கடவுள் தன்மையை அடைவது எப்படி


ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் தன்மை புதைந்திருப்பதனால் ஒவ்வொரு உயிரிலும் ஒவ்வொரு பொருளிலும் நம்மால் கடவுளைக் காணவும் உணரவும் முடியும். 

வானம், மேகம், சூரியன், நிலா, நட்சத்திரங்கள், வானவில், மண், நீர், நிலம், காற்று, உஷ்ணம், வெளிச்சம், அனைத்திலும் கடவுளின் இருப்பை உணந்துகொள்ள முடியும். பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் கூட கடவுளின் தன்மையை பிரதிபலிக்கும்.

ஒரு குழந்தை தன் கையிலிருக்கும் பொம்மையை கொண்டு கடவுளை உணர்ந்துவிடும். அதன் கையிலிருக்கும் பொம்மை கடவுளின் இருப்பையும் பாதுகாப்பையும் அந்த குழந்தைக்கு வழங்கும். சிறந்த பெற்றோர்களிடம் குழந்தைகள் கடவுளின் தன்மையை உணர்ந்துக் கொள்ளும், அனுபவம் செய்யும்.

இணக்கமான கணவன் மனைவி உறவில் உண்டாகும் அன்பில் கடவுளின் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும். ஒரு நல்ல வியாபாரியிடம் வாடிக்கையாளரும், ஒரு நல்ல வாடிக்கையாளரிடம் வியாபாரியும் கடவுளின் இருப்பை உணந்துகொள்ள முடியும்.

தெருவில் நடக்கும் மனிதர்கள், பசு, காளை, நாய், பூனை, நடக்காமல் நின்று வேடிக்கை பார்க்கும் மரங்கள், மூலமாக கூட கடவுளின் இருப்பை உணந்துகொள்ள முடியும்.

சுத்த மெய்ஞான அறிவுக் கண்களுடன் காணும் பொழுது, கடவுளைத் தவிர நம்மால் வேறு எதையும் காண முடியாது. கடவுளை அடைவது எளிது ஆனால் அந்த நிலையை தக்க வைத்துக் கொள்வது கடினம். 

கடவுள் நிலையை அடைந்தவர்கள் கூட, தன்னிலை குன்றி மீண்டும் மனித பிறப்பு எடுப்பதாக நமது புராணங்கள் கூறுகின்றன. இந்நிலையில் தற்போது மனிதனாக பிறந்து மனித வாழ்க்கையை அனுபவம் செய்யும் மனிதர்கள் தெய்வ நிலையை உணர்வதும் அனுபவம் செய்வதும் சாத்தியம்தான். ஆனால் கடவுள் நிலையை அடைந்தாலும் இறுதி வரையில் அந்நிலையை தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினம்.

சோதனையும் பரிட்சையும் இன்றி எந்த உயர்வும் சாத்தியமில்லை அல்லவா. தெய்வ நிலையை அடைந்தும் அனுபவம் செய்தும் சோதனையில் தோற்று மீண்டும் உலக ஆசைகளில் உழன்று கீழான வாழ்க்கையை வாழும் மனிதர்கள் ஏராளம்.

To Top