கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

நமது தேவைகளை நிறைவேற்ற பிரபஞ்சம் காத்திருக்கிறது.

மனிதன் விரும்பும் அனைத்தும் அவனுக்குக் கிடைக்குமா? அவனது ஆசைகள் நிறைவேற அவன் ஏதாவது செய்ய வேண்டுமா? கடவுளும் இயற்கையும் எந்த வகையில் மனிதனுக்கு உதவுவார்கள்? இவ்வாறான  கேள்விகளுக்கு விளக்கம் புரிய ஒரு உதாரணம் கூறுகிறேன்.

ஒரு விவசாயி கால நேரம் கருதாமல் கடுமையாக உழைப்பதின் நோக்கமென்ன? அவரின் தேவையென்ன? ஒரு விவசாயியின் மிகப்பெரிய ஆசை போதிய விளைச்சல் மட்டும்தானே?. அவர் ஆசைப்பட்டதைப் போலவே வயல் முழுவதும் நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவை நிறைவேறுகிறது.

அந்த விளைச்சலை உண்டாக்க, நேரடியாக அந்த நெற்கதிர்களுக்கு அவர் எதையாவது செய்தாரா? அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா? எதுவும் கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவாகிறது.

அப்படியென்றால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவும் செய்யவில்லையா? என்றால்... செய்யாமல் எப்படி இருப்பார்? கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளைத் தூவினார், தேவைப்படும்போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரம் போட்டார், களை எடுத்தார், நெற்பயிர்கள் உருவாகத்  தேவையான சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துத் தந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்தது, அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதுதான் மனித வாழ்க்கை.

மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் பிரபஞ்சம் வழங்கும். அவனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு.  ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரம் மனிதனுக்குக் கிடையாது. மனிதன் எதற்காக உழைக்கின்றானோ, அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ, கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் பிரபஞ்சம் உதவி செய்யும், அது நிச்சயமாக  வழங்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும்  கடவுளும், இயற்கையும் குறுக்கிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்குத் தேவையானவற்றை தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இரகசியத்தைப் புரிந்துக் கொள்ளாமல் ஆசைகளை மட்டும் உருவாக்கிக் கொள்வதில் எந்த பயனுமில்லை. உங்களின் தேவைகள்  நிறைவேற, உங்களால் இயன்ற உழைப்பை மட்டும் வழங்குங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். நீங்கள் நினைத்தவை நிச்சயம் நிறைவேறும்.

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.


தியானத்தில் மனம் வெளிப்படுத்தும் இரகசியங்கள்

மனதுடன் பேசவும், மனதிடமிருந்து இரகசியங்களையும், தகவல்களையும் அறிந்துக் கொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை.

மனிதர்களின் இடையூறுகள் இல்லாத ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த தியான முத்திரையை பயன்படுத்துங்கள். தியானத்தில் அமைதியாக அமர்ந்து, உங்களை கவனிக்க தொடங்குங்கள்.

நீங்கள் சுவாசிப்பதை கவனியுங்கள். உங்கள் மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள் செல்கிறது என்பதை கவனியுங்கள். உடலின் உள்ளே அந்த காற்று எங்கெல்லாம் பிரயாணம் செய்கிறது என்பதை கவனியுங்கள். அந்த மூச்சுக் காற்று எவ்வாறு உள்ளே செல்கிறது, எங்கெல்லாம் பயணப்பட்டு பின்பு எவ்வாறு உடலை விட்டு வெளியேறுகிறது என்பதை கவனியுங்கள்.

எந்த கற்பனையும் செய்ய வேண்டாம். மந்திரங்களை ஜெபிக்க வேண்டாம். எந்த வார்த்தையையும் உச்சரிப்பு வேண்டாம் அமைதியாக இருந்தால் போதும். சிறிது நேரத்தில் மனம் அமைதி அடையும்.

அமைதியான மனம், உங்களிடம் தன் கவலைகளை வெளிப்படுத்தலாம், உங்களுக்கு தேவையான தகவல்களை, தரலாம் நடக்கப் போகின்ற விஷயங்களை தெரியப்படுத்தலாம், முன்னெச்சரிக்கையாக நடக்கவிருக்கும் தவறுகளை தெரியப்படுத்தலாம், புதிய அறிவு தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். உலகின் இரகசியங்களை கூட உங்களுக்கு அறிவிக்கலாம்.

எந்த விஷயமாக இருந்தாலும் மனம் சொல்வதை கேட்டுக் கொண்டு மட்டும் இருங்கள் அதை கட்டுப்படுத்தவோ அல்லது அதற்கு பதில் சொல்லவோ வேண்டாம். வெறும் பார்வையாளர்களைப் போல் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருங்கள்.

இந்த கவனிப்பு, இந்த ஒருமை, தொடர்ந்து இருந்தால்; உங்கள் மனம் சக்தி பெற்று பல அரிய தகவல்களையும், அமானுஷ்யமான விஷயங்களையும், இரகசியங்களையும், உங்களுக்கு வெளிப்படுத்தும். உங்கள் மனமே உங்களுக்கு வழிகாட்டும். சில கால தியானப் பயிற்சிகளுக்கு பின்பு, உங்கள் மனம் சாதாரண விழிப்பு நிலையில் இருக்கும் போதே உங்களுடன் உரையாடும். உங்களுக்கு தேவையான தகவல்களை தரும், உங்களுக்கு வழிகாட்டும்.

இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால். தியானத்திலோ, அல்லது பொதுவிலோ முதலில் மன இச்சை என்று அழைக்கப்படும், உங்களின் மனதின் ஆசைகளே உங்களுடன் முதலில் பேசும். அது உங்களுக்கு எந்த நன்மையையும் தராது. அது தனது கற்பனைகளை, ஆசைகளை, வக்கிரங்களை, மற்றும் நம்பிக்கைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்.

உன்னிப்பாக மனதின் வார்த்தைகளை கவனிக்க பழகினால், எளிதாக வித்தியாசப் படுத்தி புரிந்துகொள்ளலாம்.


மனம் ஒரு அற்புத ஆற்றல்

மனம் என்பது என்ன?
மனம் என்பது உடலில் உள்ள ஒரு உறுப்பல்ல மாறாக, மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாராலும் பார்க்கவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது.

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையில், சில விகிதாச்சாரங்களில் வழங்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும்.

மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கும் மனம் இருந்தாலும் அவற்றின் மனம் மனிதர்களை போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களை போன்று அனைத்து விஷயங்களையும் பதிவு செய்வதும் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக செயல்படுகிறது.

மனம் எவ்வாறு செயல் புரிகிறது? 
மனமானது மனிதன் பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும், உணரும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறது. மனிதன் உறக்கத்தில் இருந்தாலும், உணர்ச்சிகளற்று இருந்தாலும், அவ்வளவு ஏன் கோமா நிலையில் இருந்தாலும் கூட மனம் வேலை செய்யும். மனம் பதிவுகள் செய்வது மட்டுமின்றி, பதிவு செய்தவை தொடர்பான மற்ற விஷயங்களையும் ஆராயும். அதே நேரத்தில் மனதின் பதிவுகள் தொடர்புடைய மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும், தொடர்பு படுத்தவும் செய்யும்.

இன்றும் நாம் பெரியவர்களான பிறகும் கூட, சில விஷயங்களை அல்லது சில பொருட்களை பார்க்கும் போதும். சிறு வயதில் இதற்காக ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை என்று கூறுவதுண்டு. சில விஷயங்களை செவிமடுக்கும் போது எங்கேயோ கேட்ட ஞாபகம் என்று கூறுவதுண்டு. சில மனிதர்களை பார்க்கும் போதும், சில இடங்களுக்கு செல்லும் போதும், எப்போது சந்தித்த உணர்வுகள் வருவதுண்டு. இவை அனைத்து நம் மனதில் பதிந்த உணர்வுகள் தான்.

மனதின் திறன் 
மனதின் திறனை விளக்க பல கட்டுரைகள் எழுத வேண்டும். அவற்றை பின் நாட்களில் எழுத முயற்சிக்கிறேன். இப்போது நீங்கள் புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை, கால போக்கில் மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது எதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் நீங்களே மறந்துப் போன ஒரு விஷயத்தை கூட உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். அந்த பொருளை தேடிக்கொண்டிருக்கும். வாய்ப்புகள் அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும். இதைப் போன்ற அனுபவங்கள் பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம்.

பொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் மனிதர்கள், அடைய துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து, அதற்கான முயற்சியில் தொடர்ந்து செயல் புரிந்துக் கொண்டே இருக்கும். மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் மனதில் இருக்கும் பதிவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனிதர்களுக்கு விளங்குவதில்லை.

மனிதர்களின் மனம் 
மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி மனம் பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அளித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.

மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடலின் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்கக் கூடியது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை அனைத்தும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்துவிடும்.

மனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் என்பவை என்ன?

ஒருவர் தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாட்டை அல்லது எல்லையை வகுத்துக்கொண்டு. என்னால் அவை முடியும் இவை முடியாது என்று கற்பனைகளை வளர்த்துக்கொள்வதுதான் எதிர்மறை எண்ணங்கள்.

தீய எண்ணங்கள் எதனால் தோன்றுகின்றன?

மனதினுள் இருக்கும் தவறான பதிவுகளினால்தான் தீய எண்ணங்கள் உருவாகின்றன. நல்ல விசயங்களைப் பார்க்கும் போதும், கேட்கும் போது, வாசிக்கும் போது, அனுபவிக்கும் போது, மனதின் பதிவுகள் நல்ல பதிவுகளாக மாறும். அதன் பிறகு தீய எண்ணங்கள் சுயமாக நீங்கிவிடும்.