தரமான மற்றும் சந்தை மதிப்புடைய கிரிப்டோ நாணயங்களை வாங்குவது எப்படி?

கிரிப்டோ கரன்சி வெளியிடும் நிறுவனங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இணையதளங்களில் இருந்து பலர் கிரிப்டோ நாணயங்களை வாங்கி ஏமாந்து இருக்கிறார்கள். அவர்கள் நேரடியாக குறிப்பிட்ட கிரிப்டோ நாணயத்தை வெளியிடும் இணையதளத்தில் இருந்தோ, அதன் இடை தரகர்கள் மூலமாகவோ கிரிப்டோ நாணயங்களை வாங்குகிறார்கள்.

கவர்ச்சியான விளம்பரம், ஆசை வார்த்தைகள், பொய்யான தகவல்கள், பொய்யான வாக்குறுதிகள், பொய்யான எதிர்கால திட்டங்கள், அதிக வட்டி, பரிசுகள், இலவசங்கள், இவைதான் அந்த இணையதளங்களில் முதலீடுகள்.

கிரிப்டோ நாணயங்கள் வெளியிடுவதற்கான சாப்ட்வேர் அல்லது மைனிங் ஸ்கிரிப்ட் கோட்கள் (crypto mining codes) யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய ஓபன் சோர்ஸ் (open source) முறையில் எழுதப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருக்கின்றன. பிட்கோயினை வெளியிட்ட Satoshi Nakamoto? கூட தனது Bitcoin கோட்டை open source முறையில் பொதுமக்களுக்கு வெளியிட்டார். அவற்றை கொண்டு தான் இன்றும் புதிய Bitcoins வெளியிடப்படுகின்றன.

இலவசமாக ஓபன் சோர்ஸ் முறையில் கிடைப்பதனால், சாப்ட்வேர் எழுத தெரிந்த யார் வேண்டுமானாலும், புதிய கிரிப்டோ கோயின்களை வெளியிடலாம் என்ற நிலை உருவானது. ஆனால் அந்த கிரிப்டோ கரன்சிக்கு வாங்கும் விற்கும் பலமோ, சந்தையில் பயன்படுத்தும் தகுதியோ, பொருட்கள் வாங்க விற்க மற்றும் பரிமாற்றம் செய்துகொள்ளும் தரமோ இருக்காது.

உதாரணத்துக்கு சொல்வதானால் நாளை நான் கூட ஒரு கிரிப்டோ கரன்சியை வெளியிடலாம், விளம்பரங்களின் மூலமாகவும், ஆசை வார்த்தைகளின் மூலமாகவும் அவற்றை மற்றவர்களிடம் விற்றுவிடலாம். விற்பனை செய்த எனக்கு உண்மையான பணம் அதாவது அரசாங்கங்கள் உத்தரவு அளித்து வெளியிட்ட பணம் கிடைத்துவிடும், அதற்கு மாற்றாக இந்த கோயின்களை வாங்கியவர்களுக்கு மின்னியல் கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் சில வடிவமைக்கப்பட்ட எண்கள் மட்டுமே கிடைக்கும். அவற்றை அவர்கள் விற்கவோ, உண்மையான பணமாக மாற்றவோ முடியாது. அவற்றை கொண்டு பொருட்கள் வாங்கவோ, சேவை கட்டணங்கள் செலுத்தவோ முடியாது.

மேலே குறிப்பிட்ட கிரிப்டோ கரன்சிகளின் தன்மைகளை கொண்ட பல நூறு கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன, பொதுமக்கள் ஒன்றுக்கு நூறு முறை சிந்தித்து சரியான சந்தை மதிப்புடைய நாணயங்களை வாங்க வேண்டும்.

சரியான நிலையான சந்தை மதிப்புடைய நாணயங்கள் 50 இருக்கலாம். Bitcoin, Ethereum, Binance coin, Polkadot, Tether, XRP, Cardano, Litecoin, Chainlink, Stellar, Dogecoin, EOS, Terra, Holo என்ற வரிசையில் முதல் ஐம்பது நாணயங்களை சுலபமாக வாங்கவோ விற்கவோ, மற்ற நாணயங்களாக மாற்றிக்கொள்ளவோ, பணமாக மாற்றிக்கொள்ளவோ முடியும்.

அதன் வரிசையில் அடுத்த நூறு கோயின்களை தரமான கோயின்களாக மாற்றி பயன்படுத்தலாம் அல்லது stable coins என்று அழைக்கப்படும் அமெரிக்கா டாலர் மதிப்புடைய கோயின்களாக மாற்றிக் கொள்ளலாம். பின்பு அவற்றை விற்று பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

சரியான நிர்வாகம் செய்யப்படும் முறையான கிரிப்டோ கரன்சிகள் பெரிய (Cryptocurrency exchanges) எக்ஸ்சேஞ்ச் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சிகளை பரிமாற்றம் செய்யக்கூடிய இணையதளங்களில் வாங்கலாம். Binance, Coinbase, Luno (Malaysia), Wazirx (India), Kraken, Crypto-com, Kucoin, Bittrex போன்றவை அவற்றில் சில.

இவைப் போன்ற முதல் 100 கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் வாங்கவோ விற்கவோ முடியாது என்றால் அந்த கிரிப்டோ கோயினுக்கு சந்தை மதிப்பு கிடையாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.To Top