அந்த சக்தியை பயன்படுத்திக் கொண்டார்கள்.

திரிகால ஞானம் அனைவருக்கும் இருக்கும், என்று சொன்னீர்களே அது எங்களுக்கும் இருக்குமா? என்றால் ஆம்! உங்களுக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் அது எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்வதானால், ஒரு பக்கவாதம் வந்த நபருக்கு இருக்கும் கை கால்களைப் போன்று இருக்கும். இருக்கும் ஆனால் அது முழுமையாக செயல்படாது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனமும் நம் முன்னோர்களும் திரிகால ஞானத்தை நம்பாததாலும், பயன்படுத்தாததாலும் அவர்களின் வாரிசுகளான நமக்கு அந்த ஆற்றல் உயிர்ப்போடு இல்லை.

ஆனாலும் நம்முடைய மரபணுவில் எதிர்கால ஞானத்தின் கோட்பாடுகளும் ,அவற்றின் ஆற்றல்களும் நிச்சயமாக இருக்கும். உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் மாற்றி யோகா, மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால், திரிகால ஞானத்தை நிச்சயமாக அனைவரும் அடைவது சாத்தியமான ஒன்றுதான்.

திரிகால ஞானத்தை அடையும் வழிகள்

திரிகால ஞானம் என்பது அடைய முடியாத சக்தியல்ல. திரிகால ஞானம் என்பது மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய ஒரு ஆற்றல் ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் இந்த சக்தியைப் பயன்படுத்தாததால் மனித இனத்திடம் இந்த சக்தியின் பயன்பாடு மிக மிக குறைந்து, ஆற்றல் இல்லாமல் இருக்கிறது.

திரிகால ஞானத்தை அடைய மிக முக்கியமாக தேவை மன பக்குவம். முதலில் மனதை புரிந்துக்கொண்டு, பின்பு மனதைக் கவனிக்க தொடங்க வேண்டும். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனதின் ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். தினமும் தியானம் செய்து மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தொழுகை, உண்ணா நோம்பு, மௌனவிரதம், தெய்வ வெளிப்பாடு, குரு உபதேசங்கள், மந்திர உச்சாடனை, போன்றவையும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு செய்தால் மனம் மெல்ல நமக்கு கட்டுப்பட்டு நடக்க தொடங்கும். மனம் தன் ஆசைகளுக்கு நம்மை பயன்படுத்தாமல், நம் தேவைகளை பூர்த்திசெய்ய ஊழியம் செய்ய தொடங்கும். இந்த உலகில் எதுவுமே எளிதாக கிடைக்காது. கடுமையான உழைப்பும், முயட்சியும் இருந்தால் எதுவுமே இந்த உலகில் சாத்தியம்தான்.

விதியிலோ கர்மாவிலோ தடைகள் இருந்தால் திரிகால ஞானம் சித்தியாகாது.