நோயும் பொருளாதாரமும்

 
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களுக்கு, வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை சம்பாதிப்பது கடினமாக இருக்கிறது. வாழ்வியல் செலவுகள் அதிகரித்துவிட்டதினால் பெரும்பாலும் பணத்தை சேமிக்க வழியில்லாமல், வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கிறது. அனைத்தையும் மீறி பணத்தை சேர்த்தால், ஒன்று உழைத்தவன் அனுபவிக்க வேண்டும் அல்லது அவன் குடும்பம் அனுபவிக்க வேண்டும், அதுதானே நியாயம்? 

இரண்டுமில்லாமல், பெரும்பாலான மனிதர்கள் முதுமை காலத்தில் உண்டாகும் நோய்களுக்கு மருத்துவம் செய்கிறேன் அல்லது அறுவை சிகிச்சை செய்கிறேன் என்ற பெயரில், சில மருத்துவ கூட்டத்தாரிடம் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வங்களை பறிகொடுத்து விடுகிறார்கள். சேர்த்த செல்வம் அனைத்தும் மருத்துவமனைகளுக்கு கொடுத்தாகி விட்டது பரவாயில்லை, அதற்கு பயனாக உடலின் ஆரோக்கியமாவது திரும்பியதா என்றால் அதுவும் இல்லை. 

எனக்கு தெரிந்த சில செல்வந்தர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்புக்கள் அனைத்தையும் மருத்துவத்திற்கும் அறுவை சிகிச்சைக்கும் செலவழித்துவிட்டு கஷ்டப்படுகிறார்கள் சிலர் இறந்து விட்டார்கள். சிலர் பத்து லட்சங்களுக்கு மேல் சிறப்பு மருத்துவமனைகளில் செலவு செய்துவிட்டு மரணிக்கிறார்கள். அதற்கு அவர்கள் வீட்டில் மரணித்திருந்தால் மருத்துவமனைக்கு கொடுத்த பத்து லட்சம் அவர்களின் குடும்பத்துக்காவது உதவும். இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கலாம், ஆனாலும் இது சாத்தியமான வார்த்தை. மனிதனாக பிறந்த அனைவரும் மரணிக்க வேண்டியது இயற்கையின் நியதி அல்லவா? 

ஒரு முக்கியமான விசயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நோய் வேறு, மரணம் வேறு, இவை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை உடலின் தொந்தரவுகள். மனிதனுக்கு நோய் உண்டானால் அதனை சரி செய்ய வாய்ப்புகள் உள்ளன. சரியான மருத்துவம் செய்தால் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்த முடியும். ஆனால் சிலருக்கு மரணம் நெருங்கும் வேளைகளில் உடலில் பாதிப்புகள் அல்லது நோய்கள் உண்டாகலாம். மரணம் உண்டாக கரணம் தேவையல்லவா?

உடலில் உண்டாகும் பலவீனங்களினாலும், உடலில் சேரும் கழிவுகளினாலும், நோய்களோ இயக்க பாதிப்புகளோ உண்டானால் அவற்றை சரி செய்யலாம். மரணத்தை உண்டாக்க உடலில் நோய்களோ இயக்க பாதிப்புகளோ உருவானால் அவற்றை சரி செய்ய யாராலும் முடியாது. எத்தனை கோடி செலவு செய்தாலும் மரணத்தில் தான் முடியும். வேண்டுமென்றால் மரணத்தை ஒரு சில நாட்கள் தள்ளி போடலாம் ஆனாலும் அந்த நோயாளிக்கு மரண வேதனை மட்டுமே மிஞ்சும்.

நோயாளியின் வயதையும், உடலின் தன்மையையும், உடலின் இயக்கத்தையும், மனதின் இயக்கத்தையும், கணக்கில் கொண்டு, அது நோயா அல்லது மரணத்தின் அறிகுறியா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையின் தூண்டுதலை மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டால் நோயாளியின் குடும்பமும் நிம்மதியாக இருக்கும் நோயாளிக்கும் நிம்மதியான மன நிறைவான மரணம் உண்டாகும். சிலர் முதியவர்களின் விவரங்களை எனக்கு அனுப்பி அவர்களுக்கு ஹீலிங் செய்து எப்படியாவது காப்பாற்றுங்கள் என்பார்கள். எனக்கு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். என்பது தொண்ணூறு வயதில் கூட மனிதர்கள் மரணிக்க கூடாது என்று சிலர் எண்ணுகிறார்கள்.

மரணத்தை கண்டு அஞ்ச தேவையில்லை. பழைய செருப்பை மாற்றுவதை போன்று, மரணம் என்பது வெறும் உடலை மாற்றும் செயல் மட்டுமே. மரணத்தை தூண்டக்கூடிய உடலின் தொந்தரவாக இருந்தால் அந்த நோயாளி அமைதியாக நிம்மதியாக உடலை நீக்க உதவி செய்ய வேண்டும். உயிர் நிம்மதியாக பிரியும் வகையில் சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும். அதை விடுத்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் வலியும் வேதனையும் கூடிய மரணம் தான் மிஞ்சும். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. அத்துடன் சேர்த்து மருத்துவ செலவுகள் என்ற பெயரில் செல்வமும் கரையும். 

To Top