திருக்குறள் விளக்கம் - குறள் 10

அதிகாரங்கள்: கடவுள் வாழ்த்து

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

குறள் விளக்கம்:
(பிறவிப் பெருங்கடல்) பிறவி என்பது பெரிய கடலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். பிறவி என்று பொதுவாக சொன்னதனால் அந்த சொல் ஒரு அறிவு உயிரினமான தாவரம் முதல் ஆறறிவு உயிரினமான மனிதன் வரையில் அனைவரையும் சேர்த்தே சொல்கிறார்.

கடல் எவ்வளவு ஆழம், நீளம், அகலம் என்பது யாருக்காவது தெரியுமா? கடலில் எத்தனை உயிரினங்கள் இருக்கின்றன என்பது யாருக்காவது தெரியுமா? யாராவது உயிரினங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்லிவிட முடியுமா? யாராலும் முடியாது அல்லவா? அதைப் போன்றே, எத்தனை பிறவிகள் எடுத்தீர்கள், எடுப்பீர்கள், அது எவ்வளவு நீளம், அகலம், ஆழம் கொண்டது என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறார்.

அடுத்த நிமிடம் கடலில் என்ன நடக்கும்? அதில் என்னென்ன ஆபத்துகள் உள்ளன? யாராலும் சொல்ல முடியாது. வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான். இவற்றைப் புரியவைக்கவே, பிறவியை பெருங்கடல் என்கிறார்.

(நீந்தார் இறைவன் அடிசேரா தார்) என்பது இறைவன் எனும் பேராற்றலை உணர்ந்து, அவனிடம் முழுமையாக சரணடையாதவர்கள் இந்தப் பிறவி எனும் பெருங்கடலை நீந்த முடியாமல்,  கடலில் (பிறவிகளில்) சிக்கி எந்நேரமும் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை குறிக்கிறது. இந்த உலகில் யாராவது கடலை நீந்தி கடந்துவிட முடியுமா? முடியவே முடியாது என்பது புலனாகிறது.

(பிறவிப் பெருங்கடல் நீந்துவர்) இறைவனைச் சேராதவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க மாட்டார்கள் என்று கூறுவதன் மூலமாக, இறைவன் எனும் பேராற்றலை உணர்ந்து அவனிடம் முழுமையாக சரணடைபவர்கள் மட்டுமே பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க முடியும் என்பது விளக்கப்படுகிறது.

(இறைவன் அடி) அவர்கள் இறைவனின் பாதத்தைப் பற்றிக் கொள்வதனால்,  கடலைக் (வாழ்க்கையைக்) கண்டு பயமோ, மூழ்கி விடுவோமோ என்ற அச்சமோ அவர்களுக்கு இருக்காது என்பது புலனாகிறது.

இறைவன் என்ற சொல், ஆதி முதல் இறைவனை (ஆதிபகவனை) குறிக்கிறது.To Top