திருக்குறள் விளக்கம் - குறள் 1


அதிகாரங்கள்: கடவுள் வாழ்த்து

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

குறள் விளக்கம்:
(எழுத்தெல்லாம்) எழுத்தெல்லாம் என்று பொதுவாகவும் மொத்தமாகவும் கூறுவதால் இந்த சொல் உலகில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துக்களையும் குறிக்கிறது.

மொழிகள் என்பவை மனிதர்களின் சிந்தனையில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்தும் ஓசையாகும். மனிதர்கள் எழுப்பும் ஓசைகளை வகுத்து, இந்த ஓசைக்கு இந்த அர்த்தம் என்று மொழிகளின் சொற்களை வகுத்தார்கள். ஓசையாக இருந்த வார்த்தைகளை பதிவு செய்வதற்காக, எழுத்து வடிவங்களை உருவாக்கினார்கள். அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். எழுத்து வடிவமாக இருக்கின்ற வார்த்தைகள் அனைத்தும் ஓசை வடிவத்தில்தான் முதலில் தோன்றின.

(அகர முதல எழுத்தெல்லாம்)
இந்த உலகில் எந்த நாட்டில், எந்த இனத்தில் பிறந்தாலும், எந்த மொழி பேசும் மனிதனாக இருந்தாலும், அவன் பேச தொடங்கும் போது அவன் வாயிலிருந்து முதன் முதலாக தோன்றி வெளிவரும் வார்த்தை "அ".

அகர முதல மொழியெல்லாம் என்று கூறியிருக்கலாமே, ஏன் எழுத்தெல்லாம் என்று கூறுகிறார் என்று சிலருக்கு தோன்றலாம். விலங்குகளும் பேசுகின்றன அவற்றுக்கும் மொழியுண்டு, ஆனால் அவை "அ" என்று முதலில் உச்சரிப்பதில்லை. மொழியும் எழுத்தும் உள்ள உயிரினமான மனிதர்கள் மட்டுமே முதலில் "அ" என்று உச்சரிப்பதால் எழுத்தெல்லாம் என்று கூறினார்.

(ஆதி பகவன்) ஆதி என்ற சொல் முதல் அல்லது தொடக்கத்தைக் குறிக்கிறது. பகவன் என்பது கடவுளைக் குறிக்கும் வடமொழிச் சொல். புழக்கத்தில் உள்ள கடவுளைக் குறிக்கக் கூடிய அத்தனை சொற்களும் யாராவது ஒரு தெய்வத்தைக் குறிக்கும் அல்லது ஏதாவது மத இனக் குழுக்களுடன் தொடர்பு இருக்கும் என்பதனால் "ஆதி பகவன்" என்ற புதிய சொல்லை அவரே உருவாக்குகிறார். அச்சொல் உருவம், அருவம், மற்றும் அருவுருவம் என மூன்று நிலைகளையும் கடந்த மனித அறிவுகளால் அளக்கவோ மற்றும் கற்பனையோ செய்ய முடியாத முழு முதல் இறைவனைக் குறிக்கின்ற சொல். ஆதி முதல் இறைவன் இனம் மொழிகளைக் கடந்தவன் என்பதை உணர்த்த ஆதி என்ற தமிழ்ச் சொல்லோடு பகவன் என்ற வடமொழிச் சொல்லைக் கலந்து பயன்படுத்துகிறார்.

(அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு)
அத்தனை மொழிகளும் “அ” என்ற வார்த்தையில் தொடங்குவதைப் போன்று, இந்த உலகமும் அதன் படைப்புகளும் ஆதி முதல் இறைவனிடம் இருந்தே தொடங்குகின்றன.

இந்த பிரபஞ்சம் ஓசையில் இருந்து அல்லது சப்தத்தில் இருந்து தோன்றியது என்பது அனைத்து மதங்களும் ஒத்துக் கொண்ட கருத்தாகும். இந்த முதல் குறளில், அதாவது திருக்குறளின் தொடக்கத்தில், ஓசையிலிருந்து உருவாகும் எழுத்தை உவமையாக கூறி. பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் மறைமுகமாக உணர்த்துகிறார் திருவள்ளுவர்.


To Top