உணவின் மூலமாக உடலின் பஞ்சபூத சக்திகளை எவ்வாறு சமப்படுத்துவது?

உடலின் பஞ்சபூத சக்திகளும், உணவின் சுவைகளும்
மனிதனின் உடலானது பஞ்சபூத சக்திகளின் கலவையினால் உருவானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். பஞ்சபூத சக்திகளால் உருவான இந்த உடல், தினமும் செயல்படுவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், நீண்ட நாட்கள் வாழ்வதற்கும் பஞ்சபூத சக்திகள் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.

பஞ்சபூத சக்திகளை நம் உடலானது வெளியிலிருந்து சிறிதளவு பெற்றுக் கொண்டாலும், பெரும்பான்மையான சக்திகளை உடல் சுயமாகவே உற்பத்தி செய்துகொள்கிறது. நம் உடலின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு பஞ்சபூத சக்தியை உருவாக்கும் தன்மையுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறது.

இருதயம் நெருப்பு சக்தியையும், மண்ணீரல் நிலம் சக்தியையும், நுரையீரல் காற்று சக்தியையும், சிறுநீரகம் நீர் சக்தியையும், கல்லீரல் ஆகாய (மரம்) சக்தியையும் உற்பத்தி செய்கின்றது.


நாம் உண்ணும் உணவும், உணவின் சுவைகளும் உடலின் உள்ளுறுப்புகளுக்கு சக்தியளிக்கவும், பஞ்சபூத சக்திகளை உற்பத்தி செய்யவும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் உணவில் உள்ள சுவைகளே பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் உணவை உட்கொள்வதற்கு முன்பாக இனிப்பு சுவையுள்ள பழங்களை உட்கொள்வது ஒரு வழக்கமாக நம் கலாச்சாரத்தில் இருக்கிறது. உணவு வேலைகளுக்கு முன்பாக இனிப்பான பழங்களை உட்கொண்டால் நமது மண்ணீரலும் வயிறும் உணவுகளை ஜீரணிக்கத் தயாராகும்; அதற்குப் பிறகு உட்கொள்ளும் உணவுகள் எளிதாக ஜீரணமாகும்.

இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு மற்றும் காரம் என ஆறு சுவைகளும் உடலுக்கு மிகவும் அவசியமானவை. உடலில் பஞ்சபூத சக்திகள் சமநிலையில் இருக்க வேண்டும் என்றால் எந்த சுவையையும் ஒதுக்கக்கூடாது. எல்லாச் சுவையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நம் உடல் சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும் பஞ்சபூத சக்திகளின் அளவு குறையும் போது, அந்த சுவை தொடர்புடைய உறுப்புகளில் கழிவு தேக்கங்களும், பலகீனங்களும், பாதிப்புகளும், குறைபாடுகளும், நோய்களும், உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நம் உண்ணும் உணவுகளில் உள்ள சுவைகள், இயற்கையான சுவைகளாக இருக்க வேண்டும். செயற்கையான சுவைகளை உட்கொள்ளும் போது, அந்த சுவைகள் தொடர்புடைய உறுப்புகள் பாதிப்படையத்தொடங்கும்.

இயற்கையிலேயே உருவாகக் கூடிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், தாவரங்கள், கிழங்கு வகைகள், போன்றவை ஆறு சுவைகளும், அதாவது ஐந்து பஞ்சபூத சக்திகளையும் முழுமையாக பெற்றதாக இருக்கின்றன.


உதாரணத்திற்கு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வோம். வாழைப்பழத்தில் இனிப்பு சுவை பெருமளவு இருப்பதால் வாழைப்பழம் இனிப்பாக இருக்கிறது. ஆனாலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு மற்றும் காரம் என ஆறு சுவைகளும் வாழைப்பழத்தில் மறைவாக இருக்கும். மற்ற சுவைகள் சிறிய அளவில் இருப்பதால் நம் நாக்கினால் அவற்றை எளிதில் உணர முடிவதில்லை.

அதைப்போல் பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், அரிசி, கோதுமை, பருப்புகள், தேன், போன்றவற்றிலும் ஆறு சுவைகளும் இருக்கும். உணவுகளில் என்ன சுவை பெருமளவு இருக்கிறதோ அந்த சுவையை மட்டுமே நம் நாவால் உணர முடிகிறது. உணவுகள் சுத்திகரிக்கப் படும்போதும், பதப்படுத்தப்படும் போதும், இரசாயனங்கள் கலக்கப்படும் போதும் ஓரிரு சுவைகளை இழந்துவிடுகின்றன.

நம் பாரம்பரிய உணவு முறை
நம் முன்னோர்கள் அன்றாட உணவுகளில் ஆறு சுவைகளும் இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார்கள். முன்பெல்லாம் நாம் தினசரி உண்ணும் உணவுகளில் ஆறு சுவைகளும் உடலுக்குக் கிடைத்துவிடும். இன்று நவீன விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில், நம் முன்னோர்களின் அறிவியல் அறிவை கோட்டை விட்டு விட்டோம்.

மன இச்சைகளுக்கு கட்டுப்பட்டு, உணவை உட்கொள்ளத் தொடங்கிய பிறகு. நம் உடலுக்குத் தேவையான சத்துகளும், சுவைகளும் முழுமையாகக் கிடைக்காமல் போயின. உடலில் உள்ளுறுப்புக்கள் பலகீனம் அடைந்து, பல பாதிப்புகளும், பலகீனங்களும், நோய்களும் உருவாகத் தொடங்கின.

உடல் நலத்தைப் பாதுகாக்க
நம் உடல் இறுதி வரையில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், தெம்பாகவும், பலமாகவும், இருக்க வேண்டுமென்றால்; நம் உணவில் அன்றாடம் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு மற்றும் காரம், என ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து இயற்கை உணவுகளிலும் ஆறு சுவைகளும் கிடைக்கும், அவற்றை முறையாகவும், சிறிய நெருப்பிலும், பதமாகவும் சமைத்தால், அந்த சுவைகளும் பாதிப்படையாமல் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும்.

இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவுகளில், உவர்ப்பு சுவை கிடைப்பதில்லை, என்பதனால்தான், வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை, நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். நம் அன்றாடம் உண்ணும் உணவில் ஐந்து சுவைகளும், உணவுக்குப் பின் மேலும் வெற்றிலை பாக்கில் ஒரு சுவையும் சேரும்போது ஆறு சுவைகளும் ஒரு முழுமை பெறுகின்றன.

செயற்கை உணவுகளையும், பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள். சமையலில் செயற்கை சுவைகளையும், செயற்கைப் பொருட்களை தவிர்த்துவிடுங்கள். பழங்களில் மட்டுமே ஆறு சுவைகளும் எந்த சிதைவும் அடையாமல் முழுமையாகக் கிடைக்கும். அதனால் பழங்களை அதிகமாக உண்ணுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பழக்கப் படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

To Top