திருக்குறள் விளக்கம் - குறள் 2

அதிகாரங்கள்: கடவுள் வாழ்த்து

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் விளக்கம்:
(கற்றதனால் ஆய பயனென்கொல்)
எவ்வளவு நாட்கள் வாழப் போகிறோம்? என்று உயிர் பிரியும்? என்று தெரியாத அழியக்கூடிய உலக வாழ்க்கைக்கு மட்டுமே உதவக்கூடிய கல்வியை மட்டும் கற்று என்ன பயனென்று சொல்?

(வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்) மெய்யறிவை தன்வசம் வைத்திருக்கும் உண்மை இறைவனின் புனிதப் பாதங்களில் பணியமாட்டார் என்றால்.

முதல் குறளில் உண்மைக் கடவுளை கூறிய திருவள்ளுவர், இரண்டாம் குறளில் அவனை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறார். கல்வியின் மூலமும், தேடி கற்றுக் கொள்வதின் மூலமும் மட்டுமே இறைவனை அறிந்து கொள்ள முடியும் என்பதனால் இரண்டாம் குறளில் இறைவனை கல்வியுடன் இணைத்துக் கூறுகிறார்.

மனிதனின் ஐம்பொறிகளைக் கொண்டு அவன் கற்றுக் கொள்ளும் விஷயங்களும், பாட சாலைகளில் அவன் கற்றுக் கொள்ளும் விசயங்களும், அவனுக்கு இறைவனை காட்ட வேண்டும். எந்த ஒரு கலையில் முழுமை பெற்றாலும், எந்த ஒரு கல்வியில் முழுமை பெற்றாலும், கற்றுக் கொள்ள இதற்கு மேல் ஒன்றும் இல்லையா? அல்லது இதற்கு மேல் என்ன இருக்கிறது? என்ற சிந்தனையும், தேடுதலும் அவனுக்கு இறைவனின் சொரூபத்தைக் காட்டும்.

எந்த கல்வியைக் கற்றாலும் அதன் முழுமை நிலை என்பது இறைவனை உணர்தல் என்பதை இந்த குறளின் மூலம் புரிய வைக்கிறார்.


To Top