கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

எங்கள் வீட்டிலிருந்த அமானுஷ்யம்

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு திருமணமான புதிது, நாங்கள் மலேசியாவில், ஜொகூர் பாருவில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். அது வரிசையாக வீடுகள் அமையப்பட்ட புதிய குடியிருப்பு பகுதி. அந்த குடியிருப்பு பகுதியில் அவ்வளவாக மக்களின் நடமாட்டம் இருக்காது. எங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு பெரிய புற்கள் மண்டிய திடல் இருக்கும். அந்த வீட்டில் குடியேறிய சில நாட்களில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின.

பொழுது சாயும் நேரங்களில், வீட்டின் பின்புறத்தில் யாரோ மண் வெட்டியால் வெட்டுவதைப் போன்று சத்தம் கேட்கும். வீட்டில் யாரோ நடமாடுவதைப் போன்ற ஓசைகள் கேட்கும். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் யாரோ நாற்காலியை இழுப்பதைப் போன்றும், குளிர் சாதன பெட்டியை திறந்து மூடுவதைப் போன்றும், குளியலறையை யாரோ பயன்படுத்துவதைப் போன்றும் ஓசைகள் கேட்கும். இவற்றை நான் அதிகமாக அனுபவித்ததில்லை. என் மனைவிக்கு இந்த அனுபவங்கள் வருகின்றன என்று அடிக்கடி என்னிடம் கூறுவார்.

எப்போதும் வேலை முடிந்து இரவு பதினொன்று பன்னிரண்டு மணிப் போல் தான் வீட்டுக்குத் திரும்புவேன். 12 மணிக்கு மேல் வீடு திரும்பியதும் கணினியில் அமர்ந்து இணையப்பக்கம் செய்வது, எழுதுவது, வாசிப்பது, என்று எதையாவது செய்துக் கொண்டிருப்பேன். அந்த நேரங்களில் என்னைச் சுற்றி பல ஆவிகள் நிற்பதை என்னால் தெளிவாக உணர முடியும். என் கணினி அறை வீட்டின் பின்புறத்தைப் பார்த்ததைப் போன்று அமைந்திருந்தது.

என் வீட்டின் பின்னால் மற்ற வீடுகள் எதுவும் இல்லாமல் அடர்ந்த புற்கள் மண்டிய ஒரு காலி நிலமாக இருந்தது. வீட்டின் ஜன்னலிலிருந்து பல உயிரினங்கள் எட்டிப் பார்ப்பதும் என்னைச் சுற்றி ஆவிகள் நின்று வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் ஆச்சரியம் எனக்கு பெரிய பயமோ பதட்டமோ ஏற்பட்டதில்லை. நாளடைவில் அது எனக்குப் பழகிவிட்டது.

ஒரு நாள் சாயங்காலம் 4 மணியிருக்கும் நான் வீட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றேன். படுப்பதற்கு முன்பாக 7 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே உறங்கச் சென்றேன். சரியாக மாலை 7 மணிக்கு என் அறைக் கதவை என் மனைவி தட்டினால். நான் மதியம் உறங்கும்போது அவள் எழுப்பிவிடுவது வழக்கம். எழுந்துச் சென்று கதவைத் திறந்தால் அங்கு யாருமில்லை. அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது என் மனைவி ஊரில் இல்லை என்பதும் நான் தனியாகத்தான் வீட்டில் இருக்கிறேன் என்பதும்.

என் வீட்டிலிருந்த ஆவிகள் என் குடும்பத்தாரை எந்த வகையிலும் தொந்தரவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் வீடு இருந்த நிலமும் வீட்டைச் சுற்றிய நிலங்களும் முன்காலத்தில் காடுகளாகும் சுடுகாடாகவும் இருந்த நிலங்கள் என்று கேள்விப்பட்டேன். அந்த காடுகளையும் இடுகாட்டையும் அழித்து வீடுகளைக் கட்டியதால் அந்த காட்டிலும்  இடுகாட்டிலும் இருந்த ஆவிகள் வீடுகளில் குடியேறின. எங்கள் வீட்டில் மட்டுமின்றி அங்கிருந்த பல வீடுகளில் ஆவி மற்றும் அமானுஷ்யத்தின் தொந்தரவுகள் இருந்தன.

ஏர்வாடி தர்காவில் ஏற்பட்ட அனுபவம்

தமிழகம் செல்லும் போதெல்லாம் வாய்ப்புக் கிடைத்தால் ஏர்வாடி தர்காவிற்கு செல்வது வழக்கம். வழக்கம் போல ஒருமுறை தமிழகம் சென்றிருந்த போது ஏர்வாடி தர்காவிற்கு சென்றிருந்தேன். அன்று வியாழக்கிழமை அங்கு சென்றதும், அங்கு இருக்கும் சூழ்நிலைகளையும், கட்டிட அமைப்புகளையும், அங்கிருக்கும் மக்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு தனியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன்.

ஏர்வாடி தர்காவின் வராண்டாவில் அமர்ந்து அங்கிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் நடவடிக்கைகளையும், அவர்களின் செயல்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.

கேரளாவிலிருந்து செய்வினைக்கு ஆளானார்களும், பேய் பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களும் அதிகமாக வந்திருந்தார்கள். அவர்களில் ஒருசிலர் சில விசித்திரமான செயல்களை செய்து கொண்டிருந்தார்கள். தர்காவை சுற்றி ஓடுவது, பல்டி அடிப்பது, கத்துவது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, என்று ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் தர்காவின் வாசலைப் பார்த்து தன் முன்னே யாரோ நிற்பதைப் போன்று பேசியும் வாதாடியும் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் வேகமாக ஓடி வந்து குதித்து தன் நெஞ்சால் தர்கா தூணில் இடித்துக் கொண்டார், அவர் மீண்டும் மீண்டும் பலமுறை ஓடிவந்து அந்த தூணில் இடித்துக் கொண்டே இருந்தார். பின்பு அந்த மக்காமை சுற்றிச் சுற்றி வந்தார். அவர் ஏதோ தனக்கு தானே தண்டனைக் கொடுத்துக் கொள்வதைப் போன்று இருந்தது.

அந்த சூழ்நிலையில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணைக் கண்டேன். அந்தப் பெண்ணுக்கு என்ன பாதிப்பு என்று தெரியவில்லை செய்வினையாக இருக்கலாம் அல்லது பேய் பிசாசுகளின் தொந்தரவாக இருக்கலாம். அந்தப் பெண் மக்காமைச் சுற்றி ஓடுவதும் அதன் வாசல் வந்ததும் பல்டி அடிப்பதும் என மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தார். எனக்குப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அப்போதுதான் எனது அகங்காரம் வேலைச்செய்ய தொடங்கியது.

நமக்குத்தான் ரெய்கி ஹீலிங் தெரியுமே, அதைப் பயன்படுத்தி அந்த பெண்ணை குணப்படுத்த முயற்சி செய்யலாமே என்று எண்ணினேன். நானும் அந்தப் பெண் என்னை கடக்கும் போதெல்லாம் ரெய்கி ஹீலிங் செய்து கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பெண்ணுக்கு எந்த மாற்றமும் நிகழவில்லை அவள் எப்போதும் போல் ஓடிக் கொண்டும் பல்டி அடித்துக் கொண்டும் இருந்தாள்.

சற்று நேரம் கழித்து நான் அங்கிருந்து கழிவறையை நோக்கி நடந்தேன். அந்த கழிவறைக்குச் செல்லும் வழியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலரை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள். அங்குச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்னைப் பார்த்து...

"உனக்குத் தெரியாத வேலையைச் செய்யாதே என்று கூறினார்"

எனக்கு தூக்கிவாரிப் போட்டதைப் போன்று இருந்தது. அந்த வாக்கியம் என்னை நோக்கி கூறப்பட்டது என்பது புரிந்தது. ஆச்சரியத்துடன் திரும்பி அவரைப் பார்த்தேன், அவர் ஒன்றும் தெரியாதவரைப் போன்று மீண்டும் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் நான் உணர்ந்தேன். அந்த குரல் அவருடையது. ஆனால் பேசியது அவரில்லை என்பதை.

நான் அந்த இடத்தில், அந்த சூழ்நிலையில் ஹீலிங் செய்தது தவறு என்று எச்சரிக்கப்பட்டேன். அந்த பெண்ணுக்கு என்ன கோளாறு? அந்த பெண்ணின் உடலை ஆட்டிவைப்பது யார்? என்பன எதுவும் தெரியாமல் ஹீலிங் செய்ய முயன்றது மிகப்பெரிய தவறு. அந்த செயல் எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் பல பாதிப்புக்களை உண்டாக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கப்பட்டேன். எல்லோரும், எல்லா சூழ்நிலையிலும், எல்லா விசயங்களையும் செய்யக் கூடாது என்பது புரிந்தது.


நான் பார்த்த மோகினி பிசாசு

ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பினாங்கு மாநிலத்தில் என் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நான் அங்கு இருக்கும் போது, என் உறவினரின் வீட்டுக்கு பொருட்களை கொடுக்க ஒருவர் வந்திருந்தார். வந்தவர் பொருட்களை கொடுத்து விட்டு திரும்பிச் சென்றவுடன் என் உறவினர் கூறினார், வந்தவர் பகலில்தான் இவ்வாறு இருப்பார்; இரவில் வேறு  நபராக  மாறிவிடுவார் என்றார்.

நானும் எதார்த்தமாக என்னை அறியாமலேயே ஆம் இவருக்குள்  ஒரு மோகினி பிசாசு இருக்கிறது என்று கூறிவிட்டேன். என் உறவினர் அதிர்ந்துபோனார். உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை ஆனாலும் என்னால் உணர முடிகிறது என்று கூறினேன். பிறகு அந்த நபரின் சில தொந்தரவுகளைப் பற்றி விளக்கினார்.

அன்று இரவு வேலைகளை முடித்து என் உறவினர் திரும்பியவுடன் நானும் அவரும் பினாங்கில் உள்ள ஒரு கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த பாதிக்கப்பட்ட நபரின் பேச்சு தொடங்கியது. அந்த நபரை பற்றி பேசத் தொடங்கியதும் அந்த நபரின் உடலில் இருக்கும் மோகினி பிசாசு அந்த இடத்தில் தோன்றியது.

என் உறவினரின் முகத்தை பார்த்தவாறு நான் அவரின் முன்பாக அமர்ந்திருந்தேன். அந்த மோகினி நான் பார்க்கின்றவாறு, என் உறவினரின் முதுகின் பின்பாக நின்றது. புகையும் வெளிச்சமும் கலந்ததைப் போன்ற ஒரு உருவம். வெள்ளை ஆடையில் இருக்கும் இளம் பெண்ணைப் போன்ற ஒரு உருவம். அது என் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது.

நான் அவரிடம் அந்த மோகினி இங்கே வந்து விட்டது என்று கூறினேன். அவரும் பதட்டத்துடன் வாருங்கள் இங்கிருந்து சென்று விடுவோம் என்றார். நான் கூறினேன் அந்த மோகினி நம்மை தொந்தரவு செய்ய வரவில்லை. நாம் என்ன பேசுகிறோம் என்று அறிந்து கொள்வதற்காக வந்திருக்கிறது என்று. பிறகு சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.

பல வருடங்களுக்குப் பிறகு மோகினியால் பாதிக்கப்பட்ட அந்த நபரை சென்ற மாதம் சந்தித்தேன். மோகினியின்  தொந்தரவு இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, இப்போது எந்த தொந்தரவும் இல்லை முழுதாக குணமாகிவிட்டது என்று கூறினார்.

நாகூர் ஆண்டவர் என் வாழ்வில் வந்த கதை


ஒருநாள் என் தந்தையின் கடையில் நான் கல்லாவில் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கும். மாலை மணி ஏழு அல்லது எட்டு இருக்கும். ஒரு மலாய்க்காரர் தொழுகைக்கு சென்று விட்டு, மலாய்காரர்கள் அணியும் தொழுகைக்கான ஆடையுடனே எங்கள் கடைக்கு வந்திருந்தார்.

அவர் அவருக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு கல்லாவில் இருந்த என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். இந்தியாவுக்கு சென்றிருக்கிறாயா என்று கேட்டார், சென்றிருக்கிறேன் என்று சொன்னேன். திடீரென நீ நாகூர் தர்காவிற்கு சென்றிருக்கிறாயா என்று கேட்டார். மலாய்காரர்களுக்கு நாகூர் தர்காவைப் பற்றி தெரிந்திருப்பது எனக்கு வியப்பை தந்தது. நான் சொன்னேன் தர்காவுக்கு செல்வது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான செயல் இஸ்லாமிய மார்க்கத்தில் தர்காவிற்கு செல்லக்கூடாது என்று கூறினேன்.

ஏனென்றால் அப்போது நான் இந்தியாவில் ஒரு புகழ் பெற்ற நபரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அவற்றை பின்பற்றி வந்தேன். என் பதிலைக் கேட்ட அந்த மலாய்க்காரர் கோபமடைந்தார். அவர் கேட்டார் உன் தாத்தா பாட்டி இறந்து விட்டால் அவர்களின் கல்லறைகளுக்கு செல்லமாட்டாயா?. உன் தாத்தா பாட்டியின் கல்லறைக்கு செல்வது இஸ்லாமிய மார்க்கத்தின்படி குற்றமாகுமா? என்று கேட்டார்.

அந்த தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் நபர் தானே நீயும் உன் குடும்பத்தாரும் இஸ்லாமியர்களாக இருப்பதற்கு காரணம்?. அவர்கள்தானே இஸ்லாமிய மார்க்கத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்றார்கள்?. அவர்களின் மூலமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொண்ட நீங்கள் அவர்களின் கல்லறைகளுக்கு செல்வது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை தானே? அது எப்படி குற்றமாகும்?. என்று கூறிவிட்டு சென்று விட்டார். இதற்குப் பின்புதான் ஒரு ஆச்சரியமான நிகழ்வு என் வாழ்கையில் நடந்தது.

அந்த மலாய்க்காரர் சென்றுவிட்ட பிறகு நான் கல்லாவில் இருந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இவர் ஏன் திடீரென அந்த தர்காவை பற்றி திடீரென கேட்கிறார்?. அந்த தர்காவில் இருப்பது யார்? இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இருக்கும் அந்த தர்காவை இவர் எப்படி அறிந்து கொண்டார்?. அந்த தர்காவிற்கு நான் செல்லமாட்டேன் என்று சொன்னதற்கு இவர் ஏன் கோபப்படுகிறார்?. அந்த தர்காவில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?. அந்த தர்காவில் அடங்கியிருக்கும் நபர் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவராக?. என்பதை போன்ற சிந்தனைகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.

இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது நான் எதர்ச்சையாக கல்லா பெட்டியை திறந்தேன். கல்லாவில் ஒரு புத்தம் புதிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகம் “நாகூர் ஆண்டவர் சரித்திரம்”. அவர் கூறிய அந்த தர்காவில் சரித்திரமாக இருந்தது. யாரும் வாசித்திராத அச்சில் இருந்து எடுக்கப்பட்டது போன்ற புத்தகம் திறக்கப்படாமல் புதிதாக இருந்தது.

அந்த புத்தகத்தை கண்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் தந்தையிடமும் தம்பியிடமும் மற்றவர்களிடமும் இந்த புத்தகம் யாருடையது என்று கேட்டபோது. அந்த புத்தகத்தை பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அந்த புத்தகம் எப்படி அங்கு வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த புத்தகத்தை வாசித்துதான் நாகூர் தர்கா வரலாறையும். நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றையும் அறிந்துக் கொண்டேன். அதன் பிறகு பல முறை நாகூர் தர்கா சென்றுள்ளேன்.

அந்த மலாய்காரர் யார் என்பதும் எனக்கு இன்று வரையில் தெரியாது. அந்த புத்தகம் எப்படி அங்கு வந்தது என்பதும் இன்று வரையில் எனக்கு தெரியாது. இது தர்கா விளம்பரம் அல்ல. எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன் அவ்வளவுதான். இது போல் பல ஆச்சர்யமான அனுபவங்கள் உள்ளன. மற்ற கட்டுரைகளில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

ஓஷோவும் நானும் - ஓஷோவுடன் சில அனுபவங்கள்

சிறுவயது முதலே அதாவது 14, 15 வயது இருக்கும் போதே, நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? என்னை படைத்தது யார்? என்னை ஏன் படைக்க வேண்டும்? இந்த உலகத்தைப் படைத்தது யார்? எவ்வாறு இந்த உலகத்திற்கு வந்தேன்? மனிதர்களின் பிறப்பு இறப்பு ஏன் ஏற்படுகிறது? என்று பல வகையான கேள்விகள் எனக்குள்ளே ஓடிக்கொண்டிருந்தன.

சிறுவயது முதலாகவே எதையுமே எதிர் கேள்வி கேட்க வேண்டும், எதையுமே தீர விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் எனக்கு இருந்து வந்தது. யாரையும் எதையும் அப்படியே நம்புவதிலோ, ஏற்றுக் கொள்வதிலோ, எனக்கு உடன்பாடு கிடையாது. யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று கேள்விகளைக் கேட்டு அதற்கு தக்க பதில் கிடைத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன். இதை எனக்கு கற்றுத் தந்தது சாக்ரடீஸ். அதனால் மதங்கள் கூறிய பதில்களில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. என் கேள்விகளுக்கு முறையான விடையளிக்கக் கூடிய எந்த நபரையும் அதுவரையில் நான் சந்திக்கவில்லை.

எனக்கு 17 வயது இருக்கும் போது, மலேசியாவில் பள்ளிப் பரிட்சை முடிந்து விடுமுறைக்காக தமிழகம் சென்றேன். தமிழகத்தில் எனது கிராமத்தில் இருந்து ஒரு சுற்றுலா குழுவுடன் குற்றாலம் சென்றேன். குற்றாலம் சென்று விட்டு திரும்பும் போது, மதுரையில் எங்களை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாருங்கள் என்று அனுமதி தந்தார்கள்.

அதுதான் எனக்கு நினைவு தெரிந்து தமிழகம் செல்லும் முதல் முறை. எனக்கு அங்கு எதுவுமே பரிச்சயம் கிடையாது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நான் நேராக சென்ற இடம் ஒரு புத்தகக் கடை. எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்ததால் புத்தகம் வாங்கலாம் என்று சென்றேன். அந்த கடையில் ஒரு புத்தகத்தில் தாடியுடன் எனக்கு பரிட்சயமில்லாத ஒரு நபர் புன்னகைத்துக் கொண்டிருந்தார். அந்த புத்தகத்தின் தலைப்பு “புல் தானாகவே வளர்கிறது”.

அந்த புத்தகத்தில் புன்னகைத்தவர் மரியாதைக்குரிய ஓஷோ அவர்கள். “புல் தானாகவே வளர்கிறது” என்ற தலைப்பு எனக்குள் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. 17 வருடங்களாக புற்களை பார்த்தும் அறிந்தும், அது சுயமாக யார் உதவியுமின்றி வளர்கிறது என்ற தெளிவு எனக்குள் ஏற்படவில்லை. முதல் முறையாக இந்த உலகத்தில் என் சிந்தனைக்கு எட்டாத பல விசயங்கள் இருப்பதை உணர்ந்தேன். சில ஓஷோ புத்தகங்களை வாங்கிக்கொண்டு, கடையிலிருந்து விடைபெற்றேன்.

எனக்கு ஆன்மீக குரு என்று யாருமே கிடையாது. அனைவரிடமும் கற்றுக்கொண்டேன் ஆனால் யாரையும் பின்பற்றுவதில்லை. இதை எனக்கு கற்றுத்தந்தவர் ஓஷோதான். ஆன்மீக உலகை எனக்கு அறிமுகப் படுத்தியதும், இந்த வாழ்க்கையை, இந்த உலகத்தை மற்றொரு புதிய கோணத்தில் பார்க்க வைத்ததும் ஓஷோதான். அதனால் எனது ஆன்மீக குரு என்று ஓஷோவைதான் குறிப்பிட வேண்டும். ஓஷோவின் புத்தகங்களை தேடி தேடி வாசிக்க தொடங்கினேன்.

ஓஷோவின் புத்தகங்களின் மூலமாகத்தான் எனக்கு பல ஆன்மீக குருக்கள் அறிமுகமானார்கள். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், இரமணர், குரு நானக், கபீர் டாஸ், ராபியா, ஹசன் பஸ்ரி, சூஃபி ஞானிகள், கலீல் ஜிப்ரான், மிகெய்ல நைமி இன்னும் எத்தனையோ ஞானிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு சந்தேகங்கள் தோன்றும் போதெல்லாம் புத்தகங்களின் வடிவில் எனக்கு விளக்கம் கூறி வந்தார்.

இந்த உலகில் எதை பற்றிய சந்தேகம் தோன்றினாலும் எனக்கு விடையளித்தார். இப்படித்தான் ஒரு நாள் எனக்கு இயேசு நாதரின் வாழ்க்கை சரித்திரத்தில் கூறப்படும் சில விசயங்களில் எனக்கு சந்தேகம் உண்டானது. யாரிடம் இதற்கு பதில் கிடைக்கும்? எனக்குள்ளேயே குழம்பிக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு நாள் எனக்கு அறிமுகமில்லாத ஒரு நபர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்ல ஜொகூர் வந்தார்.

எங்கள் கடைக்கு வந்தவர் திரும்ப போகும் போது ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அது ஒரு ஓஷோவின் புத்தகம் அதன் தலைப்பு மறந்துவிட்டது. அந்த புத்தகத்தில் எனக்கு தோன்றிய அனைத்து கேள்விகளுக்கும் விடையிருந்தது. ஓஷோவை பற்றி ஒரு பெண் எழுதியதை சிறுவயதில் வாசித்திருக்கிறேன். அதில் அந்தப் பெண்மணி ஓஷோ அவர் கூடவே இருந்து அவரை வழிகாட்டுவதாக, அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை எழுதியிருந்தார்.

அவரைப் போலவே ஓஷோ என்னருகிலேயே இருந்து என்னக்கு வழிகாட்டி பல விஷயங்களை கற்றுத்தந்தார். சிஷ்யன் தயாராக இருந்தால் குரு தோன்றுவார் என்பதற்கு எனக்கும் ஓஷோவுக்கும் உள்ள உறவு ஒரு உதாரணம். ஓஷோ என்னுடன் குருவாக நடந்துக் கொள்ளவில்லை, நல்ல நண்பனாகவே பழகினார்.