புத்த மதத்தின் நம்பிக்கையின்படி, மனிதர்களின் பிறப்பும், இறப்பும், மறுபிறப்பும்


மரணத்துக்குப் பிறகு சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, இயற்கையோடு இணைதல் என்று பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன; இருந்தும் மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது? என்பதுதான் பெரும்பாலான மனிதர்களின் கவலையாக இருக்கிறது. குறிப்பாக முதியவர்களுக்கு. மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? என்பன போன்ற விசயங்கள் புரியாததால், பலருக்கு மரணம் என்றாலே உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட்டுவிடுகிறது. மரணம் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க பலர் துணிவதில்லை.

பிறப்பு 
புத்த மதத்தின் கோட்பாடுகளின்படி, பிறப்பு, இறப்பு என்பது கர்ம கணக்கை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன என்றும்; ஒவ்வொரு பிறப்பும் அந்த ஆன்மாவின் கர்ம கணக்குகளைச் சரி செய்யவும், செய்த பாவ புண்ணியங்களுக்கு அனுபவம் செய்யவுமே வழங்கப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது.

மரணம் 
ஒரு மனித உடல்  சீர்கெட்டுப் போனாலோ, விபத்தால் சிதைந்துப் போனாலோ, நோய்வாய்ப்பட்டு கெட்டுப் போனாலோ, முதுமையினால் சிதைந்தாலோ, அல்லது  உயிர் இனி இந்த உடலில் வாழ வழியில்லாமல் போகும்போது; உயிர் அந்த உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறது.

உடலைத் துறந்த உயிர் ஆன்ம லோகத்துக்குச் செல்லும். அங்கு அந்த ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, அந்த ஆன்மா இந்த பூமியில் செய்த செயல்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி கொடுக்கப்படும். அடுத்த பிறப்புக்கான சூழ்நிலை அமையும் வரையில் அந்த ஆன்மாவானது ஆன்ம லோகத்திலேயே தங்கியிருக்கும். ஒரு ஆன்மா இந்த பூமியில் செய்த செயல்களுக்கு ஏற்ப சொர்கத்திலோ, நரகத்திலோ, ஆன்ம லோகத்திலோ, மற்ற கிரகங்களிலோ அல்லது மீண்டும் இந்த பூமியிலேயோ பிறக்க நேரிடும்.

மறுபிறப்பு
இந்த பூமியில் மறுபிறப்பு எடுக்கும் உயிர்கள் மீண்டும் மனித பிறப்புதான் எடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. அந்த ஆன்மாவின் பக்குவம் மற்றும் செயல்களுக்கு ஏற்ப மனிதப் பிறவி அமையலாம். அல்லது மீன்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பிறவிகளும் அமையலாம், அந்த ஆன்மாவின் பக்குவத்தைப் பொறுத்து அடுத்த பிறவிகள் அமையும். விலங்குகளாக பிறவி எடுத்த மனித ஆன்மாக்கள் அடுத்த பிறவியில் மீண்டும் மனிதப் பிறவி எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

மனித பிறப்பெடுத்துவிட்ட ஆன்மாக்கள் மீண்டும் கீழ் பிறப்பு எடுக்க மாட்டார்கள் என்ற கோட்பாட்டை புத்தர் ஒப்புக்கொள்ளவில்லை. பிறப்பும் வாழ்க்கையும் ஆன்மாக்களுக்கு பயிற்சியாக இருப்பதால் அந்த ஆன்மாவானது பக்குவமடையும் வரையில் மீண்டும் மீண்டும் எந்த உயிரினமாக வேண்டுமானாலும்  பிறப்பெடுக்கும் என்கிறார்.

விலங்குகளில் இயல்புக்கு மீறிய அறிவும், ஆற்றலும் உடைய விலங்குகளைப் பற்றியும், மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளைப் பற்றியும், நாம் படித்திருப்போம் அல்லது கேள்விப் பட்டிருப்போம். இதற்குக் காரணம் அந்த விலங்குகள் முந்தைய பிறவிகளில் மனிதனாகப் பிறந்து இப்போது விலங்காக பிறவி எடுத்ததாகக் கூட இருக்கலாம்.

இப்போது தீய செயல்களைச் செய்யும் மனிதர்களும், மற்ற மனிதர்களைக் கெடுத்து, ஏமாற்றி வாழும் மனிதர்களும், அடுத்த மனிதர்களுக்கு துரோகம், வஞ்சகம் செய்பவர்களும் அடுத்த பிறவியில் விலங்குகளாக, அதுவும் அழுக்கில் வாழக்கூடிய பெருச்சாளி, பன்றி, தெரு நாய், கறுப்பான் பூச்சி, போன்ற விலங்குகளாக பிறக்கக் கூடும் என்று புத்த மதம் கூறுகிறது.

கௌதம புத்தர் 600,000 ஆண்டுகளாக பல்வேறு பிறவிகளை எடுத்து  இந்த பூமியில் வாழ்ந்ததாகவும், நிர்வாணா என்ற முக்தி நிலையை  அடைந்து பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டதாகவும் கூறுகிறார்.

மறுபிறவி என்று ஒன்று இருந்தால் அதிலிருந்து விடுபடும் வழிமுறை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?. பிறவி சுழற்சியிலிருந்து விடுபடும் ஒரே வழி, பற்றில்லாமல் வாழ்வது மட்டுமே. இந்த வாழ்கையில் எந்த பற்றுதலும் இல்லாமல் வாழ்பவர்களுக்கு அடுத்த பிறவி அமைவதில்லை.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.