வாழ்கையை வாழ்கிறீர்களா?

அதிகாலை நேரம் 
விடிந்தும் விடியாத பொழுதில் 
விழித்துக் கொண்டால்
பக்கத்தில் படுத்திருக்கும்
மனைவியையோ கணவனையோ
அனைத்துக் கொண்டு
கோழித்தூக்கம் போடுகிறீர்களா?

காலைப் பொழுது
புத்துணர்ச்சியுடனும்
மலச்சிக்கல் இல்லாமலும்
விடிகிறதா?

இயல்பான சுவாசம்
சாப்பிட்டதும் சக்தி
கணம் இல்லாத உடல்
படுத்ததும் உறக்கம் 
உங்களால் முடிகிறதா?

அலுவல்கள் அனைத்தையும்
அடுத்தவரை எதிர்பார்க்காமல்
சுயமாக செய்து கொள்கிறீர்களா?

உப்பில்லா உணவு
சுவையில்லா தேநீர்
கருகிய தோசை
புது மனைவியின் சமையல்
ருசித்து சாப்பிட முடிகிறதா?

புத்தம் புதிய
உணவு வகைகளை
தேடிப்போய் ருசிபார்க்கும் 
பழக்கம் உள்ளதா?

வாகனத்தில் பயணித்தாலும் 
எதிரில் தென்படும்
செடி, மரம், மாடு, மனிதன் - என
அனைத்தையும் ரசிக்கிறீர்களா?

நடந்து செல்கையில்
புல்லின் மென்மையை
மண்ணின் தன்மையை
உணர்கிறீர்களா?

சுடும் சூரியன்
தேயும் நிலவு
மின்னாத நட்சத்திரம்
கருமேகம், வெறும் வெளி
மழையின் தூறல்
மங்கலான வானவில்
ரசிக்க முடிகிறதா?

பூக்காத பூச்செடி
காய்க்காத பழமரம்
வறண்ட நிலம்
வற்றிய ஆறு, குளம்
ரசிக்க முடிகிறதா?

புத்தகங்களைச் சேமிக்கும்
பழக்கம் உள்ளதா?
கவிதை, கதை, கட்டுரை, நாவல்
வாசிக்கும் பழக்கம் உள்ளதா?

கழிவறை வாசகம்
ஆண்மை வீரியம் விளம்பரம் - என
சுவரின் கிறுக்கல்களை
வாசிக்கும் பழக்கம் உள்ளதா?

தூரத்தில் கேட்கும் 
பாடல் வரிகள், குழந்தையின் அழுகை
வாகனத்தின் இரைச்சல், குரைக்கும் நாய்
கவனித்துப் பழகியதுண்டா?

வானொலியில்
பாடல் ஒலிக்கும் போது
உடன் சேர்ந்து பாடுவீர்களா?
தனிமையில் பாடல்களை
முணுமுணுக்கும் பழக்கம் உள்ளதா?

நகைச்சுவை காட்சிகளை
பார்க்கும் போது
கைதட்டி வாய்விட்டு
சிரிப்பதுண்டா?

காதல் காட்சிகள் பார்க்கும் போது
நினைவில் நீந்திடும்
காதலன், காதலி, கணவன், மனைவி
உங்களுக்கு உண்டா?

எங்கோ இறந்த
மனிதனுக்காக - நீங்கள்
கண்ணீர் சிந்தியதுண்டா?

கவலையில் கஷ்டத்தில் - இருக்கும்
உறவுக்கு நட்புக்கு
தோழ்மீது கை போட்டு
தட்டிக்கொடுக்கும்
பழக்கம் உண்டா?

அடுத்தவர்
வெற்றியை வளர்ச்சியை
பாராட்டும் பழக்கம் உண்டா?

குழந்தையின் சிரிப்பை
மழலையின் அறிவை
சிறுவர்கள் குறும்பை
இளைஞனின் குசும்பை
குமரியின் அழகை
ஆண்மையின் வனப்பை
முதுமையின் தெளிவை
ரசித்ததுண்டா?

இந்த வாழ்க்கையை தந்த
கடவுளுக்கு நன்றி கூறி
தியானத்தில் காலையை
தொடங்குகிறீர்களா?

இறைவா இந்த உலகில்
அனைவரும் நன்றாக 
வாழ வேண்டும்
என எனக்கும் சேர்த்து
பிரார்த்திக்கும் பழக்கம் உண்டா?

இந்த வாழ்க்கை
மிக அழகானது
என்ற எண்ணம்
தோன்றியதுண்டா?

இயற்கையின் அழகை
இயற்கையின் படைப்பை
ரசிப்பதுண்டா?

சூரிய உதயம் – அஸ்தமனம் பார்த்ததுண்டா?
இரவில் நட்சத்திரம் எண்ணியதுண்டா?
நிலவைக் காணாமல் தேடியதுண்டா?
வானவில் வர்ணங்கள் எண்ணியதுண்டா?
மழையில் நினைந்ததுண்டா?
வெயிலில் காய்ந்ததுண்டா?

புல் வெளியில்
செருப்பில்லாமல் நடந்ததுண்டா?
படுத்துப் புரண்டதுண்டா?
குளத்தில் - நீர்வீழ்ச்சியில் குளித்ததுண்டா?
மூச்சடக்கி விளையாடியதுண்டா?
நீச்சல் போட்டி நடத்தியதுண்டா?

கடல் மணலில்
செருப்பில்லாமல் நடந்ததுண்டா?
படுத்துப் புரண்டதுண்டா?
வீடு கட்டியதுண்டா?

மலையில் ஏறியதுண்டா?
காடுகளில் நடந்ததுண்டா?
மரத்தில் தாவியதுண்டா?

யார்? ஏன்? எப்படி? என
இந்த வாழ்க்கை - இந்த உலகத்தைப்பற்றி
சிந்தித்தீர்களா?

இந்த வாழ்க்கை
அருமையான ஆசிரியன்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிகழ்வும்
ஒரு உன்னத பாடம் சொல்லும்
புரிந்து கொண்டீர்களா?

மரணம் கூட
உயிரைத் துரப்பது எவ்வாறு 
என்று கற்றுத்தரும்
தெரிந்துக் கொண்டீர்களா?

கூட்டத்தில் தனிமையாகவும்
தனிமையில் கூட்டமாகவும் - இருக்க
உங்களால் முடிகிறதா?

தனிமையில் நினைத்து
ரசிக்க, சிரிக்க
அழகிய நினைவுகள்
சேர்த்து வைத்திருக்கிறீர்களா?

இவற்றில் பாதி இருந்தாலும்
ஒரு அழகிய வாழ்க்கையை
நீங்கள் வாழ்கிறீர்கள்
என்று பொருளாகும்.To Top