புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label தன்முனைப்பு. Show all posts
Showing posts with label தன்முனைப்பு. Show all posts

விரும்பியதை அடையும் வழிகள்


ஒரு விவசாயியின் நோக்கமென்ன? அவரின் தேவையென்ன?. போதிய விளைச்சல், அவ்வளவுதானே?. அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவைகள் நிறைவேறுகின்றன. அந்த விளைச்சலுக்கு நேரடியாக அவர் எதையாவது செய்தாரா?. அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா?. எதுவுமே கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது.

அவ்வாறானால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவுமே செய்யவில்லையா? என்றால். எதுவுமே செய்யாமல் எவ்வாறு பலன் கிடைக்கும்?. கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளை தூவினார், தேவைப்படும் போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரமிட்டார், களையெடுத்தார், நெற்பயிர்கள் உருவாக சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துதந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு உரிய சன்மானம் கிடைத்தது, அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மனிதன் ஆசைப்படும் அனைத்தையும் இயற்கை வழங்கும், மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமுமில்லை. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரமில்லை.

மனிதன் எதை நோக்கி தன் உழைப்பை போடுகிறானோ அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் இயற்கை உதவி செய்யும், அது கண்டிப்பாக கொடுக்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் கடவுளும் இயற்கையும் குறுக்கிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்கு தேவையானதை தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

எதை பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். உங்கள் ஆசைகள் நிறைவேற உங்களால் முடிந்த உழைப்பை மட்டும் வழங்குங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயமாக நிறைவேறும்.

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.