எண்ணம் போல் வாழ்க்கை, முதலில் எண்ணத்தை மாற்றுவோம்.

எண்ணம் போல் வாழ்க்கை என்பது சான்றோர் வாக்கு. நமது மனதில் உண்டாகும் எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதை நம் முன்னோர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திச்  சென்றனர். நல்ல எண்ணங்கள் என்று கூறும்போது பெரும்பாலும் செயற்கையாக, நல்ல விஷயங்களை நினைத்துப் பார்க்கச் சொல்வார்கள். ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எண்ணம் வேறு, சிந்தனை வேறு.

நாமாக ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பது சிந்தனையே ஒழிய, எண்ணம் அல்ல. எண்ணங்கள் என்பவை நம் மனதில் ஏற்கனவே பதிந்திருக்கும் பதிவுகளினால் சுயமாக உருவாகுபவை. எண்ணங்களை யாராலும் உருவாக்க முடியாது. நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டுமென்றால் மனதினில் நல்ல பதிவுகளைப் பதிய வேண்டும்.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் நமது ஐம்பொறிகளான பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, மற்றும் உணர்வின், மூலமாக நமது மனப் பதிவுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நல்ல விஷயங்களை விட, தீய விஷயங்களே அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான, கெட்ட விசயங்களும், நம் வாழ்க்கைக்கு  எந்தப் பயனும் தராத தீய விசயங்களும் நம் மனதுக்குள் பதியப்படுகின்றன.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; 
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே;
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; 
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
ஒளவையார், மூதுரை

நல்ல மனிதர்களுடனான தொடர்பு மிகவும் பயனானது என்பதை இந்தப் பாடலின் மூலமாக ஒளவையார் உணர்த்துகிறார். அவர் பாடிய இந்தப் பாடலை எதிர்ப்பதமாக எடுத்துக்கொண்டால் தீய மனிதர்களுடன் எந்த வகையான தொடர்பு வைத்திருந்தாலும் அது நமக்குக் கெடுதலையே செய்யும் என்பது புரியும்.

முடியாது, நடக்காது, கிடைக்காது, போன்றவற்றை எதிர்மறை வார்த்தைகள் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நமது மனநிலையை மாற்றக்கூடிய அனைத்துமே எதிர்மறை வார்த்தைகள்தான். நமது மனதின் பதிவுகளைப் பாதிக்கக்கூடிய அல்லது தவறான பதிவுகளை உண்டாக்கக்கூடிய அனைத்துமே தீய விஷயங்கள் தான். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான, கெட்ட விஷயங்கள் நம்மை வந்தடைகின்றன.

நமது மனப் பதிவுகளை மாற்ற வேண்டுமானால், முதலில் நல்ல பதிவுகளை உருவாக்க வேண்டும். பழைய பதிவுகளை அழிப்பது கடினம். ஆனால் புதிய பதிவுகளை நல்லவையாக ஆக்கிக் கொண்டால் பழைய பதிவுகள் செயலிழந்துவிடும்.

ஒரு பதிவை வாசித்து, பின்பு அது நன்மையானதா? தீமையானதா? அது நமக்கு எந்த வகையிலாவது நன்மையானதாக   இருக்குமா? என்பதை ஆராய்வதை விடவும், அவற்றை வாசிக்காமல் விடுவதே சிறந்ததாகும். தவறான பதிவுகளைப் பகிரும் நண்பர்களின் உறவை முதலில் தவிர்த்துக் கொள்ளுங்கள். தவறான விசயங்களை பதியும், பரப்பும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்களில் இருந்து வெளியேறி விடுங்கள். நீங்கள் எந்தத் தவறான மற்றும் எதிர்மறை விஷயங்களையும் பகிராதீர்கள். எதிர்மறை விசயங்களைக் காட்டும் மற்றும் பரப்பும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, நாளிதழ், இணையப்பக்கம் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எவையெல்லாம் தவறான விஷயம் அல்லது எதிர்மறையான செய்திகள் மற்றும் விஷயங்கள் என்றால், எவையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புவீர்களோ அவையெல்லாம் தீய விஷயங்கள். அவற்றைப் பரப்பும் மற்றும் நினைவுபடுத்தும் அத்தனை விஷயங்களையும் விட்டு விலகியிருங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.


To Top