எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்

 

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியாவது காப்பாத்துங்க” “உங்களை தான் நம்பி இருக்கிறோம் நீங்கள் தான் எப்படியாவது காப்பாத்த வேண்டும்” மருத்துவர்கள் அடிக்கடி கேள்விப்படும் வாக்கியங்கள். மனிதர்களை மரணத்திலிருந்து மருத்துவர்களால் காப்பாற்றிவிட முடியுமா? அவ்வாறு செய்வதற்கு மருத்துவர்கள் என்ன கடவுள்களா? அல்லது பெருமளவு பணத்தை செலவு செய்வதனால் மரணத்தருவாயில் இருப்பவர்களை காப்பாற்றி விட முடியுமா? மரணத்தை வெல்லக் கூடிய மருந்துகள் ஏதேனும் உள்ளனவா?

உலகையே ஆண்ட மன்னாதி மன்னர்களும், ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டி ஆண்ட அரசியல்வாதிகளும், பெரும் செல்வந்தர்களும், மரணித்து விட்டார்கள். ஊரையே விலை கொடுத்து வாங்கக் கூடிய அளவுக்கு செல்வம் வைத்திருந்த மனிதர்களும் மருத்துவம் பயனளிக்காமல் மரணித்து விட்டார்கள். புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும், உலகம் போற்றும் மருத்துவமனைகளிலும், அதிகமான சிறப்பு தேர்ச்சி பெற்று மருத்துவர்கள் நிறைந்த மருத்துவமனைகளிலும், நோயாளிகள் மரணித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கூட மரணத்திலிருந்து தப்புவதில்லை. 

பணம் இருக்கிறது, வசதி இருக்கிறது நோய் உண்டானால் மருத்துவமனைகளுக்கு சென்று குணப்படுத்திக் கொள்ளலாம் என்று பெரும்பாலான மனிதர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். பணத்தை கொண்டு மருந்தை வாங்கலாம், மருத்துவம் செய்து கொள்ளலாம், அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் ஆனால் ஆரோக்கியத்தை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. நோயாளியை எப்படியாவது காப்பாற்றலாம் என்ற வழிமுறையே உலகில் கிடையாது. மனிதனின் உடல் உபாதைகள் குணமாகி ஆரோக்கியம் திரும்ப சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் மட்டுமே நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல். - (குறள் - 948)

சரியாக முறையாக, நோயையும், நோயின் மூலத்தையும், அதன் தன்மையையும் கண்டறிந்து, அதற்கேற்ற மருத்துவம் செய்தால் நிச்சயமாக நோய்களை குணபடுத்த முடியும். அதை விடுத்து பெரிய மருத்துவமனை, புகழ்பெற்ற மருத்துவமனை என்பதற்காக மருத்துவத்துக்கு சென்றால் கடினம்தான். நோய்கள் உண்டாக அடிப்படை காரணமாக இருப்பது உடலின் சேரும் கழிவுகள், அல்லது உடலில் உண்டாகும் ஆற்றல் குறைபாடுகள். இவற்றை புரிந்து கொண்டு நோயை குணபடுத்த முயன்றால் நிச்சயமாக நோய்களை குணபடுத்த முடியும். 

கழிவு தேக்கத்தினால் உண்டான நோயாக இருந்தால், தொந்தரவு உண்டான உடலின் பகுதியையும், நோயின் மூலத்தையும், நோய் உண்டான காரணத்தையும், கழிவு சேர்ந்திருக்கும் உடலின் பகுதியையும், அந்த கழிவை வெளியேற்றும் வழிமுறையும் கண்டறிந்து மருத்துவம் செய்ய வேண்டும். ஆற்றல் குறைபாட்டினால் உண்டான நோயாக இருந்தால், ஆற்றல் குறைபாடு உண்டான உடலின் பகுதியையும், ஆற்றல் குறைபாடு உண்டான காரணத்தையும், அந்த ஆற்றல் குறைபாட்டை சரி செய்யும் வழி முறையையும் கண்டறிந்து மருத்துவம் செய்ய வேண்டும். 

எல்லா மருத்துவத்திலும் எல்லா நோயும் குணமாவதில்லை, அதனால் உண்டாகியிருக்கும் நோயை குணபடுத்தக் கூடிய சரியான மருத்துவத்தை நாடினால் நிச்சயமாக நோய்கள் குணமாகும். 

To Top