கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

ரெய்கி எவ்வாறு செயல்படுகிறது


ரெய்கி ஆற்றல் மிகவும் நேர்த்தியுடனும், புத்தி கூர்மையுடனும் செயல்படுகிறது. அது மனிதர்களின் உடலில் நுழைந்ததும் அதை அனுப்பிய மாஸ்டரின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட தொடங்கும். அந்த ஆற்றல் நுழைந்த மனிதரின் தேவைகளை ஆராய்ந்து, அவற்றை பூர்த்தி செய்ய தேவையானவற்றை செய்யத் தொடங்கும்.

மருத்துவ தேவைக்காக இந்த ஆற்றல் பணிக்கப்பட்டால், தொடக்கத்தில் ரெய்கி அந்த நோயாளியின் வலிகளையும், வேதனைகளையும் குறைக்கத் தொடங்கும். அதை தொடர்ந்து அந்த நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்யும். அதை தொடர்ந்து அந்த நோயாளியின் ஆரா, சக்தி, சக்ராக்கள், மனம், மற்றும் உடலை முழுமையாக குணப்படுத்தும். இதற்கு சில கால தவணை ஆகலாம். பல முறை ரெய்கி சிகிச்சையும் தேவைப்படலாம்.

ரெய்கி ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, பொருளுக்கோ, கட்டடத்துக்கோ அனுப்பப்படும் போது, அது அந்த மனிதரிடமோ, விலங்கிடமோ, பொருளிடமோ, கட்டடத்திலோ, இருக்கும் குறை நிறைகளை சரி பார்த்து அவற்றை சரி செய்யும். அதை தொடர்ந்து அங்கு ஏற்பட்டிருக்கும் சக்தி குறைபாடுகளை சரி செய்யும். ரெய்கியிடம் என்ன செய்ய வேண்டும் என்று பணித்தால் போதும். அதை எவ்வாறு செய்யவேண்டும் என்று அதுவே தீர்மானிக்கும்.


ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்

ரெய்கி என்பது மிகவும் புத்திக் கூர்மையுடைய ஆற்றலாகும் (சக்தியாகும்). ரெய்கிக்கு யாரும் எதையும் கற்றுத்தரத் தேவையில்லை. மின்சாரம் விளக்கில் கலந்தால் வெளிச்சத்தை உண்டாக்கும், மின்விசிறியில் கலந்தால் காற்றை உண்டாக்கும், வானொலியில் கலந்தால் ஓசையை உண்டாக்கும், தொலைக்காட்சியில் நுழைந்தால் காட்சிகளை உண்டாக்கும். மின்சாரம் எந்த பொருளில் நுழைகிறதோ, அந்த பொருளுக்கு ஏற்ப தனது தன்மைகளை மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. அதைப் போலவே ரெய்கியும் சேரும் மனிதர்களுக்கு ஏற்பவும், பொருட்களுக்கு ஏற்பவும், தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.

ரெய்கி ஆற்றல் ஒரு மனிதரின் உடலுக்குள் நுழையும் போது அந்த மனிதரின் குறை நிறைகளை முதலில் சரிசெய்யத் தொடங்கும். ஒரு நோயாளியின் உடலில் நுழைந்தால் அந்த நோயாளியின் நோய்களுக்கான மூலக் காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரி செய்ய தொடங்கும். ரெய்கி ஒரு பொருளிலோ, இடத்திலோ, நுழைந்தால் அந்த பொருளின் அல்லது இடத்தின் குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும். தீய சக்திகள் எங்கிருந்தாலும் அவற்றை ரெய்கி வெளியேற்றிவிடும். மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், மற்றும் கட்டடங்களின் சக்தியை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் செய்யும்.

ரெய்கி நமக்கு அந்நியமான ஒரு ஆற்றல் அல்ல. நம்மை அறியாமலேயே நமது தினசரி வாழ்க்கையில் அவப்போது ரெய்கியை பயன்படுத்தி தான் வருகிறோம். எடுத்துக்காட்டாக யாருக்காவது தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மூட்டு வலி, போன்றவை உருவானால் தன்னை அறியாமலேயே தன் கரங்களால் வலிக்கும் பகுதியை அவர் தேய்த்து கொடுப்பார். அவரின் வலிகளும் குறையத் தொடங்கும்.

ஒரு குழந்தை காரணமில்லாமல் அழுது கொண்டிருந்தால் அதன் தாய் அந்தக் குழந்தையை தன் கரங்களால் தேய்த்து கொடுப்பார், தடவி கொடுப்பார். சற்றுநேரத்தில் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். விலங்குகளுக்கு காயங்கள் உண்டானால் விலங்குகள் காயம் கண்ட பகுதியை தன் நாவினால் வருடும், அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

நம் அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப் பட்டாலோ, ஏதாவது பிரச்சனையில் சிக்கியிருந்தாலோ, அல்லது கவலையில் மூழ்கி இருந்தாலோ, நாம் அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறுவோம். அல்லது அவர்களை கட்டியணைத்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறுவோம்.

உண்மையில் மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நாம் என்ன செய்கிறோம் என்றால் தொடுவதன் மூலமாகவும், கட்டி அணைப்பதன் மூலமாகவும், வார்த்தைகளின் அல்லது ஓசைகளின் மூலமாகவும் நாம் நமது ஆற்றலை பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உடலில் பிரபஞ்ச ஆற்றல் குறைவாக இருப்பதனாலும் அதில் குறைபாடுகள் உண்டாவதனாலும் தான் பெரும்பாலான மனிதர்களுக்கு நோய்களும், வாழ்க்கையில் பல தொந்தரவுகளும் உருவாகின்றன. மற்றவர்களின் மூலமாக கிடைக்கும் ஆற்றலானது அவர்களுக்கு துன்பங்களில் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.

ரெய்கி பயில்வதனால் உண்டாகும் பயன்கள்


1. ரெய்கியை எந்த ஒரு முன் அனுபவமுமின்றி அனைவரும் எளிதாக கற்றுக் கொள்ளலாம்.

2. ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், மற்ற மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், ரெய்கியை கொண்டு உதவிகள் புரியலாம்.

3. ரெய்கியை கொண்டு உடல், மனம், புத்தி, சக்தி, என அனைத்து தொந்தரவுகளையும் குணப்படுத்தலாம். அவற்றின் ஆற்றல்களையும் அதிகரிக்கலாம்.

4.வாழ்க்கையின் தரமும், பொருளாதாரமும் மேன்மை அடையும். முயற்சிகள் வெற்றிபெரும்.

5. பிரச்சனைகளில் இருந்து வெளிவரவும், வாழ்க்கையில் முன்னேறவும், நியாயமான தேவைகளை பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்கும்.

6. குடும்பத்தாருடனும், சக மனிதர்களுடனும், உறவுகள் மேம்படும்.

7. அக்குபங்சர், அக்குபிரஷர், இயற்கை வைத்தியம், போன்ற மருத்துவ முறைகளை பின்பற்றும் மருத்துவர்களுக்கு அவர்களின் நோயாளிகள் விரைவாக குணமாக உதவும்.

8. இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும் உறவுகள் மேம்படும்.

9. அவரை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் சுத்தமாகும். ஆரா தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கும். தீய சக்திகளும், செய்வினைகளும் எளிதில் நெருங்க முடியாது.

ரெய்கி கலையின் நிறுவனர்

ரெய்கி கலையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மிக்காவோ உசுயி அவர்கள் (Dr. Mikao Usui). இவர் ஜப்பானில், தனியாய் என்ற ஊரில் 1865ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15இல் பிறந்தார். 1920களில் “யமா” என்று அழைக்கப்படும் ஒரு வகையான ஆன்மிகப் பயிற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். அந்த பயிற்சிக்காக ஜப்பானில் உள்ள குரமா என்ற மலையின் மீது 21 நாட்கள் விரதத்திலும், தியானத்திலும் இருந்தார். குரமா என்பது ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் கூடிய கடுமையான ஆன்மீக பயிற்சியாகும். மலையில் இருந்த அந்த 21 நாட்களில் “கீ” என்ற பிரபஞ்ச ஆற்றல் எங்கும் இயங்குவதை அவர் உணரத் தொடங்கினார். பிரபஞ்ச ஆற்றலை கொண்டு மனிதர்களின் நோய்களையும், பிரச்சனைகளையும் சரி செய்யலாம் என்பதை அந்த தியானத்தின் போது அவர் உணர்ந்துக் கொண்டார்.

பயிற்சி முடிந்து மலையிலிருந்து கீழே இறங்கி வந்தவர், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு நோய்களை குணபடுத்தவும், பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், இந்த ஆற்றலை பயன்படுத்தி உதவிகள் செய்யத் தொடங்கினார். வெறும் 21 நாட்கள் ஒருவர் பயிற்சி செய்தால் இந்த நிலையை அடைந்து விடலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இளம் பருவம் முதலாக அவரிடமிருந்த ஒழுக்கமும், மனக் கட்டுப்பாடும், முறையான உணவு முறையும், அவர் மேற்கொண்ட பயிற்சிகளும் தான் அவர் இந்த ஞானத்தை அடைவதற்கு காரணங்களாக அமைந்திருக்கும்.

அவரின் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரெய்கி பயிற்சியை அளித்திருந்தார். அவர்களில் 16 நபர்கள் மாஸ்டர் அல்லது “Shinpiden” என்ற நிலையை அடைந்தார்கள். டாக்டர் மிக்காவோ உசுயி அவர்கள் 9 மார்ச் 1926ல் காலமானார்.

தோக்கியோவில் ரெய்கி

Dr. Chujiro Hayashi டாக்டர் சுஜிரோ ஹயாஷி அவர்கள் டாக்டர் மிக்காவோ உசுயி அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1880ஆம் ஆண்டு செப்டம்பர் 15ல் தோக்கியோவில் பிறந்தார். இவர் டாக்டர் மிக்காவோ உசுயி  அவர்களிடம் ரெய்கி பயின்று டோக்கியோ, ஜப்பானில் ஒரு ரெய்கி கிளினிக்கை தொடங்கி நடத்தி வந்தார்.

ரெய்கியை ஒரு ஆன்மீக பயிற்சி என்பதிலிருந்து, ஒரு மருத்துவ முறையாக மாற்றியதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இவர் 1940ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி காலமானார். 

அமெரிக்காவில் ரெய்கி

திருமதி ஹவயோ ஹிரோமி தகத, அமெரிக்காவில் ஹவாயில் 1900 மாம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தார். ரெய்கி மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கும், இன்று உலகம் முழுவதும் பரவி பிரபல்யமாக இருப்பதற்கும் இவர் முக்கிய காரணமாவார்.

செவிவழி செய்திகளாக கூறப்படும் ஒரு சம்பவம். திருமதி தகத தனது குடும்பத்தாரை சந்திப்பதற்காக ஜப்பானுக்கு சென்றிருந்தார். ஜப்பானில் இருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக அவர் நோய்வாய்ப் படுகிறார். அவரின் நோயை குணப்படுத்துவதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அறுவை சிகிச்சையில் உடன்படாத திருமதி தகத அதற்கு ஏதாவது மாற்று மருத்துவம் இருக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

அவரின் நோய்களை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவத்தை அறியாததால் இறுதியில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்கிறார். அறுவை சிகிச்சைக்கு தயாராகும் போது அவரின் செவிகளில் “உன் நோய்க்கான மருத்துவம் தோக்கியோவில் இருக்கிறது அங்கே செல்” என்று ஒரு அசரீரி கேட்கிறது. உடனே அறுவை சிகிச்சையை ரத்து செய்துவிட்டு டோக்கியோவிற்கு புறப்படுகிறார். தோக்கியோவில் டாக்டர் ஹயாஷியின் கிளினிக்கில் ரெய்கி சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைகிறார்.

அன்றைய காலகட்டத்தில் ஜப்பான் பல போர்களில் கலந்து கொண்டிருந்தது. ஆண்கள் அனைவரும் கட்டாயமாக போர்களில் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப் பட்டார்கள். ரெய்கி கலையை அறிந்த அத்தனை ஆண்களும் போரில் மடிந்துவிட்டால்; இந்த கலை அழிந்துவிடும் என்பதாலும், மேலும் வெளிநாட்டில் வாழும் பெண் என்பதாலும் டாக்டர் ஹயாஷி திருமதி தக்கதவுக்கு ரெய்கியை பயிற்சி அளித்தார். திருமதி தக்கத மூலமாக இந்த கலையை வெளிநாட்டில் பாதுகாக்க எண்ணினார்.

திருமதி தகத ரெய்கியை முழுமையாக கற்றுக்கொண்டு அமெரிக்கா திரும்பி அங்கு ஒரு ரெய்கி கிளினிக்கை தொடங்கினார். அவர் சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் ஜப்பானியர் அல்லாதவர்களுக்கும் ரெய்கி கலையை கற்றுத்தரத் தொடங்கினார்.

அமெரிக்காவிலிருந்து இந்தக் கலை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இன்று உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான மக்கள் ரெய்கியினால் பயன் பெற்று வருகின்றனர். அதன் வரிசையில் நீங்களும் இப்போது சேர்ந்துக் கொண்டீர்கள்.

ரெய்கி என்பது என்ன?


ரெய்கி என்ற சொல்லின் பொருள் 
ரெய்கி என்ற ஜப்பானிய சொல் “ரெய்” மற்றும் “கி” என்ற இரு சொற்களின் கலவையாகும். “ரெய்” என்றால் பிரபஞ்சம் அல்லது புனிதம் என்று பொருளாகும். “கி” என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருளாகும். ரெய்கி என்றால் பிரபஞ்ச ஆற்றல், பிரபஞ்ச சக்தி, அல்லது புனிதமான ஆற்றல் என்று பொருள் கொள்ளலாம்.

ரெய்கி என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றலாகும். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த உலகில் நமக்கு தேவையான அனைத்தையும் அடைய முடியும்.

ரெய்கி ஆற்றலை புரிந்துகொள்ள மின்சாரத்தை எடுத்துக்காட்டாக பயன்படுத்தலாம். மின்சாரம் என்பது ஒரு பொதுவான ஆற்றல். மின் கம்பிகளின் வாயிலாக வீட்டின் உள்ளே நுழையும் மின்சாரம் எந்தப் பொருளில் சேருகிறதோ அந்த பொருளுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. வெளிச்சமாகவும், ஒலியாகவும், ஒளியாகவும், அசைவாகவும், சேரும் இடத்திற்கேற்ப மின்சாரம் பரிமாணத்தை கொள்கிறது. வீட்டில் எத்தனை பொருட்கள் இயங்கினாலும் அத்தனை பொருட்களையும் இயக்கும் அடிப்படை ஆற்றலாக இருப்பது மின்சாரம் தான். எத்தனை நவீனமான விலையுயர்ந்த கருவியாக இருந்தாலும் மின்சாரமின்றி அது இயங்காது அல்லவா?

அதைப் போலவே ரெய்கியும் எங்கு சேருகிறதோ; அந்த நபருக்கும், விலங்குக்கும், தாவரத்துக்கும், பொருளுக்கும், இடத்திற்கும், ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. சில ரெய்கி மாஸ்டர்கள் ரெய்கியை உடலின் உபாதைகளையும், நோய்களையும், குணப்படுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ரெய்கியை மனித வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தலாம்.

காற்று எவ்வாறு ஒரு நாட்டுக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ, நம்பிக்கைக்கோ, மொழிக்கோ, சொந்தமானது கிடையாதோ; அதைப் போலவே ரெய்கியும் எந்த ஒரு நாட்டுக்கும், மதத்திற்கும், இனத்திற்கும், நம்பிக்கைக்கும், மொழிக்கும், சொந்தமில்லாதது. ரெய்கி ஒரு சுதந்திரமான பேராற்றலாகும். அதற்கு எந்த எல்லைகளும், எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

உண்மையில் ரெய்கியானது ஆதிகாலம் தொட்டு மனிதர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு தான் வந்திருக்கிறது. இந்த ஆற்றலின் பெயர் மட்டும் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுமே ஒழிய அந்த பெயர்கள் உணர்த்தும் அடிப்படை ஆற்றலானது ஒன்றுதான். சரித்திர காலம் முதலாக ஆச்சரியமான பல கதைகளையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

"அவர் தொட்டால் நோய்கள் குணமாகுமாம், உடலின் குறைபாடுகள் குணமாகுமாம். அவரை சந்தித்தால் துன்பங்கள் தீருமாம்,இவரை சந்தித்தால் பிரச்சினைகள் தீருமாம். அந்த நபரால் தீய ஆற்றல்களை கட்டுப்படுத்த முடியுமாம்", இவ்வாறு பல காலமாக பலரைப் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். பரவலாக இவ்வாறான அதிசய ஆற்றல்களைக் கொண்ட மனிதர்கள் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றும் கூட பரவலாக வாழ்கிறார்கள்.

ஒரு தனி நபர் பலரின் நோய்களை தீர்ப்பதற்கும், துன்பங்களை நீக்குவதற்கும், பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் உதவியாக இருப்பது பிரபஞ்ச ஆற்றல்தான். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்த தெரிந்த மனிதர் எல்லா மனிதர்களுக்கும் பயனுள்ளவாறு ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழலாம். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் பொழுது இயலாது, முடியாது, என்று எதுவுமே இருக்காது.