அட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்

மனிதனின் மனம் தான் அவனின் பாத்திரத்தை அதாவது இயல்பை முடிவு செய்கிறது. அந்த மனமானது இரண்டு பெரும் இயல்புகளுடன் இயங்குகின்றது. ஒரு சிலரின் மனம் அட்சய பாத்திரத்தைப் போன்றும், ஒரு சிலரின் மனமானது பிட்சைப் பாத்திரத்தைப் போன்றும் இயங்குகின்றது.

தன்னிடம் இருக்கும் அத்தனை பொருளையும் பன்மடங்காக பல்கிப் பெறுக செய்து பிறருக்கும் வழங்குவது அட்சய பாத்திரம். தன்னிடம் என்னதான் இருந்தாலும் ஒன்றுமே இல்லை என்று புலம்புவது பிட்சைப் பாத்திரம். இன்றைய காலத்தில் பெரும்பான்மையான மக்கள் பிட்சைப் பாத்திரத்துடன் அலைவதை, அவர்களுடன் பழகிப் பார்த்தால் நமக்குப் புரியவரும்.

மனிதனுக்கு நண்பனாக, சக தோழனாக இருந்து மனிதனின் வாழ்வுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய மனம், தன்னுள்ளே பதிவாகும் தவறான பதிவுகளால் கவரப்பட்டு தன்னிலை மறந்து செயல்படத் தொடங்கும்போது தேவையற்ற ஆசைகள் மனதினுள் உருவாகத் தொடங்குகின்றன.

அந்த ஆசைகளினால், மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி மனம் சுயமாக இயங்க தொடங்குகிறது. மனமானது தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள மனிதனைப் பயன்படுத்திக் கொள்கிறது. அதனால் மனிதனின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் மாற்றமடையத் தொடங்குகின்றன.

வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் தன்னிடம் இருந்தாலும், எவ்வளவுதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் சிலருக்கு இருந்துகொண்டே இருக்கும்.

பிற மனிதர்களிடம் இருப்பனவற்றைப் பார்த்து அதைப் போல் எனக்கும் வேண்டும் என்று மனம் நித்தம் ஏங்கிக்கொண்டே இருக்கும். ஆசைப்படுபவை கிடைத்துவிட்டால் மனம் திருப்தியடைந்துவிடுமா? என்றால் கண்டிப்பாக இல்லை. அடுத்ததாக தன்னிடம் என்ன இல்லை என்று ஆராய்ந்து ஆசையை அதன் பின் செலுத்தும்.

தன்னுள்ளே பதிவாகி இருப்பவை தான் உலகம், அவைதான் வாழ்க்கை என்று நம்பி, தனது நம்பிக்கைக்கு ஏற்ப மனிதனின் சிந்தனையையும் உணர்வுகளையும் மாற்றத் தொடங்கும். மனிதர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி மாறுவதற்கு இதுதான் காரணம்.

மனிதனுக்கு உதவியாக மனம் என்ற நிலை மாறி மனதின் ஆசைகளை நிறைவேற்றத் தான் மனிதன், மனித உடல் அல்லது மனதின் இச்சைகளை தீர்த்துக்கொள்ளத்தான் மனித பிறப்பு என்ற நிலை உருவாகிறது.

தவறு என்று தெரிந்தும், எனக்கு இது தேவையில்லை என்று உணர்ந்தும், இதை செய்யக்கூடாது என்ற உள்ளுணர்வு தோன்றியும் தவறுகளையும் தப்புகளையும் மனிதர்கள் செய்கிறார்கள். மனிதர்கள் செய்யும் தப்பு தவறுகளுக்குக் காரணம் மனதிலிருந்து உண்டாகும் தூண்டுதல்களும் வலியுறுத்தல்களும். மனம் தவறான விசயங்களை செய்யத் தூண்டுவதற்குக் காரணம் மனதினுள் பதிவாகி இருக்கும் தவறான பதிவுகள்.

கெட்டப் பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆசையிருந்தும் பெரும்பாலும் கெட்டப்பழக்கங்களையும் தவறான செயல்களையும் விடமுடியாமல் பலர் துன்பப்படுவதற்குக் காரணம் மனதின் பதிவுகள். அந்த தவறான பதிவுகளை மாற்றும் வரையில் இந்த இன்னல்கள் தொடரும்.

மனதின் பதிவுகளை மாற்றும் வழி
ஒரு வாளியில் சாக்கடை நீர் நிறைத்திருந்தாலும், நல்ல சுத்தமான நீரை அந்த வாளியினுள் ஊற்றும் போது, நிறைந்திருக்கும் சாக்கடை நீர் படிப்படியாக அந்த வாளியிலிருந்து வெளியேறத் தொடங்கும். சிறிது காலத்துக்குப் பிறகு அந்த வாளி முழுவதும் நல்ல சுத்தமான நீரால் நிறைந்திருக்கும்.

இந்த உவமையைப் போன்றே, மனதினுள் எவ்வளவுதான் தேவையற்ற தவறான பதிவுகள் இருந்தாலும், நல்ல பயனாக விஷயங்களைப் பார்க்கும் போது, கேட்கும் போது, சிந்திக்கும் போது, அனுபவம் செய்யும் போது, நல்ல மனிதர்களுடன் பழகும் போது, மனதினுள் இருக்கும் கேட்ட விஷயங்கள் வெளியேறி, மனம் முழுவதும் நல்ல பயனுள்ள பதிவுகள் நிறைந்திருக்கும். 

வாழ்க்கை மாறும், மேன்மையடையும்.
மன பதிவுகளின் வெளிப்பாடே வாழ்க்கை.To Top