திடீர் மருத்துவர்களால் உருவாகும் நோய்கள்

 

நேற்று உணவகத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு மனிதர் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பது என் காதுகளில் எதார்த்தமாக விழுந்தது. அவரிடம் யாரோ ஒருவர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கை வலிக்கிறது என்று கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

அதற்கு அவர் கூறிய பதில் “நீ கோவிட் தடுப்பூசி மலேசியாவில் போட்டுக் கொண்டாயா அல்லது சிங்கப்பூரில் போட்டுக் கொண்டாயா என்று கேட்டார்”.

அதைத்தொடர்ந்து “சிங்கப்பூரில் ஊசி போட்டுக் கொண்டிருந்தால் நீ பயப்படத் தேவையில்லை, பனடோல் மாத்திரைகளை மட்டும் உட்கொள்” என்று கூறினார். 

“நான் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு காய்ச்சல் உருவானது, 12 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட பின்பு தான் குணமானது” என்றும் அவர் கூறினார்.

அடுத்ததாக கை வலிக்கு ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுக்குமாறும், அதை தொடர்ந்து சுடு தண்ணீரைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்குமாறு தொலைப்பேசியில் யாருக்கோ ஆலோசனை கூறினார்.

ஊசி செலுத்திக் கொண்ட பிறகு, ஊசி செலுத்திய பகுதி எதற்காக வலிக்கிறது என்று தெரியாது. காய்ச்சல் எதற்காக உருவாகிறது என்பது தெரியாது. உடலில் வலியும் அசதியும் எதனால் உருவாகின்றன என்பதும் தெரியாது. உடல் இயக்கத்தைப் பற்றியோ மருத்துவத்தைப் பற்றியோ ஒரு மண்ணும் தெரியாது. 

பன்னிரண்டு பாராசிடமால் மாத்திரைகள் ஒரு மனிதனை கொல்லக் கூடியது என்பது கூட தெரியாத இந்த நபர் பிறருக்கு மருத்துவ ஆலோசனை கூறிக் கொண்டிருக்கிறார். பரசிட்டமோல் மாத்திரை காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் என்பதை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு மருத்துவம் கூறும் இவ்வகையான திடீர் மருத்துவர்களால் தான் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கையும் திடீர் மரணங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.


To Top