கதை: அம்மா இருந்தால் காட்டு

ஒரு தாயின் கருவறையில் வளர்ந்து வந்த இரண்டு குழந்தைகளுக்குள் ஒரு விவாதம் உருவானது. அம்மா என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா? என்பதுதான் அந்த விவாதம்.

முதல் குழந்தை இரண்டாவது குழந்தையிடம்; கூடிய விரைவில் நாம் பிறந்துவிடுவோம், வெளி உலகுக்கு சென்றுவிடுவோம், அங்கே நமக்கென்று ஒரு வாழ்க்கை காத்திருக்கிறது என்று கூறியது.

அதற்கு இரண்டாவது குழந்தை; என்ன உளறுகிறாய்? இப்போது நாம் வாழும் உலகமும் வாழ்க்கையும் மட்டுமே உண்மையானது, அடுத்த வாழ்க்கை என்று எதுவும் கிடையாது என்று கூறியது.

அதற்கு முதல் குழந்தை; நாம் ஒரு தாயின் கருவறையில் வளர்கிறோம் என்பதை நீ உணரவில்லையா? நமது தாய் உணவளிப்பதை நீ உணரவில்லையா? நமது தாய் நம்முடன் உரையாடுவதை நீ உணர்ந்ததில்லையா? என்று கேட்டது.

அதற்கு இரண்டாவது குழந்தை; என்ன உளறுகிறாய்? தாயா? இந்த கருவறை சுயமாக தோன்றியது, நான் சுயமாக தோன்றினேன், எனக்கான உணவு சுயமாக வருகிறது. நாம் கருவறையில் இல்லை, வளரவுமில்லை, பிறப்பும் இல்லை, அடுத்த வாழ்க்கையும் இல்லை. இந்த கருவறை உலகை தண்டி எதுவுமில்லை. குறிப்பாக அம்மா என்று யாரும் இல்லவே இல்லை என்று கூறியது.

அதற்கு முதல் குழந்தை; அசைவை குறைத்துக்கொள், அமைதியாக இரு, தாய் இருப்பதையும், தாய் வயிற்றில் நீ இருப்பதையும், தாய் உனக்கு உணவளிப்பதையும், நீ வளர்வதையும் உன்னால் உணர முடியும் என்று கூறியது.

இந்த இரண்டாவது குழந்தையை போன்றுதான் பலர் நாத்திகம் பேசுகிறார்கள். ஒரு ஊசி கூட சுயமாக உருவாகாது, அதை உருவாக்க ஒரு படைப்பாளி தேவை என்று அறிந்த மனிதர்கள், இந்த பிரபஞ்சமும், வானமும், பூமியும், அதன் தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் சுயமாக தோன்றின என்று நம்புவார்கள் மற்றவர்களையும் நம்பச் சொல்வார்கள்.

சற்று உலகின் ஓட்டத்திலிருந்து விலகி, அமைதியாக உடலின் இயக்கத்தையும், உலகின் இயக்கத்தையும் கவனித்தால் படைப்பில் மறைந்திருக்கும் இரகசியம் தெரியும் படைப்பாளியும் தெரிவான். 

To Top