கிரிப்டோ கரன்சிகளை வாங்காதீர்கள்

 

சில நாடுகளின் நாணயங்களை வேறு சில நாடுகளில் மாற்ற முடியாது. சில நாணயம் மாற்றும் இடங்களில் சில நாடுகளின் நாணயங்கள் வாங்க மறுக்கிறார்கள் அல்லது சந்தை விலையை விடவும் குறைவாக வாங்குகிறார்கள். இந்த நிலைக்கு காரணம் சில நாடுகளின் நாணயங்களுக்கு நிலையான சந்தை மதிப்பு கிடையாது மேலும் அவற்றின் விலை எந்த நேரத்திலும் வழக்கத்துக்கு மாறாக குறைந்துவிடலாம்.

சட்ட பூர்வமான ஒரு நாட்டின் அரசாங்கம் வெளியிடும் நாணயங்களுக்கே மதிப்பில்லாமல் போகும் போது தனியார் நிறுவனங்கள் வெளியிடும் கிரிப்டோ கரன்சிகளின் நிலையென்ன? சிந்தித்து செயல்படுங்கள்.

முதலீடு, பரிமாற்றம், பொருட்களுக்கும் சேவைகளுக்கும் கட்டணம் செலுத்த என்று சரியான காரணமும் தேவையும் இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளை வாங்காதீர்கள். குறிப்பாக கிரிப்டோ கரன்சிகள் எவ்வாறு பரிவர்த்தனை ஆகின்றன? அவை எவ்வாறு புழக்கத்தில் இருக்கின்றன? எவ்வாறு அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தப்படுகின்ற என்ற விவரங்கள் புரியாமல் அவற்றை வாங்காதீர்கள்.

ஒரு நகைச்சுவை காட்சியில் நடிகர் வடிவேலு குறளி வித்தை காட்டுபவரை பார்த்து கேட்பார் “நாங்க ஏன்டா நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போக போறோம் என்று”

பிட்கோயினின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது அதனால் அனைவரும் கிரிப்டோ கரன்சிகளை வாங்குங்கள் என்று கூறுபவர்களை பார்க்கும் போது அந்த நகைச்சுவை காட்சிதான் என் நினைவுக்கு வருகிறது. பிட்கோயினின் விலை அதிகரித்தால் என்ன குறைந்தால் என்ன? தேவை இல்லாதவர்கள் மற்றும் அதன் பயன்பாடு இல்லாதவர்கள் அதை வாங்குவது ஆபத்து.

நான் இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில், பிட்கோயின் ஒரு ஆண்டு இடைவெளியில் அதிகபட்சமாக $64,582.86 ஐ தொட்டுள்ளது. சராசரியாக $10,000த்தில் இருந்தது. $15,000 வரையில் குறைந்துள்ளது. ஒரு பிட்கோயினின் இன்றைய மதிப்பு $62,146.93.

அதன் மதிப்பு $65,000த்தை தாண்டியும் அதிகரிக்கலாம். $40,000த்தை நோக்கியும் பயணிக்கலாம். இதுதான் கிரிப்டோ கரன்சிகளின் உண்மை நிலை. நாளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகள் பிட்கோயினை தடை செய்தால் அதன் விலை $1,000மாகவும் மாறலாம். உங்களுக்கு அச்சமூட்ட இதை நான் கூறவில்லை. கிரிப்டோ நாணயங்களின் இன்னொரு பக்கத்தை விவரிக்கிறேன் அவ்வளவுதான். 

அதனால் கிரிப்டோ சந்தையில் பரிச்சயம் இல்லாதவர்கள், சிறிய தொகையை அதாவது எவ்வளவு தொகையை இழந்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் உண்டாகாதோ அந்த அளவு மட்டும் முதலீடு செய்து பழகி கொள்ளுங்கள். கிரிப்டோ சந்தை உங்களுக்கு பரிச்சயம் ஆன பிறகு தேவைப்பட்டால், கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்

உங்களின் குடும்ப தேவைக்கும், அவசர தேவைக்கும், எதிர்கால தேவைக்கும் போக மீதம் இருக்கும் பணத்தை மட்டுமே கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டும். சுருக்கமாக சொன்னால் நீங்கள் இழக்க கூடிய பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

மற்றவர்களின் ஆசை வார்த்தைகளிலும் விளம்பரங்களிலும் ஏமாந்துவிடாதீர்கள். எந்த சூழ்நிலையிலும், அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்தையும், குடும்ப தேவைக்குரிய பணத்தையும், மொத்த சேமிப்பையும் கிரிப்டோவில் முதலீடு செய்யாதீர்கள். எந்த சூழ்நிலையிலும் கடன் வாங்கி, அல்லது நகைகளை அடமானம் வைத்தும் கிரிப்டோவில் முதலீடு செய்யாதீர்கள்.


 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.To Top