பாவம் மனிதர்கள், அறிவுகள் ஆறாம்

உயர்ந்த மலைத்தொடர்
அடிவாரத்தில் அடர்ந்த வனம்
வளைந்து நெளியும் நதிகள்
பச்சைப் புல்வெளி
நடுவில் ஒரு குளம்

வெயிலில் குளுமையும்
பனிக் காலத்தில் உஷ்ணமும்
வழங்கும் அழகிய குடிசை

பசிக்கு கனி, காய், காய்கறி
தாகத்துக்கு சுத்தமான ஆற்று நீர்
படுத்துப் புரள புல்வெளி
ஓடி விளையாட மர நிழல்

பசு, காளை, ஆடு, கோழி
மான், மயில், பறவைகள்
நாய், பூனை
புடைசூழ

கூப்பிடும் தூரத்தில்
உற்றார், உறவுகள்
சுற்றத்தார், நண்பர்கள்
கூப்பிடத் தேவையில்லாத
பாதுகாப்பான வாழ்க்கை

அன்பும் காதலும்
பொங்கி வழியும் இந்த
அழகிய வாழ்க்கையை
தொலைத்துவிட்டு

ஆணவமும், அதிகாரமும்
கலந்து கட்டிய
சிமெண்ட் கல்லறையில்
வாழ்கிறார்கள்

பாவம் மனிதர்கள்
அறிவுகள் ஆறாம் - இன்னும்
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

To Top