மாடு திங்காதவன் எல்லாம் ஒரு முஸ்லிமா?

 


“மாடு திங்காதவன் எல்லாம் ஒரு முஸ்லிமா? முஸ்லிம் என்றால் கட்டாயமாக மாட்டிறைச்சியை சாப்பிட வேண்டும்” என்று ஒருவர் என்னிடம் வாதிட்டார். அவர் மட்டுமல்ல வேறு சில முஸ்லிம்களும் என்னிடம் இதே கருத்தை தெரிவித்தார்கள் வாதிட்டார்கள்.
 
அவர்களிடம் நான் சில கேள்விகளை கேட்டேன்; முஸ்லிம் என்றால் கட்டாயமாக மாட்டிறைச்சியை உட்கொள்ள வேண்டும் என்று எங்கு குறிப்பிடபட்டுள்ளது? அல்குர்ஆனில் உள்ளதா? ஹதீஸ்களில் உள்ளதா? இஸ்லாமிய மார்க்கத்தின் அடித்தளமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாட்டிறைச்சியை உட்கொண்டதாக வரலாற்று சான்றுகள் உள்ளனவா?
 
அவர்கள் அத்தனை நபர்களும் கூறிய ஒரே வகையான பதில்கள், அல்குரான் மற்றும் ஹதீஸ்களில் உள்ளன, நபிகள் நாயகம் மாட்டிறைச்சியை உட்கொண்டுள்ளார்கள் ஆனால் எங்களுக்கு குறிப்பு காட்ட தெரியவில்லை.
 
நான் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவன் ஆனால் எனக்கும் என் குடும்பத்தில் பெரும்பாலானோருக்கும் மாட்டிறைச்சியை உட்கொள்ளும் பழக்கமில்லை. நாங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சியை உட்கொள்வதில்லை.
 
தமிழகத்தில் முஸ்லிம்கள் மாட்டிறைச்சியை உட்கொள்ளாமல் இருப்பதற்கு எந்த சிறப்பு காரணங்களும் கிடையாது. தமிழகத்து முஸ்லிம்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தவர்கள் அல்லது கிராமத்தில் விவசாயிகளுடன் வாழ்ந்தவர்கள், விவசாயம் பார்த்தவர்கள்.
 
விவசாயம் செய்யும் போது காளைகள் விவசாயிகளுடன் வயலில் உழுவதற்கு உதவுகின்றன, பசு மாட்டின் பாலை குழந்தைகள் முதல் அனைவரும் அருந்துகிறார்கள். நமது சோற்றுக்காக நம்முடன் சேர்ந்து வயலில் உழைத்த காளையையும், குடும்பத்தில் அனைவருக்கும் பால் தரும் பசுவையும் கொன்று தின்பதற்கு மனம் ஒப்புமா?
 
இதனால்தான் தமிழக முஸ்லிம்கள் பெரும்பாலானோர் மாட்டிறைச்சியை உண்பதில்லை. மற்ற மதத்தினர் மாட்டிறைச்சியை உண்ணாமல் இருப்பதற்கும் இவைதான் காரணங்கள். விவசாயம் செய்யாதவர்களே பெரும்பாலும் மாட்டிறைச்சியை உட்கொள்வார்கள்.
 
 اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَ ‌ۚۙ‏
“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.  (அல்குர்ஆன் : 26:133 )
 
இன்று நாகரீகம் என்ற பெயரில் விவசாயம் குறைந்ததும், வேலைக்காக வெளி நாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு மாட்டிறைச்சி உட்கொள்ள பழகி கொண்டதும், இன்று முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் மாட்டிறைச்சியை உட்கொள்ள காரணமாகின. மற்றபடி மாட்டிறைச்சிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாட்டிறைச்சி முஸ்லிம்கள் உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட உணவுகளில் ஒன்று அவ்வளவுதான்.
 
 وَ مِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا‌ ؕ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள்… (அல்குர்ஆன் : 6:142 )


To Top