புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

மெய் ஞானம் என்பது என்ன?

ஞானம் என்பது என்ன? அதை எவ்வாறு அடைவது? என்று பலருக்கு கேள்விகள் இருக்கலாம். ஞானம் அடைவதற்கு பல வகையான முயற்சிகளையும், பயிற்சிகளையும், பலர் மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்பதை பார்த்தால், மிக சொற்பமான நபர்கள் மட்டுமே ஞானம் அடைந்துள்ளனர். ஞானம் என்பது அடைவதற்கு மிக கடுமையான விஷயமா என்றால் நிச்சயமாக கிடையாது.

ஞானமடைய முயற்சி செய்த பலர் இறுதி வரையில் எதையுமே அடையாமல் மரணித்ததற்கு காரணம், பலர் ஞானம் என்பது ஏதோ ஒரு வித்தை அல்லது ஒரு சக்தி என்று எண்ணுகிறார்கள். ஞானம் என்பது அடையக்கூடிய ஒரு விஷயம் அல்ல. ஞானம் என்பது ஒரு தெளிவு நிலை மட்டுமே என்பது உணராததால், அவர்கள் ஞானத்தை தேடிக்கொண்டே இருந்துவிட்டார்கள்.

உண்மையான ஞானம் என்பது என்னவென்று சொல்லட்டுமா? “அடைவதற்கு இந்த உலகில் எதுவுமே கிடையாது” என்பதை உணரும் தெளிவு நிலைதான் ஞானம்.

உதாரணத்துக்கு இந்தியக் கலாச்சாரத்தில் துறவிகளை, மிகவும் மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்துவார்கள். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் துறவிகள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் மனித வாழ்க்கையில் மனிதன் அடையக்கூடிய உச்சக்கட்ட தெளிவான, உச்சக்கட்ட ஞானமான, துறவு என்பதை அவர்கள் அடைந்து விட்டார்கள். துறவு என்பது என்னவென்றால், இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை, எதுவுமே உண்மை இல்லை, என்ற ஞானத்தை பெறுவது தான் துறவு. குடும்பத்தை விட்டுவிட்டு காட்டுக்கு செல்வதோ, பிச்சை எடுப்பதோ ஆசிரமத்தில் சேருவதோ, துறவு அல்ல. புத்தர் குடும்பத்தை விட்டுச் சென்றாரே, பிச்சை எடுத்தாரே, காட்டில் வாழ்ந்தாரே என்று கேட்பவர்களுக்கு சொல்கிறேன்; நாம் புத்தர் அல்ல.

குடும்பத்தைத் துறந்து, பிச்சை எடுத்து, காட்டில் வாழ்ந்த புத்தர் யாரையுமே அவ்வாறு செய்ய சொல்லவில்லை. புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பாக புத்த மதத்தில் சேர்ந்து, அப்போது புத்த மதத்தில் இருந்த வழக்கமான துறவு வாழ்க்கையைத் தான் அவர் பின்பற்றினாரே ஒழிய; காட்டில் வாழும் துறவு முறை என்பது புத்தர் உருவாக்கியது அல்ல. புத்தர் ஞானம் அடைந்த பின்பு மக்களோடு மக்களாக நாட்டில் தான் வாழ்ந்தார். குடும்பத்துடன் வாழ்ந்தாலும், சமுதாயத்தில் இருந்தாலும், தான் ஒரு தனி உயிர் என்ற உணர்வுடன் வாழ்வது தான் துறவு.

இந்த உலக ஆசைகளுக்கு அடிமையாகி, மன இச்சைகளை, தீர்த்துக் கொள்ள, இந்த வாழ்க்கையை பயன்படுத்தாமல். இந்த வாழ்க்கையில் பற்று வைக்காமல், அடுத்த பிறவியை நோக்கி பற்றில்லாமல் முன்னேறுவதுதான்; மிக உயரிய ஞானமாக இருப்பதால்; அந்த ஞானத்தை அடைந்த துறவிகளை இந்திய சமுதாயம் மிகவும் மதித்துப் பாராட்டியது.

மீண்டும் ஞானத்துக்கு வருவோம். ஞானம் என்பது அடையக்கூடிய ஒரு பொருளோ பயிற்சி செய்ய வேண்டிய ஒரு விஷயமோ கிடையாது. ஞானம் அடைவது எவ்வாறு என்று பார்த்தால், ஞானம் அடைவது முதலில் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும். இறைவன் நம் உடலை எவ்வாறு படைத்திருக்கிறார், என்பதை முதலில் கவனிக்க வேண்டும். உணர வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும். மனம், புத்தி, மற்றும் உயிர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

அடுத்ததாக நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள், நம் குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்களை ஆராய வேண்டும். அவர்கள் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்னென்ன குணாதிசயங்களுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுக்கும் நமக்கும் என்ன உறவுகள் ஏற்படுகின்றன? எப்படி ஏற்படுகின்றன? என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன? ஏன் அந்த உணர்வுகள் ஏற்படுகின்றன? இவையெல்லாம் ஏன் ஏற்படுகின்றன என்பதை சிந்திக்க வேண்டும், ஆராய வேண்டும்.

அடுத்ததாக நம்மை சுற்றி இருக்கும் விலங்குகள். அவை எவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றன? அவை எவ்வாறு வாழ்கின்றன? எவ்வாறு அன்பு கொள்கின்றன? என்பன போன்ற விஷயங்களை ஆராய வேண்டும்.

அடுத்ததாக இயற்கை. மரம், செடி, கொடி, தாவரங்கள், பூச்செடி போன்றவற்றை கவனிக்க வேண்டும். பூக்கள் எவ்வாறு மலர்கின்றன? இலைகள் எவ்வாறு காய்கின்றன? காய்ந்த இலைகள் எவ்வாறு உதிர்கின்றன? அதன் வேர்கள் எவ்வாறு ஆழமாகச் செல்கின்றன? போன்றவற்றை கவனிக்க வேண்டும், ஆராயவேண்டும்.

அடுத்ததாக வானம், பூமி, நிலா, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், போன்றவை, எவ்வாறு படைக்கப்பட்டு இருக்கின்றன? அவை எவ்வாறு இயங்குகின்றன? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஞானம் அடைய ஒரே வழி, நம்மை சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும், அத்தனை படைப்புகளும், எவ்வாறு படைக்கப்பட்டன, என்பதை உணர்ந்து கொள்வதுதான்! அறிந்து கொள்வதில்லை. மீண்டும் சொல்கிறேன் அறிந்துகொள்வது அனைவராலும் முடியும், உணர்வுதான் ஞானம். அறிந்து கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் என்ன வித்தியாசம் என்றால் உடலுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசம்

ஒரு பூனை எவ்வாறு வாழ்கிறது என்பதை யார் வேண்டுமானாலும் பார்த்து அல்லது படித்து தெரிந்து கொள்ளலாம் ஆனால் பூனையாக பிறப்பு எடுத்தால் மட்டுமே பூனை என்றால் என்ன என்பதை ஒரு உயிரால் உணர்ந்து கொள்ள முடியும்.

எதையாவது அடைவதல்ல ஞானம் “அடைவதற்கு இந்த உலகில் எதுவுமே இல்லை என்ற தெளிவுதான் ஞானம்”. அறிந்து கொள்வது அறிவு உணர்ந்து கொள்வது ஞானம்.

Image by Marisa04 from Pixabay

காத்திரு மழை வரும்போது வரட்டும்

தேடித் தேடித் தேடிப்போய்
தொலைந்து போனார் பலர்

ஓடி ஓடி ஓடியே
ஓய்ந்து போனார் பலர்

நடந்து நடந்து நடந்தே
கலைத்துப் போனார் பலர்

நீ எதையுமே
தொலைக்கவில்லை
தேடாதே

நீ சென்று சேரவேண்டிய
இடமும் இல்லை
பயணிக்காதே

மனம்தான் மனிதன்
மனதை புரிந்துகொள்
சும்மா இரு மரமாக

மரத்துக்குத்தான்
மனிதனைத் தெரியும்

மனம்தான் உன்
விளைநிலம்

நிலத்தை உழுதுவிடு
விதைகளை தயார்செய்

மேகத்தைப் பிழிந்து
நீரெடுக்க யாராலும் முடியாது

மழை வரும்போது வரட்டும்
விளைச்சல் நிச்சயம் உண்டு

மனம்தான் மனிதன்
மனதை புரிந்துகொள்
சும்மா இரு மரமாக

மனிதர் எதை தேடி ஓடி கொண்டிருக்கிறார்கள்?

ஜென் மார்க்கத்தில் ஒரு தத்துவம் இருக்கிறது. “நீங்கள் மலையின் மீது காணும் ஞானம் கீழிருந்து எடுத்து சென்றதுதான்” என்பதுதான் அந்த தத்துவம். இதன் பொருள் “ஞானத்தை நீங்கள் எங்கேயும் தேடி கண்டுபிடிக்க முடியாது” என்பதாகும். அதைப்போல் நீங்கள் ஞானத்தை தேடி எங்கும் செல்லத் தேவையில்லை அது உங்களுக்குள்ளே தான் இருக்கிறது என்றும் பொருளாகும்.

இந்த உலகத்தில் ஏழைகள் முதல் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வரையில். அடிமைகள் முதல் உயரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் வரையில் அனைவருக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒரு தேடல் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் என்ன தேடுகிறார்கள்? ஏன் தேடுகிறார்கள்? என்பது விளங்குவதில்லை. ஆனால் மனம் எதையோ தேடி அலைகிறது என்பது மட்டும் விளங்கும். மனம் எதை தேடுகிறது என்பதை உணராததால் சிலர் தவறான இடங்களில் சென்று சிக்கிக் கொள்கிறார்கள்.

எனக்கு 14 வயது இருக்கும்போது எனக்குள் தேடல்கள் உருவாக தொடங்கின. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இந்த பூமிக்கு வந்தேன்? நான் எப்படி இந்த பூமிக்கு வந்தேன்? என்னை யாராவது படைத்தார்களா? படைத்திருந்தால் என்னை ஏன் படைத்தார்கள்? இறைவன் என்று ஒருவர் உண்டா? சொர்க்கம் நரகம் என்பவை இருக்கின்றனவா? சொர்க்கம் நரகம் என்பவை இருந்தால் நான் தவறு செய்ய எல்லா வாய்ப்புகளையும் சக்தியையும் கடவுளே கொடுத்துவிட்டு அந்த தவற்றை செய்த பிறகு என்னை ஏன் நரகத்தில் போடவேண்டும்? மனிதர்கள் எந்த தவறும் செய்யாமல் ஒழுக்கமாக வாழக்கூடிய வகையில் இறைவனால் அவர்களை படைக்க முடியுமா? முடியாதா? முடியுமென்றால் ஏன் அவ்வாறு படைக்கவில்லை?

இன்னும் பல நூறு கேள்விகள் என்னுள் எழுந்தன அந்த கேள்விகளுக்கு விடை தேடி பயணித்ததில் பலவற்றை கற்றுக் கொண்டேன். சில தெளிவுகளையும் அடைந்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை தான் என் கட்டுரைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மனம்தான் மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்வதற்கு காரணம் மனிதர்களின் மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை. மனம் பெரும்பாலான நேரங்களில் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைவதற்கு காரணம் நாம் மனதை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். மனம் எதை நாடுகிறது? எதைத் தேடுகிறது? என்று தெளிவாக கவனித்து புரிந்து கொள்ளாமல். நம் மனதில் இருக்கும் வாழ்க்கை பதிவுகளின் அடிப்படையிலும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும், வாழ்க்கை முறைகளின் அடிப்படையிலும், மனதை திருப்திப்படுத்த முயலும் போது மனம் ஒருகாலும் திருப்தி அடைவதில்லை.

நம் உயிரில் ஒரு தேடல் தொடங்கும் போது அல்லது ஒரு தேடல் உருவாகும் போது மனம் அதற்கு உறுதுணையாக சேர்ந்து செயல்படுகிறது. உயிரின் தேவைகளையும், தேடல்களையும் பூர்த்தி செய்யாமல் நம் இச்சைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முயல்வதனால்; மனம் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. நம் மனதிலும் அமைதி குறைகிறது. எந்த ஒன்றை சிந்திக்கும் போது, நினைத்துப் பார்க்கும்போது, அனுபவிக்கும் போது, வாசிக்கும் போது மனம் மகிழ்ச்சிக்கு பதிலாக அமைதியை அடைகிறதோ அதுதான் உண்மையில் உங்கள் உயிர் தேடும் பொருள் என்று அர்த்தம். மனதுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அளிப்பவை மட்டுமே மனம் தேடும் உண்மையான பொருளாகும்.


மனிதர்கள் ஏன் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறார்கள்?

மனிதர்களுக்கு கவலை தோன்றினாலும், மகிழ்ச்சி தோன்றினாலும், சிந்தனைகள் தோன்றினாலும், பெரும்பாலானோர் வானத்தையே பார்ப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் வீடான பூர்வீகம் கிரகம் அங்குதான் இருக்கிறது. அதை அவர்களின் ஆன்மா மட்டுமே அறியும்.

உணவுமுறைக்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு உள்ளதா?

நிச்சயமாக உணவு முறைக்கும் ஆன்மீகத்துக்கும் அதிகமாக தொடர்புகள் உள்ளன. ஆன்மீகத்தின் முதன்மை நோக்கமே மனதை கட்டுப்படுத்துவதுதான். உணவு முறைகள் தவறாக இருக்கும் வேளைகளில் உட்கொள்ளும் உணவுகள் மனதை பாதிக்கும்.

தியானங்களும், ஆன்மீக பயிட்சிகளும் செய்வது மனதை கட்டுப்படுத்துவதற்காக. ஒரு பக்கம் நம் பயிற்சிகள் மனதை கட்டுப்படுத்த முயலும் வேளைகளில், அடுத்த நிலையில் நாம் உண்ணும் உணவுகள் மனதை சீரழிக்க கூடும். அதனால் ஆன்மீகவாதிகளுக்கு உணவு ஒழுக்கம் மிகவும் அவசியமாகும்.

உண்மையான குருவின் அடையாளங்கள் யாவை?

உண்மையான குரு என்பவர் தன்னை குரு என்று அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார். உலக ஆசையில் மூழ்க மாட்டார். யாருக்கும் எதையும் வழிந்து கற்றுத்தர மாட்டார். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்காது. பணத்துக்காக எதையும் செய்ய மாட்டார். சிஷ்யர்களை உருவாக்காமல், புதிய குருக்களை உருவாகவே ஆசைப்படுவார்.

ஆன்மீகம் அனைவருக்கும் தேவையா?

மனித வாழ்க்கை என்பதே ஆன்மீக பயிற்சிதான். இருந்தாலும் வாழ்கிறேன் என்ற விழிப்புணர்வோடு வாழ்வதுதான் பயனுள்ள ஆன்மீகம் . அது அனைவருக்கும் தேவை.

குரு என்பவர் யார்?

அறியாமை எனும் இருட்டில் இருக்கும் மனிதர்களை, ஞானம் எனும் வெளிச்சத்தை நோக்கி அழைத்துச்செல்பவர் தான் குரு.

சரியான குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

குருவை தேடி அழைய தேவையில்லை. உங்களின் நேரம் கணிகையில், உங்களின் மனம் உங்களின் குருவை அறிந்து. அவரின் பக்கம் உங்களை அழைத்துச்செல்லும்.

ஆன்மீகம் என்றால் என்ன?

மனித உடலை தாண்டிய அறிவும், தேடுதலும்தான் ஆன்மீகம் .