தமிழக அரசுக்கு வேண்டுகோள் மற்றும் சில ஆலோசனைகள்

 


பெறுநர்


மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் - தமிழக முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் பார்வைக்கு.


தமிழக மக்கள் கற்பனையிலும் எண்ணிப் பார்க்காத சிறப்பான, மேலும் மக்களுக்கு பயனான பல திட்டங்களை அறிமுகப்படுத்திவரும் மக்களின் முதல்வருக்கும். முதல்வருக்கு தூணாக துணை நிற்கும் அத்தனை அமைச்சர் பெருமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

எனது இந்த கட்டுரையின் / விண்ணப்பத்தின் நோக்கம்: 

மருத்துவ துறையை முறைப்படுத்த வேண்டும், ஒழுங்கு படுத்த வேண்டும். மருத்துவதுறை ஒரு வியாபாரமாக அல்லாமல், மருத்துவம் மீண்டும் ஒரு சேவை என்ற நிலைக்கு திரும்ப வேண்டும்.

தமிழக அரசுக்கு பொது மக்களின் ஒருவனான எனது சில ஆலோசனைகள் மற்றும் வேண்டுகோள். இது ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, உட்பட அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும்.

எனது பணிவான கருத்துக்களை கருத்தில் கொண்டு மேல்மட்ட நிர்வாகிகள், பொது மக்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும், பொருளாதாரத்தையும், மருத்துவத்தின் பெயரால் பொதுமக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இழப்புகளையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் வேண்டுகோள்: அனைத்து மருத்துவ முறைகளையும் இணைந்த குழு:

அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஒரு குழு தொடங்க வேண்டும். அதில் அத்தனை மருத்துவ துறையை சார்ந்தவர்களும், அரசாங்க அதிகாரிகளும், தன்னார்வலர்கள், பொது மக்களும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

அந்த அமைப்பின் விவரங்களையும், அதன் உறுப்பினர்களின் விவரங்களையும், அந்த குழுவின் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக அனைவரும் காணும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

தமிழக அரசாங்கமும் புதிய மருத்துவ அமைப்பும் காலத்துக்கு ஏற்ப தனது சட்ட திட்டங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சட்டங்களை மீறும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், மற்றும் மருந்தகங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மருத்துவமனையின் உரிமையை ரத்து செய்ய வேண்டும், சம்பந்தபட்டவர்களையும் உரிமையாளர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். சட்டம் கடுமையாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு நன்மை நடக்கும். 

இரண்டாவது வேண்டுகோள்: பொது மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும். 

ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தரமான மருத்துவம் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவ துறைக்கு பயனீட்டாளர் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும். 

மருத்துவம் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு தனிநபருக்கும் பயனீட்டாளர் என்ற முறையில் அவரின் உரிமைகள் என்ன? அவர்களுக்கு கிடைக்கும் சட்ட பாதுகாப்புகள் என்ன? மருத்துவமனைகளில் அவர் பெறக்கூடிய உரிமைகள் என்ன? இழப்பீடுகள் என்ன? போன்ற தகவல்களை அரசாங்கம் வெளிப்படையாக நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், மற்றும் இணையதளங்கள், மூலமாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

மூன்றாவது வேண்டுகோள்: மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் 

ஒவ்வொரு மருத்துவமனையின், மருத்துவர் விவரங்களையும், அவர்கள் வழங்கும் சேவைகளும் அவற்றுக்கான கட்டண விவரங்களும் வெளிப்படையாக மருத்துவமனையின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். 

மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரை, கசாயம், மருத்துவ பொருட்கள், மற்றும் மருத்துவ கருவிகளின் விலைகளும், வழங்கப்படும் சேவைகளின் கட்டண விவரங்களும், அறுவை சிகிச்சைக்கான கட்டண விவரங்களும் தெளிவாக மருத்துவமையின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். 

மருத்துவமனையில் பரிந்துரைக்கப்படும் மருந்து, மாத்திரை, டானிக், போன்றவற்றை உட்கொள்ளும் வழிமுறையும், அவற்றினால் உண்டாகக்கூடிய பக்க விளைவுகளையும் அவற்றை பரிந்துரைக்கும் மருத்துவர் நோயாளியிடம் நேரடியாக தெளிவாக விவரிக்க வேண்டும். 

சிகிச்சைக்கு, மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒவ்வொரு மருத்துவரும், என்ன சிகிச்சை வழங்கயிருக்கிறார்? எதற்காக அந்த சிகிச்சையை வழங்கயிருக்கிறார்? அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்னென்ன பக்கவிளைவுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன? என்பனவற்றை விரிவாக நோயாளியிடமும் அவரின் இரத்த உறவுகளிடமும் விளக்க வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் விவரங்களும் அதன் முடிவுகளும் மருத்துவமனையில் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். 

நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகளையும், மரணம் நெருங்கிவிட்ட நோயாளிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. சிகிச்சையின்போது நோயாளி இறந்துவிட்டால் அந்த நோயாளிக்கு வழங்கிய சிகிச்சைக்கு எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும், அங்கு மாண்டவர்களின் விவரங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட சிகிச்சையும், மரணத்துக்கான காரணத்தையும் மருத்துவமையின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். 

நான்காவது வேண்டுகோள்: மருந்தகங்கள் (pharmacy)

மருந்தகத்தில் (pharmacy) விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மருந்து மாத்திரை, டானிக், போன்ற வற்றை உட்கொள்ளும் வழிமுறையும், அவற்றினால் உண்டாகக்கூடிய பக்க விளைவுகளையும் விற்பனையாளர் அவற்றை வாங்குபவரிடம் தெளிவாக விவரிக்க வேண்டும்.

மருந்தகத்தில் சுயமாக எந்த மருந்தையும் பரிந்துரைக்க கூடாது. அரசாங்க அனுமதியில்லாத எந்த மருந்தையும் மருந்தகங்களில் விற்பனை செய்யவோ, பரிந்துரைக்கவோ கூடாது.

ஐந்தாவது வேண்டுகோள்: தடுப்பூசி 

அரசாங்கமும், மருத்துவ அமைப்புகளும், உலக சுகாதார அமைச்சும், பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில், பரிந்துரைக்கும் மற்றும் செலுத்தும் ஒவ்வொரு தடுப்பூசியின் விவரங்களும், அவற்றினால் உண்டாகும் நன்மைகளும், அவற்றினால் உண்டாகும் தீமைகளும் பக்கவிளைவுகளும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.

தடுப்பூசி தனக்கும் தன் குழந்தைக்கும் வேண்டுமா வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கட்டாய தடுப்பூசி கூடாது. 

மாண்புமிகு முதல்வரும் துறை சார்ந்த அதிகாரிகளும், மக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் மனதில் கொண்டு; இந்த பரிந்துரைகளுக்கு தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

அன்புடன் 
ராஜா முகமது காசிம் 


To Top