மூன்று வகையான மனிதர்கள்

 
இந்த உலகில் பலதரப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வகையான குணாதிசயமும் பழக்கவழக்கமும் வாழ்க்கை முறையும் இருக்கும். அவர்களில் மூன்று வகையான மனிதர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

முதல் வகை மனிதர்கள் எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பாக பல முறை தெளிவாக சிந்தித்து திட்டமிட்டு சரியான நேரத்தில் செயல்படுபவர்கள். இவ்வகையை சார்ந்த மனிதர்களே எதிலும் தலைவர்களாகவும் முதலாளிகளாகவும் சாதனையாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் இருக்கிறார்கள். 

இரண்டாவது வகை மனிதர்கள் ஒரு விசயத்தை ஆசைப்பட்டு செய்யத் தொடங்கிய பிறகு அதில் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு, தொடங்கியதை நிறைவு செய்ய முயல்வார்கள். இரண்டாவது வகையை சேர்ந்த மனிதர்கள் முதல் வகை மனிதர்களுக்கு உதவியாளர்களாகவும் பணியாளர்களாகவும் இருக்கிறார்கள். 

மூன்றாவது வகை மனிதர்கள் பெரிதாக செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு திட்டமிடாமல், முயற்சி செய்யாமல், உழைக்காமல் இருப்பார்கள். அவர்கள் முயற்சி செய்தே ஆக வேண்டும், உழைத்தே ஆகவேண்டும் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் வரையில் எதிலும் ஈடுபட மாட்டார்கள். வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியத்துடன் இருப்பார்கள்.

மூன்றாவது வகை மனிதர்கள் தான் குடும்பத்திலும் சமுதாயத்திலும் வெறுக்கப்படும் ஒதுக்கப்படும் மனிதர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் அலட்சிய போக்கு எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் எவ்வளவு முக்கியமான விசயமாக இருந்தாலும் இறுதி நேரம் வரையில் அதை தள்ளிப்போட்டு அலட்சியமாக நடந்து கொள்வார்கள். இந்த அலட்சியப் போக்கே அவர்களுக்கு அனைத்து விசயங்களிலும் பின்னடைவுகளையும் தோல்விகளையும் உருவாக்குகின்றன.

ஒரு மனிதன் உயர்ந்த நிலையோ, தாழ்ந்த நிலையோ, எந்த நிலையில் தற்போது இருந்தாலும் தனது நிலையையும் குணாதிசயங்களையும் புரிந்து கொண்டு சிந்தித்து திட்டமிட்டு செயல்பட்டால், எந்த உயரத்தையும் தொட முடியும். எந்த உயரத்தையும் அடைய முடியும். 

வாழ்க்கை உயர்வதற்கும் மேன்மை அடைவதற்கு முக்கிய தகுதி தான் யார் என்பதையும் தனது குறை நிறைகள் என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். 

மாறுவதற்கு தயாராக இருக்கும் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கு காலம் தயாராக இருக்கிறது. 

To Top