தங்கம் ஒரு நிலையான மூலதனம்
மனிதர்களின் நாகரீகம் தொடங்கிய காலம் முதலாக, மனிதர்கள் தங்களை அலங்காரம் செய்துக்கொள்ள வேண்டும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்கிய காலம் முதலாக; தங்கம் மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்க தொடங்கிவிட்டது.
தங்கம் அலங்கார பொருளாக மட்டும் இல்லாமல் வியாபாரத்தில் பரிவர்த்தனை பொருளாகவும் பயன்படுத்தபட்டது. பொருளுக்கு பொருள் என்ற பண்டமாற்று முறை மறைந்து தங்கத்தை கொண்டும், வெள்ளியை கொண்டும் பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்க தொடங்கினார்கள்.
அன்றைய காலத்தில் தங்கத்தின் மதிப்பை கொண்டு, தங்க நாணயத்தின் மதிப்பைக் கொண்டும் பொருட்களின் விலையும் மதிப்பும் நிர்ணயிக்கப் பட்டன. இன்றைய காலத்தில் பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்க பணம் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்த பணத்தின் மதிப்பை நிர்ணயிக்க தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
மேலே உள்ள தகவல்களை கொண்டு தங்கம் எவ்வளவு மதிப்புடைய பொருள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். மனித நாகரீகம் தொடங்கிய காலம் முதலாக தங்கம் மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக திகழ்கிறது. எந்த காலத்திலும் தங்கத்தின் மதிப்பு மட்டும் மாறியதில்லை.
உலகம் இருக்கும் காலம் வரையில் தங்கம் பண்டமாற்று பொருளாகவும், பரிவர்த்தனை பொருளாகவும் நிலைத்திருக்கும். இன்று நாம் பயன்படுத்தும் காகித பணம் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக பல வகையான பண வகைகள் பயன்பாட்டில் இருந்தன பின் மறைந்துவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போன்று; பல நாடுகளில் பல காலகட்டங்களில் அவற்றின் அரசாங்கங்கள் அன்று பயன்பாட்டில் இருந்த பணமும் காசும் செல்லாது என்று அறிவித்துள்ளன. அதனால் பலர் செல்வங்களை இழந்துள்ளனர்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருநூறு ரூபாய்கள் கொடுத்து வாங்க வேண்டும், அதே பொருளை இன்று வாங்க ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படும். ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையாக தெரிந்தாலும், அறுபது ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு இருபதில் ஒன்றாக குறைந்துவிட்டது.
பணம் என்பது நிலையான மதிப்பில்லாத, எந்த நேரத்திலும் மதிப்பு குறையக் கூடிய ஒரு பொருள். இந்த உலகில் எங்கு சென்றாலும், எல்லா சூழ்நிலையிலும் மதிப்பு மாறாமல் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருள் தங்கம், அதற்கு அடுத்தது வெள்ளி.
தங்கத்தின் மதிப்பு தொடரும்…