கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label அஜீரணம். Show all posts
Showing posts with label அஜீரணம். Show all posts

மலச்சிக்கல் உண்டாக காரணங்களும் மலச்சிக்கலுக்கான தீர்வுகளும்

வயிற்றின் உள்ளே செல்லும் அனைத்து உணவுகளும் முறையாக ஜீரணமாகி, சக்திகளை உடல் பிரித்து எடுத்த பிறகு மீதம் இருப்பவற்றை கழிவாக உடல் வெளியேற்ற வேண்டும். இது இயற்கையின் நியதி. ஆனால் பலருக்கு இது முறையாக நடப்பதில்லை.

"செரிமான கோளாறும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள்" என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.

செரிமானம் குறைபாடுகள் தான் மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் எல்லாத் தொந்தரவுகளுக்கும் முதன்மை காரணமாக இருக்கிறது. அடுத்ததாக மலச்சிக்கல். செரிமான கோளாறுகள் பற்றி அன்று பார்த்தோம். மலச்சிக்கலைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மலம் கழிப்பதில் சிக்கல் உண்டாவது ஏன்?
மலம் கழிப்பதில் சிக்கல் உண்டாகி, முறையாக மலம் கழிக்க முடியாமல் பலர் அவதியுறுகின்றனர். மலச்சிக்கலில் பல வகைகள் உண்டு. அவற்றில் சில...

1. சிலருக்கு “எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது, ஆனால் கண்ட நேரத்தில் வரும், வந்தாலும் தடுக்க முடியாது வராவிட்டாலும் ஏன் என்று கேட்க முடியாது”.

2. சிலருக்கு “வரும் ஆனால் வராது”

3. சிலருக்கு “வந்திரு வந்திரு தானா வந்திரு என்று கெஞ்ச வேண்டியது வரும்”

4. சிலருக்கு "ஆடிக்கு ஒருதரம் அம்மாவாசைக்கு ஒரு தரம் வரும்".

5. என்னிடம் வைத்தியத்துக்கு வந்த ஒருவருக்கு ஐந்து நாட்களுக்கு ஒருதரம் தான் மலம் வருமாம்.

6. சிலருக்கு எதை சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும்.

7. சிலருக்கு உணவு உட்கொள்வதற்கு முன்பாக மலம் கழிக்கும் எண்ணம் உண்டாகும்.

இன்னும் பல வகையான மலச்சிக்கல்கள் உள்ளன.

உடலின் உள்ளே நாம் அனுப்பும் உணவுகளின் கழிவுகள் வெளியேற முடியாத போது, கழிவுகள் உடலின் உள்ளேயே தங்கிவிடுகின்றன. இப்படி உடலில் தேங்கும் கழிவுகள், தேங்கும் உறுப்புகளில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன.

பல வகையான மலச்சிக்கல்களால் மக்கள் அவதியுற என்ன காரணம்?

1. மலம் கழிப்பதில் தொந்தரவுகள் உண்டாவதற்கு முதல் முக்கிய காரணம், செரிமான கோளாறுதான்.

2. செரிமானம் சீர்கேடு அடைய முதல் முக்கியமான காரணம், பசியின்றி உண்பதுதான்.

3. செரிமானம் முறையாக நடக்காதது ஏன் என்ற முந்தைய கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன், அதை வாசித்துப்பாருங்கள்.

4. அதிகமாக காரமான உணவுகள் சாப்பிடுவது.

5. இரவில் தாமதமாக சாப்பிடுவது.

6. இரவில் விழித்திருப்பது, தாமதமாக உறங்கச் செல்வது, இரவு வேலை செய்வது.

7. இரவு மிகக் குளிர்ந்த அறையில் உறங்குவது.

8. மன நிம்மதி அற்று இருப்பது.

9. காலையில் தாமதமாக எழுந்திருப்பது.

10. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.

11. உடலின் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவது.

இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மலச்சிக்கலுக்கான தீர்வைப் பார்ப்போம்.

மலச்சிக்கலுக்கான தீர்வுகள் 

1. பசியின்றி சாப்பிட வேண்டாம். கடிகாரத்தைப் பார்க்காமல், உங்கள் வயிற்றைக் கேட்டு சாப்பிடுங்கள்

2. உணவை நன்றாக மென்று, ரசித்து, ருசித்து, அமைதியாக சாப்பிடுங்கள்.

3. தண்ணீரை அளவோடு அருந்துங்கள், தாகமின்றி தண்ணீர் அருந்த வேண்டாம்.

4. இரசாயனங்கள் கலந்த, உணவுகள், பானங்கள், மருந்துகள் வேண்டாம்.

5. இரவில் சமைத்த உணவை சாப்பிடாமல் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.

6. இரவில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டானால் மாலை 7 மணிக்குள் சாப்பிடுங்கள்.

7. இரவில் 9 மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள்.

8. மைதாவிலிருந்து தயார் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்.

9. பாக்கெட் பாலை தவிர்த்து. நெய், மோர், தயிர், வெண்ணெய் குறைத்திடுங்கள்.

10. காலையில் சீக்கிரமாக எழுந்திருங்கள்.

11. வேலைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக எழுந்திருங்கள்

12. பிராணாயாமம், தியானம் செய்யுங்கள், 5 நிமிடம் போதும்.

13. மனதைப் பயம், கவலை, துக்கம், ஏக்கம், கர்வமின்றி அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் தொந்தரவு உள்ளவர்களுக்கு

1. காலையில் 2 கப் வெந்நீர் அருந்துங்கள், அருந்தி குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து, கழிப்பறைக்குச் செல்லுங்கள்.

2. கழிப்பறையில் சென்று அவசரப்படாதீர்கள், அமைதியாகவும் அமர்ந்திருங்கள், அது தானாய் வெளியேறும்.

3. முக்குவது, வயிற்று அமுக்குவது, அவசரப்படுவது எதுவும் செய்யாதீர்கள். அது தானாய் தான் வெளியேறும். நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

4. பொறுமையாகக் காத்திருந்தால் கண்டிப்பாக மலம் வெளியேறும், ஓர் இரு நாளைக்கு வராவிட்டாலும், அடுத்த நாள் நிச்சயம் வெளியேறும்.

5. கழிப்பறை செல்லும் நேரத்தை, ஒரே நேரமாக, ஒரே இடமாக வைத்துக்கொண்டால், உடல் சுலபமாக பழகிவிடும்.

6. உடல் பழகிவிட்டால், அந்த நேரம் வந்ததும், அந்த இடம் வந்ததும் மலம் கழிக்கத் தோன்றும்.

7. மலம் கழிக்க வேண்டி எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ளாதீர்கள். உடல் மாத்திரைக்கு பழகிவிட்டால், பின்பு மாத்திரை இல்லாமல் மலம் வராது.

8. நான் இரண்டு நாளை மலம் கழிக்க வில்லை, என்பது போன்ற பயத்தை மனதில் விதைக்காதீர்கள், வயிற்றின் உள்ளே சென்ற அனைத்தும் வெளியே வந்தே தீரும்.

9. அது எப்ப வரும் எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கினால் கண்டிப்பாக வரும்.

அஜீரணமும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள்

அஜீரணமும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அஜீரணம் தான் மனிதர்கள் அனுபவிக்கும் அனைத்து நோய்களுக்கும் அனைத்து தொந்தரவுகளுக்கும் மூல காரணமாக இருக்கிறது.

சிலருக்கு ஜீரணம் முறையாக நடைபெறாதது ஏன்?.
ஜீரணம் சீர்கேடு அடைய பல காரணங்கள் உண்டு, அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. ஜீரணம் சீர்கேடு அடைய முதல் முக்கியமான காரணம், பசியின்றி உண்பது.

2. உணவை நன்றாக மெல்லாமல் விழுங்குவது.

3. பழங்கள் காய்கறிகளை தவிர்ப்பது.

4. சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் அருந்துவது.

5. சாப்பிடும் போது உணவின் மீது கவனம் செலுத்தாமல் மற்ற சிந்தனைகளில் மூழ்குவது, தொலைக்காட்சி பார்ப்பது, பாடல்கள் கேட்பது, வாசிப்பது, அரட்டை அடிப்பது, தொலைப்பேசியை பயன்படுத்துவது.

6. இரசாயனங்கள் கலந்த உணவுகள் அல்லது புட்டியில், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது.

7. அதிகமான காரம் அல்லது அதிகமான புளிப்பு சுவைக்கொண்ட உணவுகளை உண்பது

8. இரவில் தாமதமாக சாப்பிடுவது.

9. இரவில் விழித்திருப்பது.

10. இரவில் தாமதமாக உறங்கச் செல்வது.

11. இரவு மிகக் குளிர்ந்த அறையில் உறங்குவது.

12. மன நிம்மதி அற்று இருப்பது.

13. காலையில் தாமதமாக எழுந்திருப்பது

14. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவது

அஜீரணத்தை குணபடுத்த
ஜீரணம் சீராகி உண்ணும் உணவு முறையாக செரிமானமாகி அனைத்து சத்துக்களும் உடலில் சார்ந்து மீதமுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற சில ஆலோசனைகள்.

1. பசியின்றி சாப்பிடாதீர்கள். சாப்பிடும் போது பசி அடங்கிவிட்டால் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

2. உணவை நன்றாக பொறுமையாக, மென்று விழுங்குங்கள்

3. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள்

4. சாப்பிடும்போது தேவையில்லாமல் அதிகமாக தண்ணீர் அருந்தாதீர்கள்

5. சாப்பிடும் போது உணவின் மீது கவனம் செலுத்துங்கள்

6. இரசாயனங்கள் கலந்த உணவுகள் அல்லது புட்டியில், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்

7. உணவில் காரம் மற்றும் புளிப்பைக் குறையுங்கள்

8. இரவு உணவை 6-7 க்குள் முடித்துக் கொள்ளுங்கள்

9. இரவில் 9 மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள்

10. மனதைக் குழப்பமின்றி, கவலையின்றி, நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள்

11. காலையில் சீக்கிரமாக எழுந்திருங்கள்

12. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

13. இரவில் சமைத்த உணவை தவித்து சமைக்காத பழங்களை மட்டுமே சாப்பிடுங்கள்.

மேலே கூறப்பட்டவற்றை பின்பற்றினால், உடலில் ஜீரணம் முறையாக நடக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


அஜீரணம் உண்டாக காரணமாக இருப்பவை எவை?

பசியில்லாமல் சாப்பிடுவதும். உணவின் மீது கவனமில்லாமல் சாப்பிடுவதும். உணவை மெல்லாமல் விழுங்குவதும். சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் அருந்துவதும் அஜீரணம் உண்டாக முக்கிய காரணமாக இருக்கின்றன.

மலச்சிக்கலும் அஜீரணமும் நோய்களின் பிறப்பிடம்

மலச்சிக்கலும் அஜீரணமும் தான் மனிதனின் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவருக்கும் செரிமான கோளாறோ மலச்சிக்கலோ உண்டானால் போதும் அனைத்து நோய்களும் அழையா விருந்தாளியாக பின் தொடரும்.

இதைத்தான் திருவள்ளுவர் “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்” என்றார். இந்த குறளின் விளக்கம் “இதற்கு முன் வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது”.

மருந்து என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது இன்றைய மக்கள் பயன்படுத்தும் இரசாயனத்திலிருந்து செய்யப்படும் ஆங்கில மருந்துகளை அல்ல. மனிதர்களுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காத மூலிகைகளை குறிப்பிடுகிறார். உண்ட உணவு ஜீரணித்து, பசி உண்டான பின்பு உணவு உட்கொண்டால் எந்த நோயும் உண்டாகாது அதனால் எந்த மருந்தும் தேவைப்படாது என்கிறார் திருவள்ளுவர்.

செரிமான கோளாறும் மலச்சிக்கலும்
அஜீரணமும் மலச்சிக்கலும் எவ்வாறு நோய்களை உண்டாக்கும் என்பதை பார்ப்போம். அதற்கு முன்பாக உட்கொண்ட உணவு உடலின் உள்ளே என்ன செய்கிறது என்பதை சற்று பார்ப்போம்.

ஒரு மனிதனின் உடலில் சத்துக்கள் குறையும்போது, புதிய சத்துக்களை உற்பத்தி செய்வதற்காக உடல் உணவைக் கேட்கும். பசி என்ற உணர்வை உண்டாக்கும். பசி உண்டான பின்பு உண்ட உணவை ஜீரணிப்பதற்கு தேவையான சுரப்பிகள் முழுமையாகச் சுரக்கும். பசி வந்து தேவையான சுரப்பிகள் எல்லாம் சுரந்த பின்பு, உணவை முறையாக மென்று உமிழ்நீர் கலந்து விழுங்கும் போது, உண்ட உணவு முழுதாக செரித்து உடலுக்குத் தேவையான முழு சத்தாக மாறும். செரிமானத்துக்குப் பின்பு உணவின் கழிவுகளும் எந்த தேக்கமுமின்றி முழுமையாக வெளியேறும். இதுதான் உட்கொள்ளும் உணவின் சுழற்சி.

செரிமானம் முறையாக நடைபெறும் பட்சத்தில், உடலுக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். கழிவுகளும் எந்த தேக்கமுமின்றி எளிதாக வெளியேறும். கழிவுகள் இல்லாத உடலில் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும் போது உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்கும். இறுதிவரையில் எந்த நோயும் உண்டாகாது.

அஜீரணமும் மலச்சிக்கலும் எப்படி நோய்களை உண்டாக்கும் என்பதை பார்ப்போம்.
பசியில்லாத போது உணவை உட்கொண்டால், உணவைச் செரிப்பதற்கான சுரப்பிகள் சுரக்காது. பசியில்லாமல் உண்ட உணவு வயிற்றிலேயே அதிக நேரம் கிடக்கும். வயிற்றில் கிடக்கும் உணவு அழுக தொடங்கும். அந்த அழுகிப்போன உணவிலிருந்து உண்டாகும் வேதி பொருட்களும் இரசாயனங்களும் உடலிலேயே தேங்க தொடங்கும். அந்த இரசாயனங்கள் தேங்கும் உறுப்புகளைக் கெடுத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை பாதித்து நோய்களை உண்டாக்கும். பசியின் அளவுக்கு மிகுதியாக உணவை உட்கொண்டாலும் இந்த பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

மலம் என்பதே, ஜீரணமான உணவின் கழிவுகள்தான். உண்ட உணவு ஜீரணமாகாத போது உடலுக்கு சத்தும் கிடைக்காது மலமும் முழுதாக வெளியேறாது. மலம் குடலிலேயே தேங்கத் தொடங்கும். குடலில் தேங்க தொடங்கும் மலம், உடலில் நோய்களை உண்டாக்கும்.

உடலில் தேங்கும் கழிவுகள் இந்த குறிப்பிட்ட உறுப்பில்தான் நோய்களை உண்டாகும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. கால் பாதம் முதல் தலை வரையில் அந்த கழிவுகள் இரத்தம் மூலமாக உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். உடலில் எங்கு வேண்டுமானாலும் நோய்களை உண்டாக்கலாம். சேர்ந்த கழிவுகளின் வீரியத்துக்கு ஏற்ப நோய்களில் தன்மையும் இருக்கும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள்
இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு நோய்கள் உண்டாவதற்கு, பசியில்லாமல் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் தான் காரணமாக இருக்கிறது. பசி உண்டாகி உடல் உணவு கேட்கும் வரையில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்காதீர்கள். உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லுங்கள். இன்று பசியில்லாமல் அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் பிற்காலத்தில் அவர்கள் நோயாளிகளாக மாற காரணமாக இருக்கும்.

இதற்கும் முந்தைய வேலையில் உண்ட உணவு முழுதாக ஜீரணமானால்தான், மறுபடியும் பசி உண்டாகும். பலருக்கு மலக்குடலில் மலம் தேங்கி இருப்பதனாலும், வயிற்றில் ஜீரணமாகாத உணவு கிடப்பதாலும் பசி உண்டாவதில்லை. பசி இல்லையென்றால் வயிற்றிலோ குடலிலோ கழிவுகள் தேங்கி இருக்கிறது என்பதை உணராமல், மறுபடியும் மறுபடியும் பசியில்லாமல் உணவை உட்கொள்வதுதான் பல நோய்கள் உண்டாக காரணமாக இருக்கிறது.

நன்றாக பசி உண்டான பின்பு உணவு உட்கொள்ளும் பழக்கத்தையும், மலம் வெளியேறும் வரையில் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் வழக்கத்தையும் உண்டாக்கிக் கொள்ளுங்கள். உடலில் எந்த நோயும் உண்டாகாது, ஒரு வேலை இப்போது ஏதாவது நோய்கள் இருந்தாலும் படிப்படியாக குணமாகும்.