பக்தி மார்க்கத்தின் இரண்டு வழிபாட்டு முறைகள்

இறை நம்பிக்கையின் (பக்தி மார்க்கத்தின்) இரண்டு வழிபாட்டு முறைகள். 

இறை நம்பிக்கை என்றதும் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்புவதும், அவரை தொழுவதும் பூஜிப்பதும் தான் இறை நம்பிக்கை என்று பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. சைவ சமயத்தின் பக்தி மார்க்கத்தில் இறை நம்பிக்கையை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கிறார்கள்.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பெருமானால் திருப்பெருந்துறை என்று போற்றப்படும் திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்றால் இறைவனை (திருவை) அடையக்கூடிய, இறைவனுடன் பயணிக்கக்கூடிய இடம் என்று பொருளாகும். 

குருவாக தோன்றி தனக்கு உபதேசம் செய்து, பின் மாயமாய் மறைந்த சிவபெருமானின் நினைவாக, மாணிக்கவாசகர் பெருமான் ஆத்மநாதர் திருக்கோயிலை அங்கு அமைத்தார். அந்த கோயில் முழுமையாக ஆகம விதிகளுக்குள் அடங்காமல் அமைக்கப்பட்டுள்ளது, மூலவர் சிலை, கொடிமரம், கூட கிடையாது என்பது சிறப்பு.

அந்த சிறிய கோயிலுக்கு அருகே மாணிக்கவாசகர் தனது ஆத்ம குருவான தட்சிணாமூர்த்தியை கண்ட குருந்த மரம் என்று நம்பப்படும் இடமும் அமைந்துள்ளது. அந்த குருந்த மரத்தின் வழித்தோன்றல் என்று நம்பப்படும் மரம் இன்றும் உள்ளது.


பிற்காலத்தில் ஆண்ட மன்னர்களும் ஆட்சியாளர்களும் அந்த கோயிலை சுற்றி பல வசதிகளை உருவாக்கி கோயிலை விரிவாக்கம் செய்து மதில் சுவரையும் எழுப்பியுள்ளார்கள்.

அந்த கோயிலின் நுழைவாயிலில் மேற்கூரையில் ஒரு குரங்கு மற்றும் ஒரு உடும்பின், உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களுக்கு என்ன பொருள் என்று விளங்காததால் மனிதர்களின் தாவிக்கொண்டே இருக்கும் மனதையும், பிடிவாத குணத்தையும் குறிக்கும் சிற்பங்கள் என்றுதான் முதலில் நினைத்தேன் பின்புதான் அந்த சிற்பங்களின் பொருள் விளங்கின.


சைவ சமயத்தில் மனிதர்கள் இறைவனின் மீது செலுத்த வேண்டிய பக்தியை இரு பெரும் வகைகளாக விளக்க அந்த குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களை வடித்துள்ளார்கள். முதலாவதாக முழுமையாக இறைவனிடம் சரணாகதி அடைதல், இரண்டாவதாக மாணிக்கவாசகர் கூறுவதை போன்று “சிக்கென பிடித்தல்”. 

பெரியபுராணத்தில் வருகின்ற நாயன்மார்களின் பக்தியை போன்று என்ன நடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறவாமல், இறைவனை விட்டு விலகாமல், சந்தேகம் கொள்ளாமல் முழுமையாக உடல், மனம் மற்றும் உயிரை ஒப்படைத்தல்.

“என் செயலாவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்” என்று பட்டினத்தார் பாடியதைப் போன்ற உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக இறைவனிடத்திலே ஒப்படைத்து எனக்கு என்ன நேர்ந்தாலும் அது உன் சித்தம் என்று மனமார ஏற்றுக் கொள்வதை குரங்கு சின்னம் குறிக்கிறது.

“கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே” என்று திருநாவுக்கரசர் பெருமான் பாடியதைப் போன்று உயிர் பிரியும் நிலையிலும் இறைவனை சார்ந்தே இருப்பதை உடும்பு சின்னம் குறிக்கிறது.

தன் குட்டியை சுமந்துள்ள தாய் குரங்கு என்ன செய்தாலும், எத்தனை மரத்துக்கு தாவினாலும் குட்டிக் குரங்கு அமைதியாக தைரியமாக இருக்கும். காரணம் குட்டி தாயை பிடிக்கவில்லை, தாய் தான் குட்டியை பிடித்துள்ளது. என் தாய் எந்த சூழ்நிலையிலும் என்னை கைவிட மாட்டாள் என்று நம்பி குட்டி குரங்கு தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைக்கிறது.

தாய் குரங்கை முழுமையாக நம்பி தன்னை ஒப்படைத்த குரங்கின் குட்டியைப் போன்று இறைவன் மீதுள்ள நம்பிக்கையினால் உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக ஒப்படைத்தல் சரணாகதியாகும். எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் இறைவனை விட்டு விலகாமல், இறைவனை மட்டுமே சார்ந்திருப்பதை உடும்பு குறிக்கிறது. 

உறுதிக்கும், பிடிவாதத்திற்கும், உடும்பு பிடி என்று பெயர் பெறும் அளவுக்கு உடும்பின் பிடி உறுதியானது. உடும்பு ஒன்றை பிடித்துக்கொண்டால் எதற்காகவும் விடாது. ஒரு சிறு துன்பமோ கவலையோ சோதனையோ தோன்றியவுடன் கடவுளே உனக்கு கண்ணில்லையா? மூக்கில்லயா? என்று கதறாமல் இறைவன் எனக்கு எதை கொடுத்தாலும் அதன் பின் நிச்சயமாக ஒரு காரணமும் நன்மையும் இருக்கும் என்று முழுமையாக நம்பி வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

ஒரு வெற்றியோ, மகிழ்ச்சியோ உண்டான உடன் இது என் திறமை என் உழைப்பு என்று கர்வம் கொள்ளாமல் இவை அனைத்தும் இறைவன் இட்ட பிச்சை என்று தன்னை தாழ்த்தி கொள்ள வேண்டும். அவநம்பிக்கையோ, கர்வமோ மனதில் குடி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் உடும்பைப் போன்று பக்தியால் இறைவனை பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உடும்பு சின்னமும். குரங்கு குட்டியை போன்ற முழு மனதாக சரணாகதி அடைய வேண்டும் என்பதற்காக குரங்கு சின்னமும் ஆத்மநாதர் திருக்கோயிலின் நுழைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளன.
 

To Top