சாதிகள் எதற்காக, எவ்வாறு உருவாகின?

சாதிகள் என்பவை ஊர் மற்றும் தொழிலை குறித்து உருவான குறியீட்டு பெயர்கள். இன்றும் நாம் ஊர் பெயர்கள் சார்ந்த குறியீட்டு பெயர்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். 

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை அவர்களின் நாட்டை குறிக்கும் பெயரில் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என்று அழைக்கிறோம். வெளி ஊர்களிலிருந்து வருபவர்களை மதுரைகாரர், சென்னைக்காரர், திருச்சிக்காரர் என்று, அழைக்கிறோம். சிலரை திசைகளை காட்டக்கூடிய வட நாட்டுக்காரர், தென் நாட்டுக்காரர், மேல் நாட்டுக்காரர் என்றும் அழைக்கிறோம்.

இந்த கேள்வியை கேட்ட நீங்கள் ஒரு மருத்துவர். உங்களை டாக்டரையா என்றே பெரும்பாலும் அழைப்பார்கள். இது உங்களுக்கே தெரியும் ஆனால் இதை ஒரு சாதியாக, இனமாக, மதமாக நீங்கள் எண்ணமாட்டீர்கள். இது ஒரு தொழில் முறை பெயர் என்பது உங்களுக்கு தெரியும். அதே உங்கள் வீட்டில் 3 - 4 மருத்துவர்கள் இருந்தால் உங்கள் வீட்டுக்கே மருத்துவர் வீடு என்று பெயர் வந்துவிடும். உங்கள் தெருவில் 10 மருத்துவ குடும்பங்கள் இருந்தால் அந்த தெருவுக்கே மருத்துவர்கள் தெரு அல்லது காலனி என்று பெயர் உருவாகிவிடும்.

போலீஸ் காலனி, முஸ்லீம் காலனி, ஐயர் காலனி, ஜாதி தெரு, கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு, ஜோசியர்கள் கிராமம், என்று தெருக்களுக்கும் ஊர்களுக்கும் பெயர் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு ஜாதி பெயர் அல்லது இனப்பெயர் என்பது அவர்கள் செய்யும் தொழிலை கொண்டே உருவானது. சாதி என்பது ஏற்ற தாழ்வுகளினால் உருவாவதில்லை. சாதிகளில் ஏற்ற தாழ்வுகள் என்பவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.

இவ்வாறு ஒரு மனிதனின் அல்லது இனக்குழுவின் ஊரையும் தொழிலையும் குறிப்பதற்காகவே குறியீட்டு பெயர்கள் உருவாகின. நாளடைவில் அந்த குறியீடுகளை கொண்டு உயர்வு தாழ்வு என்று பிரிக்க தொடங்கினார்கள்.


உதாரணத்துக்கு:
மருத்துவர்கள் என்று ஒரு இனக்குழு தமிழகத்தில் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மூலிகை மற்றும் கை மருத்துவ முறைகள் அந்த இன மக்களிடம் தான் இருந்தது. அந்த இன மக்கள்தான் பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் உதவுவார்கள், குழந்தை பிரசவமும் பார்ப்பார்கள். குழந்தை பிறந்த பிறகும் அந்த இன பெண்கள் தான் குழந்தை ஈன்ற பெண்களுக்கு அனைத்து உதவிகளும் செய்வார்கள்.

மருத்துவம் என்பது எவ்வளவு முக்கியமான மென்மையான தொழில் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த மென்மையான தொழிலை பரம்பரைத் தொழிலாக கொண்ட ஒரு இனம் எவ்வளவு மதிக்கப்பட்டிருக்கும்? இன்று அந்த இனம் எவ்வளவு மதிக்கப்பட வேண்டும்? ஆனால் சில சதிகளினால் மருத்துவ துறை அந்த இனக் குழுவிடமிருந்து பறிக்கப்பட்டு முழு நேர முடி திருத்தும் தொழிலாளிகளாக அவர்கள் மாற்றப்பட்டார்கள்.

பொருளாதாரம், அதிகாரம், பகைமை, மற்றும் அடக்கு முறைகளினால் தொழில் பெயராகவும், பூர்வீகத்தை காட்டும் பெயராகவும் இருந்தவை ஏற்ற தாழ்வுகளுடைய ஜாதி பெயர்களாக மாற்றப்பட்டன.

To Top