பழைய மலங்கள் உடலிலிருந்து வெளியேற


வீட்டில் குப்பையை சேர்க்கக்கூடாது என்று தெரிந்த நம்மில் பலருக்கும் உடலில் குப்பையை சேர்க்கக்கூடாது என்பது தெரிவதில்லை. வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யும் பலரும் உடலின் சுத்தத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. உடலின் சுத்தத்தைப் பேணுபவர்களும் பெரும்பாலும் உடலின் வெளி சுத்தத்தை மட்டுமே  சிந்திக்கிறார்கள். 

உடலின் வெளிப்புறத்தில் ஒரு பாதிப்பு உருவானால் அது  உடலின் அழகையும் தோற்றத்தையும் மட்டுமே பாதிக்கக்  கூடும். ஆனால் உடலின் உட்புறத்தில் ஒரு பாதிப்பு உருவானால் அது உறுப்பின்  செயலிழப்பு முதல் மரணம் வரையில் பலவற்றை  உண்டாக்கலாம். இதன் மூலமாக  உடலின் சுத்தம் என்றாலே உடலின் உள்ளே சுத்தமாக வைத்திருப்பது  என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். 

தோல் முதல், வெளி உறுப்புகள், உள் உறுப்புகள், குடல், ரத்தம், நிணநீர், செல்கள்   என உடலில் பல பகுதிகளில் கழிவுகள் தேங்கி இருக்கும். இவ்வாறு தேங்கும் கழிவுகளே உடலில் நோய்களையும் உறுப்பு பாதிப்புகளையும் உருவாக்குகின்றன.  அக்கழிவுகளை தேங்கவிடாமல்  வெளியேற்றுவதே உடலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் வழியாகும்.  

இன்றைய தவறான சமையல் முறைகளினாலும் தவறான வாழ்க்கை முறைகளினாலும் மலச்சிக்கல் என்பது குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரையில் பரவலாக  இருக்கும் தொந்தரவாகும். 

மலம் கழிக்கும் போது சில  வேளைகளில் மலம் கறுப்பாகவும், இறுக்கமாகவும், புழுக்கையாகவும், பலவிசயங்கள் கலந்தது போலவும்  வெளியேறும் இவை உடலில் தேங்கி இருந்த பழைய மலங்கள். 

இவற்றின் மூலமாக இவ்வளவு நாட்களாக அந்த பழைய மலங்கள் உங்களின் குடலுக்குள் தான் இருந்தன என்பதும், அவைப் போன்று இன்னும் பழைய மலங்கள் உங்களின் குடலுக்குள் தேங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதும் புரிய வேண்டும்.

நான் சந்தித்த பெரும்பாலானவர்கள் நான் தினமும் மலம் கழிக்கிறேன்  எனக்கு மலச்சிக்கல் கிடையாது என்பார்கள், அதற்கு காரணம்  மலம் கழிப்பது என்றாலே  உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுவது என்பது புரியாதது தான். காலையில் கழிவறையில் அமர்ந்ததும் ஏதாவது வெளியேறினால் போதும் என்று எண்ணுபவர்கள் தான் பெரும்பான்மை. 

மல கழிவுகள் பல வகையாக உள்ளன, புதிய மலம், இறுகிய மலம், மற்றும்  நாள்பட்ட மலம். மலம் முழுமையாக வெளியேற வேண்டுமென்றால் கழிவறையில்   பொறுமையாக அமர்ந்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது முக்கக்கூடாது. புதிய மலங்கள் விரைவாக வெளியேறிவிடும், அதோடு முடிந்துவிட்டது என்று எண்ணக்கூடாது. 

நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இறுகிய மலங்களை வெளியேற்றிவிட்டால் மற்ற மலங்கள் சுலபமாக வெளியேறும், மலச்சிக்கல் குணமாகும். பழைய மலங்கள் இறுக்கி போய் இருப்பதால் தாமதமாகத்தான் வெளியேறும். அவை வெளியேற 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கூட ஆகலாம்.

நாள்பட்ட மலத்தை வெளியேற்ற வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி, கழிவறையில் அவசரப்படாமல், முக்காமல், அமைதியாக அமர்ந்து மலம் கழிக்க வேண்டும். அரை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை அமைதியாக அமர்ந்திருங்கள். பழைய இறுகிய மலங்கள் வெளியேற தொடங்கிவிடும். பழைய மலங்கள்  இறுக்கமாகவும், கறுப்பாகவும், நாற்றம் மிகுதியாகவும் இருக்கும், அவை வெளியேற தொடங்கிவிட்டால் உடல் சுத்தமாக தொடங்கிவிட்டது என்பது பொருளாகும்.

 
To Top