இறைவன் ஒருவனே என்றால் எதற்காக இத்தனை மதங்கள் இத்தனை தெய்வங்கள்? இத்தனை பிரிவுகள்?

நாகரீகமடைந்த மனித இனங்கள், அதாவது ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்கக்கூடிய மனித இனங்கள் உருவாகி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதர்கள் சிந்திக்க தொடங்கிய காலத்திலேயே தனக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

மனிதர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும், கடுமையாக உழைத்தும் அவர்கள் திட்டமிட்டபடி நடக்காத பொழுதும், அவர்கள் விரும்பியவை கிடைக்காத பொழுதும் ஏதோ ஒரு சக்தி அவற்றை கிடைக்கவிடாமல் தடுக்கிறது என்பதை மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

எந்த கடுமையான முயற்சியும், கடுமையான உழைப்பும் இல்லாமலேயே ஒரு விஷயம் எளிதாக கிடைக்கும் போது, எளிதாக நடக்கும் போது தனக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது, அது தனக்கு உதவுகிறது என்பதையும் மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அவற்றுக்கு தங்களின் புரிதலுக்கும், நம்பிக்கைக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப பெயர்களை சூட்டி, வடிவம் கொடுத்து, வழிபாடுகள் செய்ய தொடங்கினார்கள்.

அன்றைய மனித இனங்கள் இன்று வாழ்வதைப் போன்று பல்வேறு மொழி பேசுபவர்களும் பல்வேறு நம்பிக்கைகளை கொண்டவர்களும் ஒன்றாக இணைந்து வாழவில்லை. இப்போது இருப்பதை போன்று போக்குவரத்து வசதியும் தொலைத்தொடர்பு வசதியும் முந்தைய காலங்களில் இருந்ததில்லை. ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை தொடர்பு கொள்வதற்கு எந்த வசதியும் அன்று கிடையாது.

வாழ்க்கையின் அனுபவங்களினால் உருவான நம்பிக்கைகளும் வழிப்பாடுகளும், கால ஓட்டத்தில் மனிதர்களின் நாகரீக வளர்ச்சியினால், மதங்களாக அதாவது ஒரு ஒழுங்குமுறை படுத்தப்பட்ட வழிபாட்டு முறைகளாக மாறின.

அதனால் தான் இன்று உலகம் முழுவதும் பல்லாயிரம் மதங்களும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. இன்றைய தொலைதொடர்பு வசதிகளினாலும், மனிதர்கள் நெருக்கமாகவும் கூட்டமாகவும் வாழ்வதனாலும் நம்மால் அவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. 

மனிதர்கள் தங்களின் பாதுகாப்புக்காகவும், வருமானத்துக்காகவும், வாழ்க்கை மற்றங்களுக்காகவும், இடம் பெயர தொடங்கியதால் பல்வேறு நம்பிக்கைகளை கொண்ட இனக்குழுக்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளன.

ஒரே சூரியனை ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு வார்த்தையில் அழைப்பதை போன்று, ஒரே காற்றை ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு வார்த்தையில் அழைப்பதை போன்று, ஒரே இறையாற்றலை மனிதர்கள் அவர் அவர் புரிதலுக்கும் மொழிக்கும் ஏற்ப பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.

எத்தனை ஆயிரம் பெயர்களில் அழைத்தாலும் சூரியன் ஒன்றுதான், அதைப்போன்றே எத்தனை ஆயிரம் பெயரில் அழைத்தாலும் இறைவன் ஒருவன் தான்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. - மாணிக்கவாசகர்


 قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا‏
“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக... (அல்குர்ஆன் : 17:110 )


குறிப்பிட்ட ஒற்றை பெயரும் உருவமும் இல்லாத இறைவனை, மனிதர்களின் புரிதல்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். எத்தனை அழகிய நாமங்களை கொண்டு அழைத்தாலும் மனிதர்கள் அழைப்பது ஒரே ஆற்றலை தான்.


To Top