மனிதனும் உறக்கமும்

நீங்கள் வேண்டாம் என்றாலும் உடலுக்குத் தேவை உருவானால் உடல் சுயமாக உறங்கத் தொடங்கும். நீங்கள் வாசித்துக் கொண்டிருந்தாலும், வேலை செய்துகொண்டிருந்தாலும், சமைத்துக் கொண்டிருந்தாலும், வாகனம் ஒட்டிக் கொண்டிருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலையை நீங்கள் செய்துகொண்டிருந்தாலும் உடலுக்குத் தேவை உருவாகும் போது உடல் அப்போதே உறங்கச் சொல்லும்.

உடலின் கட்டளையை மீறி நீங்கள் தொடர்ந்து வேளைகளில் ஈடுபட்டால், நீங்கள் அறியாமலேயே உடல் உறங்கிவிடும். உடலை மீறி நீங்கள் உறக்கத்தைத் தவிர்க்க முயற்சி செய்தால், போதையில் தள்ளாடும் போதை பித்தர்களைப் போன்ற நிலையில் தான் உடல் செயல்படும். உடலின் இந்த செயலிலிருந்தே உறக்கம் எவ்வளவு அவசியமானது என்பது உங்களுக்குப் புரிய வேண்டும். 

உணவையும் நீரையும் போல உறக்கமும் உடலில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் உணவையும் நீரையும் விடவும் உறக்கம் அவசியமானது.

பசியில்லாமல் உணவை உட்கொண்டால் உடலில் உபாதைகள் உண்டாகும். தாகமில்லாமல் தண்ணீர் அதிகமாக அருந்தினால் சில தொந்தரவுகள் உண்டாகும். ஆனால் உறக்கம் மட்டும் உடல் கேட்கிறதோ இல்லையோ, உடலில் அசதி உண்டாகிறதோ இல்லையோ அவசியமாக இரவில் 10 மணிக்கு முன்பாக உறங்கிவிட வேண்டும்.

உடலுக்கு எவ்வளவு நேரம் உறக்கம் தேவை என்பது ஒவ்வொரு உடலுக்கும் மாறுபடும். ஒரு மனிதரின் வயது, உடலமைப்பு, செய்யும் தொழில், தினசரி அலுவல்கள், உடல் உழைப்பு, மனநிலை போன்றவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மனிதனுக்குத் தேவைப்படும் உறக்கத்தில் அளவும் மாறுபடலாம்.

எவ்வளவு நேரம் உறங்குகிறோம் என்பதை விடவும், அந்த உறக்கம் எந்த தன்மையில் (quality) இருக்கிறது என்பது முக்கியம். ஆழ்ந்த உறக்கமும் திருப்தியான உறக்கமும் மனிதர்களுக்கு மிகவும் அவசியம். அரைகுறையாக திருப்தியில்லாத பத்து மணிநேர உறக்கத்தை விடவும், திருப்தியான ஆழமான நான்கு மணிநேர உறக்கம் உடலுக்கு போதுமானது.

தொடரும்...


To Top