முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?

 

ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியில் ரமலான் மாதம் என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாகும். முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் உண்ணா நோன்பு நோற்பார்கள். காலையில் சூரியன் உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரையில் உணவோ தண்ணீரோ உட்கொள்ள மாட்டார்கள். இந்த நோன்பு பூர்த்தியாகும் போது பெருநாளாக கொண்டாடுவார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

ரமலான் மாதத்தின் சிறப்பு என்பது உணவையும் தண்ணீரையும் தவிர்ப்பது அல்ல, அந்த மாதம் முழுமைக்கும் இயன்ற அளவு புண்ணியங்களை சேர்த்துக்கொள்வது. உண்ணா நோன்பு, தொழுகை, திராவியா தொழுகை, திகிர் (ஜபம்), அல்குர்ஆன் வாசித்தல், இறை சிந்தனையில் நிலைத்தல், (ஜகாத்) தான தர்மங்கள் செய்தல், மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தல் என்று பல்வேறு வழிகளில் நன்மைகளை செய்து புண்ணியங்களை சேர்த்துக் கொள்வார்கள்.


நோன்பும் ஆரோக்கியமும்
வருடம் முழுவதும் உட்கொண்ட கழிவுகள் முழுமையாக வெளியேற முடியாமல் அவற்றில் சிறு பகுதி உடலிலும், குடலிலும், இரத்தத்திலும், சேர்ந்திருக்கும். நமது பாரம்பரிய இயற்கை மருத்துவங்கள் கூறுகின்றன மனிதனின் வயிறு காலியாக இருக்கும் போதுதான் அவனது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற தொடங்குகின்றன என்று. வயிற்றில் உணவின்றி காலியாக இருக்கும் போது, செரிமானத்துக்கு செலவாகும் சக்தியை உடலின் சக்தியோடு இணைத்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் மற்றும் உடலின் நோய்களை குணப்படுத்த தொடங்கும்.

வயிறு காலியாக இருக்கும் போது மனிதர்களுக்கு கெட்ட சிந்தனைகள் தோன்றாது. தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. மனதில் ஆசைகள் குறைந்து மனம் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் குறையும். ஒரு மாதத்துக்கு உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி பழகிவிட்டால் வருடம் முழுமைக்கும் உடலையும் மனதையும் கட்டுக்குள் வைத்திருப்பது எளிதாகும்.

சுருக்கமாக சொல்வதானால் ரமலான் மாதத்து நோன்பு என்பது உடலுக்கும் மனதுக்கும் வழங்கப்படும் பயிற்சியாகும். அதன் நோக்கம் உடலையும் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. இதன் பயன் நன்மைகள் செய்வது அதிகரிக்கும் பாவங்கள் செய்வது குறையும்.

முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கு உண்மை காரணம் 
ஒஹ்... மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களால்தான் முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்களா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கு ஒரே ஒரு காரணம் தான், ஈமான் (இறை நம்பிக்கை). அல்குர்ஆனிலே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபிகள் நாயகம் அவர்கள் தனது வாழ்நாளில் அதனை வாழ்ந்து காட்டினார்கள். இந்த இரு விசயங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளினால் தான் முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள்.

அல்லாஹ்வும் ரஸூலும் கூறிய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மட்டுமே முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறார்கள். அல்லாஹ்வும் ரஸூலும் அல்குர்ஆனும் மனிதர்களுக்கு பயனில்லாத விஷயங்களை கூற மாட்டார்கள் அல்லவா? அவர்கள் மனிதர்களுக்கு நோன்பை கடமையாக்கியதற்கு காரணங்களும் அவற்றுக்கான பலன்களும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.

To Top