புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label அறிவு. Show all posts
Showing posts with label அறிவு. Show all posts

அறிவாளி குழந்தைகள் VS புத்திசாலி குழந்தைகள்

குழந்தை வளர்ப்பு
குழந்தையை கருவில் சுமந்து ஈன்றெடுத்து வளர்ப்பதை, சிலர் ஏதோ கின்னஸ் சாதனையை படைத்துக் கொண்டிருப்பதை போன்று உணர்கிறார்கள். அளவுக்கு மீறிய கவனிப்பும், கட்டுப்படும், பல குழந்தைகளை எதிர்காலத்தில் முட்டாள்களாகவும், சமுதாயத்தில் வாழத் தெரியாதவர்களாகவும், மாற்றிவிடுகிறது.

குழந்தையை வளர்க்கும் பெரும்பாலானோர் தன் கவனம் முழுவதையும் குழந்தைகளின் மீது வைத்திருக்கிறார்கள், மாறாக குழந்தையை வளர்க்கும் போது முழு கவனத்தையும் தம்மீதும் அந்தக் குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்களின் மீது வைத்திருக்க வேண்டும். எந்த குழந்தையும் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை, மாறாக பெற்றோர்களின் செயல்களையும், நடவடிக்கைகளையும், சொற்களையும், பார்த்து, கேட்டு வளர்கிறது.

குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? என்பதை குழந்தைகள் பிறந்தது முதல் கவனிக்க தொடங்குகிறார்கள்.

ஒரு குழந்தை பெரியவன் ஆனதும் எவ்வாறு நடந்து கொள்வான்? எவ்வாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வான்? எவ்வாறான வாழ்க்கை வாழ்வான்? என்பதெல்லாம் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தவைகளை கொண்டும், பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுத்தவைகளைக் கொண்டு அமைவதில்லை. மாறாக அந்த குழந்தை 12 வயதுக்குள், பார்த்த, கேட்ட, அனுபவித்த, விஷயங்களை வைத்தே, அந்த குழந்தையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

புத்திசாலிக்கும் அறிவாளிக்கும் உள்ள வித்தியாசம் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. 

ஒரு குழந்தையை நல்ல பள்ளிக்கூடத்தில், நன்றாக பாடம் நடத்தக் கூடிய ஆசிரியரிடம் கல்வி கற்க வைத்தால். அந்த ஆசிரியர் அந்த குழந்தையை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் எத்தனை பள்ளிக்கூடத்தில், எத்தனை பல்கலைக்கழகத்தில், கற்றாலும் எந்த குழந்தையையும் புத்திசாலியாக மாற்ற முடியாது.

அறிவாளிகளுக்கும் புத்திசாலிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அறிவாளி தான் கற்றுக்கொண்டவற்றை, கற்றுக்கொண்ட துறையில் பயன்படுத்துவார். உதாரணத்திற்கு காரை பழுதுபார்க்க கற்றுக்கொண்டவர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த அறிவைக் கொண்டு காரை மட்டுமே பழுது பார்க்க முடியும். அதை விடுத்து மற்ற வாகனங்களை அவருக்கு பழுது பார்க்கவோ அதைப் பற்றிய உயரிய அறிவோ புரிதலோ இருக்காது. ஆனால் ஒரு புத்திசாலி இதே வாகன பழுதுபார்க்கும் படிப்பை படித்தாலும், தான் கற்றுக்கொண்ட இந்த அறிவை மற்ற துறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற புரிதலும் இருக்கும்.

அறிவாளி ஒரு சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது என்று அவனுடைய அனுபவத்தில் அல்லது அவனுடைய படிப்பில் இருந்தால் அதை பயன்படுத்துவான். இல்லை என்றால் அந்த சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு நடப்பான். புத்திசாலிக்கு ஒரு சூழ்நிலையை சமாளித்து, அதிலிருந்து வெளிவரும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். புத்திசாலி அவன் வாழ்நாளிலேயே சந்தித்திராத ஒரு பிரச்சினையை, கேள்விப்பட்டிராத ஒரு பிரச்சினையை, அவன் எதிர்கொண்டாலும் கூட, அதிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்ற ஆற்றல் அவனுக்குள் இருக்கும்.

ஒரு குழந்தை படிப்பதினால் அறிவாளி ஆகிறான் ஆனால் அவனது அனுபவங்களின் மூலமே புத்திசாலி ஆகிறான். குழந்தைகளின் பெரும்பாலான அறிவு வளர்ச்சி பன்னிரெண்டு வயதுக்குள்ளாகவே முடிந்துவிடுவதால், வெளி உலகத்தைப் பார்க்காது, மனிதர்களுடன் கலக்காது வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், என்று எந்த வகையான தொழில் புரிந்தாலும் அவர்களுக்கு புத்தி கூர்மை குறைவாகவே இருக்கும்.

அவர்களின் துறையைச் சாராத, ஒரு சூழ்நிலையை, அவர்களால் எந்த காலத்திலும் சமாளிக்க முடிவதில்லை. அவற்றை சமாளிக்க பிறரின் உதவியையே நாடுகிறார்கள். வெளி மனிதர்களுடனும், பல குழந்தைகளுடனும் விளையாடி, மண்ணில் புரண்டு, குளத்தில் குதித்து, ஆற்றில் நீந்தி, இயற்கையுடனும், மனிதர்களுடனும், மக்களுடனும், இந்த சமுதாயத்தில் கலந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக உருவாகின்றார்கள். படிப்பு இல்லாத குழந்தைகள் கூட, எவ்வாறான சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் அவர்களிடம் இயற்கையாகவே உருவாகிவிடும். சிறிய வருமானம் இருந்தால் கூட அதை வைத்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடிய புத்திசாலித்தனம் அவர்களுக்கு இருக்கும்.

குழந்தைகளுக்கு வெளியுலகத்துடன் வாழ கற்றுக்கொடுங்கள். நீங்கள் முதலில் வெளி உலகத்துக்கு வாருங்கள், மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களுக்கும். மனிதர்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கும், அடிக்கடி உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எதிர் வீட்டுப் பிள்ளைகளுடனும், அருகில் உள்ள வீடுகளில் உள்ள குழந்தைகளுடனும், உங்கள் பிள்ளைகளை சேர்ந்து விளையாட அனுப்புங்கள். உற்றார், உறவினர், நண்பர்களுடன், குழந்தைகள், இயல்பாக பழக அனுமதியுங்கள்.

இயற்கையுடன் இணைந்து வாழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். ஆறு, குளம், கடல், போன்ற நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று நீந்த சொல்லுங்கள். காடு, மலை, கடல், போன்ற இடங்களுக்கு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்லுங்கள். இயற்கையை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். விலங்குகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனிதர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு ஆயிரம் விஷயங்கள் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொடுப்பதை விடவும், இரண்டு விஷயங்கள் இயற்கையில் இருந்து கற்றுக் கொடுத்தால், அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும். புத்திசாலிக் குழந்தையால் அறிவாளியாக முடியும். ஆனால் எந்த அறிவாளியாலும் புத்திசாலியாக முடியாது. சிறுவயது தாண்டிவிட்டால், புத்தியை கூர்மைப் படுத்துவது சிரமம். இளமையில் கல்...


அறிவு என்பது என்ன?

ஐம்பொறிகளை கொண்டு கற்றுக்கொள்ளும் விஷயங்களை அறிவு என்று அழைக்கிறோம்.

மனதுக்கு அறிவு உண்டா?

மனதுக்கு பகுத்தறிவு கிடையாது. அதற்கு நல்லது கெட்டது தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப்பார்க்கும் தன்மையும் கிடையாது.

அறிவு, புத்தி மற்றும் மனம், இவை மூன்றும் ஒன்றா?

இல்லை, இவை மூன்றுமே வெவ்வேறு குணாதிசியங்களையும் தன்மைகளையும் கொண்டவை. இவை மூன்றுக்கும் சிந்தனை ஆற்றலுடன் தொடர்பிருந்தாலும், இவற்றின் சிந்திக்கும் தன்மையும் ஆழமும் மாறுப்படும்.

ஆறாவது அறிவு எது?

உணர்ச்சி, சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாகும்.

குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது எப்படி?

வாசிக்கும் பழக்கமானது அனைவருக்கும் இன்றியமையாத ஒரு முக்கியமான நல்ல பழக்கமாகும். நம் பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் காலம் முதலாக வாசிக்கும் பழக்கத்தை உருவாக்காவிட்டால்; அவர்கள் பெரியவர்களானதும் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது மிகவும் கடினமான காரியமாக இருக்கும்.

சிறுவயதில் பிள்ளைகளுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசிப்பில் கிடைக்கும் இனிமையையும் பழக்கி விட்டால்; நீங்கள் வேண்டாம் என்று தடுத்தால் கூட அவர்கள் வாசிப்பை நிறுத்தமாட்டார்கள். ஒரு மனிதன் பிறந்தது முதல் மரணம் வரையில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வாசிக்கும் பழக்கம் மிகவும் முக்கியமானது. இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஆடியோ, வீடியோ, என பல வளர்ச்சிகளை அடைந்தாலும் வாசிப்பில் கிடைக்கும் அறிவும் தெளிவும் மற்றவைகளில் கிடைப்பதில்லை.

ஒரு மனிதர் பேசுவதை செவிமடுக்கும் போது 50 விழுக்காடுகளும், ஆடியோவாக கேட்கும்போது 35 விழுக்காடுகளும், வீடியோவாக பார்க்கும் போது 50 விழுக்காடுகளும் கற்றுக்கொள்கிறார்கள். சுயமாக வாசிக்கும் பொழுது மட்டுமே 70 விழுக்காடுகள் வரையில் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு விசயத்தை புத்தகமாக அல்லது எழுத்துகளிலிருந்து வாசிக்கும் போது 70 விழுக்காடுகள் வரையில் மனதில் பதிந்துவிடுகிறது. வாசிக்கும் போது அவர்களின் மனமானது வாசிக்கும் புத்தகத்தில் உள்ளவற்றை கற்பனையில் உருவாக்க தொடங்கிவிடும். ஏற்கனவே மனதில் இருக்கும் பதிவுகளையும் அதன் பிறகு வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளையும் புரிந்துக்கொள்ள அந்த புத்தகத்திலிருந்து உருவான பதிவுகள் உதவியாக இருக்கும்.

பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கம் உருவாக வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்கள் வாசிக்க தொடங்க வேண்டும். குறைந்த அளவு நாளிதழ்களையாவது பெற்றோர்கள் வாசிக்க வேண்டும். பெற்றோர்களை பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் கூட பிள்ளைகளை வற்புறுத்தி வாசிக்க சொல்லாதீர்கள். எப்பொழுதுமே பிள்ளைகளை பள்ளிப் பாடங்களை மட்டும் வாசிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். வாசிப்பு என்பது ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாறிவிட்டால் நீங்கள் இல்லாத பொழுதும் அவர்கள் சுயமாகவே வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க முதலில் பிள்ளைகளுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். பள்ளிப்பாடங்கள், வரலாறு, அறிவியல், என்று பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த கேளிக்கை, கார்ட்டூன், கதைகள், போன்ற புத்தகங்களை வாங்கி கொடுத்து அவற்றை வாசிக்க சொல்லுங்கள்.

தொடக்கத்தில் பெரிய புத்தகமாக இல்லாமல் 50 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள சிறிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாங்கி கொடுக்காதீர்கள். ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின்பு அடுத்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள்.

பிள்ளைகள் வாசித்து முடித்த புத்தகங்களில் கதைகளில் உள்ளவற்றை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் படித்த கதைகளில் உள்ள கதாபாத்திரங்களை பற்றி நீங்களும் அவர்களுடன் விவாதம் செய்யுங்கள் அல்லது கலந்து ஆலோசனை செய்யுங்கள்.

பிள்ளைகள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் அதன் தொடர்புடைய அடுத்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள். தொடர்பில்லாத பல புத்தகங்களை வாசிக்கும் பொழுது அவர்களுக்கு வாசிப்பதில் விரக்தி ஏற்படும், ஆர்வம் குறைந்துவிடும்.

மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். இடையிடையே உலக நடப்பு, சினிமா, கேளிக்கை, போன்ற விசயங்களையும் வாசிக்க அனுமதியுங்கள். இவற்றை பிள்ளைகளிடமிருந்து தவிர்க்க முயன்றால் பிள்ளைகளின் மனம் அவற்றின் மீதே நாட்டம் கொள்ளும்.

நீங்கள் வாசித்த நல்ல புத்தகங்களில் உள்ள முக்கியமான கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். சில காலங்களுக்கு பிறகு அவர்கள் சுயமாக வாசிக்க தொடங்கிய பிறகு அவர்களுக்கு நல்ல கருத்துடைய புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள்.

கதை புத்தகங்களை அதிகமாக வாசித்தால் பள்ளிப் பாடங்களில் கோட்டை விட்டுவிடுவார்கள் என்று எண்ணாதீர்கள். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் உருவாகிவிட்டால். பல வகையான புத்தகங்களை அவர்கள் வாசித்து பழகிவிட்டால். பள்ளிப் பாடங்களையும் எளிதாக வாசிப்பார்கள், எளிதாக புரிந்துக் கொள்வார்கள்.

வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க உங்களிடம் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் கீழே பதிவு செய்யுங்கள்.