போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

மருந்து என்பது என்ன? ஒரு மனிதனுக்கு நோய்களிலிருந்து விடுதலையைத் தந்து மன நிம்மதியையும், மன அமைதியையும் தருவது மருந்து. பொன் செய்யும் மருந்து என்பது, ஒரு மனிதனுக்கு அவனிடம் இருக்கும் செல்வத்தைக் கொண்டு, மனதில் திருப்தியையும் மனதில் அமைதியையும் உண்டாக்குவது.

ஒரு மனிதன் எப்போது போதும் என்று மனத் திருப்தி அடைகிறான்? காசு, பணம், பொன், பொருள், செல்வம், சொத்து, இன்பம், என்று எதில் திருப்தி அடைகிறான்? ஒரு மனிதன் வேண்டும் பணத்தையோ, செல்வத்தையோ, வசதிகளையோ, இன்பங்களையோ, பூர்த்தி செய்து வைத்தால் திருப்தியடைவானா? அவன் வேண்டுவதை விடவும் அதிகமாகக் கொடுத்தால் திருப்தியடைவானா?

இல்லை... மனிதர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியடைவதில்லை. இந்த உலகில் எதைக்கொண்டும் மனம் சாத்தியடைவதில்லை.

உணவை மட்டுமே மனிதன் போதும் என்று சொல்கிறான். என்னதான் விருப்பமிருந்தாலும் யாருமே 50 இட்டிலிகளை உண்பதில்லை, 4 தட்டை பிரியாணியை உண்பதில்லை. வயிறு நிறைந்ததும் போதும் என்று ஒதுக்குகிறான். 

அவனது மனதுக்குள் இன்னும் கொஞ்சம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும், ஆனாலும் உடல் ஒத்துழைக்காது. வயிறு நிறைந்தும் உடல் உணவு உண்பதை நிறுத்தச்சொல்லிப் போராடும்.

வயிறு போதும் என்று சொன்னதுடன் உணவை நிறுத்துபவன் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்கிறான். தனது வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் கிடைத்ததும் போதும் என்று திருப்தியடைபவன் நிம்மதியாக வாழ்கிறான். 

எதைக்கொண்டும் திருப்தியடையாமல் எதையோ உலகியலில் தேடி ஓடும் மனம் தன்னிடம் என்னென்ன இருக்கின்றன என்று கவனிக்கத் தொடங்கும் போதும். தனது தேவைகளையும் ஆசைகளையும் என்றுமே திருப்தி செய்ய முடியாது என்பது சுயமாக உணரும்போதும், தேடலைக் குறைத்துக் கொள்கிறது.

எவ்வளவு இருந்தும் திருப்தி அடையாத மனம், தன்னிடம் இருப்பவை போதும் என்று உணரும்போது, தன்னிடம் தனக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன என்ற திருப்தியை அடைகின்றது. ஒன்றுமில்லை என்ற பிச்சைக்காரன் மனநிலையிலிருந்து எனக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன என்ற ஒரு அரசனின் மனநிலைக்கு மாறுகிறது.

போதும் என்ற மனநிலை மட்டுமே நம்மை ஒரு அரசனைப் போன்று, அரசியைப் போன்று தலை நிமிர்ந்து வாழவைக்கும்.


To Top