வெளிநாட்டு வாழ்க்கை

நாலுகாசு சேர்த்துவைக்க
நாலுகடல் தாண்டிவந்தேன்
கஷ்டங்களுடன்
நினைவுகளைக் கலந்து
நாட்களை நகர்த்திவந்தேன்

நாளைக்குத் தேவைப்படும்
என்ற மயக்கத்திலே
இன்றைய வாழ்க்கையை
அடகு வைத்தேன்

உன் முகம்கூட முழுமையாக
என்மனதில் பதியும் முன்னே
பணத்துக்காக அயல்நாட்டில்
இடதுக்கால் பதித்தேன்

நமக்காக நாம் வாழ
பெறும் செல்வம் தேவையில்லை
அடுத்தவனிடம் பேர் வாங்க
வாழ்க்கையையே விற்றுவிட்டேன்

ஊருக்காக ஒரு வாழ்க்கை
உறவுக்காக ஒரு வாழ்க்கை
நமக்காக ஒரு வாழ்க்கை
கனவினிலே ஒரு வாழ்க்கை

என்னங்கடா இந்த வாழ்க்கை
அடுத்தவன் திருப்திக்குத்தான்
நான் வாழ வேண்டுமென்றால்
தேவையாடா இந்த வாழ்க்கை?


To Top