முஸ்லிம்கள் கட்டாயமாக மாட்டிறைச்சியை உட்கொள்ள வேண்டுமா?

 

முஸ்லிம்கள் கட்டாயம் மாட்டிறைச்சியை உட்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிம்கள் என்றால் கட்டாயம் மாட்டிறைச்சியை உட்கொள்வார்கள் என்றும் நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளன. இவையிரண்டும் தவறான நம்பிக்கைகள், இஸ்லாத்திற்கும் மாட்டிறைச்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பழங்கள், காய்கறிகள், மீன்கள், ஆட்டிறைச்சி போன்று மாட்டிறைச்சியும் முஸ்லிம்கள் உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட உணவு பொருட்களில் ஒன்று அவ்வளவுதான். மற்றபடி மாட்டிறைச்சிக்கு என்று இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் கிடையாது.
 
அரபு நாடுகளில் வாழ்பவர்கள் செய்யும் மற்றும் பின்பற்றும் அனைத்துமே இஸ்லாம் என்று பெரும்பாலான மனிதர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். அரபு நாட்டு மோகத்தின் விளைவு தான் அண்மைய காலங்களில் முஸ்லிம்களின் உடைகளிலும், உணவு முறைகளிலும், பழக்க வழக்கங்களிலும் உண்டான மாற்றங்கள். ஹஜ் பெருநாள் காலங்களில் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகத்தை இறக்குமதி செய்ய தொடங்கியது அரேபிய நாட்டு மோகத்தின் உச்சம் என்று நான் கூறுவேன்.
 
அல்குர்ஆனிலே உணவு முறைகளை பற்றி குறிப்பிடும்போது அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
 
يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  ۖ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்... (அல்குர்ஆன் : 2:168 )
 
 وَ مِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا‌ ؕ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள்… (அல்குர்ஆன் : 6:142 )
 
உணவு முறை என்பது மனிதர்களுக்கு எந்த பாதகத்தையும் உண்டாக்காத, நன்மைகளை தரக்கூடிய சுத்தமான பொருளாக இருக்க வேண்டுமே ஒழிய; இவற்றைத்தான் சாப்பிட வேண்டும் அல்லது இவற்றை கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்த கட்டாயமும் கிடையாது. அல்குர்ஆனிலே எங்குமே அவ்வாறு கட்டளை இடப்படவில்லை.
 
முஸ்லிம்கள் மாமிசம் உண்ணவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஒரு முஸ்லிம் சுத்த சைவமாக இருக்கலாம், இஸ்லாத்தில் அதற்கு எந்த தடையும் கிடையாது. அல்குர்ஆனில் தடை செய்ய பட்டவற்றை தவிர்த்து எதை வேண்டுமானாலும் அவர் அவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப உணவாக பயன்படுத்தலாம், அதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் கிடையாது.
 
 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்... (அல்குர்ஆன் : 2:173 )


To Top