மனித வாழ்க்கையும் பிறப்பும் இறப்பும்

 

இந்த உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரணித்தாக வேண்டும், என்பது அனைவருக்கும் தெரிந்த உலக நியதி. இருந்தும் மரணத்தை யாருமே விரும்புவதோ, எதிர்பார்ப்பதோ, மரணத்துக்கு தன்னை தயார் செய்துகொள்வதோ கிடையாது. நெடுங்காலம் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருப்பது தவறில்லை ஆனாலும் மரணமே இல்லாமல் என்றும் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு அல்லவா?

இளமையில் அல்லது முதுமையின் தொடக்கத்தில் நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்த முயற்சி செய்யலாம். 80 - 90 வயதில் கூட நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவது தவறு. முதுமையில் ஆரோக்கியமாக வாழக் கூடாது என்றோ, ஆரோக்கியமாக வாழ முடியாது என்றோ நான் கூற வரவில்லை, மாறாக இயற்கையின் விளைவுகளை எதிர்க்காதீர்கள், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

பாலர்ப் பள்ளியில் கல்வி பயிலும் ஒரு சிறுவன், அங்கு அனுபவம் செய்யும் விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் விருப்பம் கொண்டு இறுதி வரையில் பாலர்ப் பள்ளி படிப்பு மட்டுமே போதும் என்று எண்ணுவதை போன்றது இந்த உலகத்திலேயே நிரந்தரமாக இருந்து விடலாம் என்று எண்ணுவது. பூவுலக வாழ்க்கை என்பது ஒரு குறுகிய கால பயிற்சி மட்டுமே நிரந்தரமாக யாரும் இவ்வுலகில் வாழ்ந்து விட முடியாது.

மரணம் என்பது பிறந்தது முதலாக வாழ்ந்த வாழ்க்கைக்கு நடத்தப்படும் தேர்வாகும். இந்த உலக வாழ்க்கையை சரியாக புரிந்துகொண்டு வாழ்பவர்கள் அடுத்த உலக வாழ்க்கைக்கு முன்னேறி செல்கிறார்கள். உலகில் பற்றுக் கொண்டு வாழ்க்கை வழங்கிய பாடங்களை தவறவிட்டவர்கள் இந்த பூமியிலேயே மீண்டும் விதைக்கப்படுகிறார்கள்.

To Top