யின் யாங்

ஒரு வட்டம், அதில் இரு பிரிவுகள். ஒரு பகுதி கருப்பு, ஒரு பகுதி வெள்ளை. கருப்பு பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளி. வெள்ளை பகுதியில் ஒரு கருப்புப் புள்ளி. வெள்ளையும் கருப்பும் சுழல்வதைப் போன்ற ஒரு உருவ அமைப்பு. அதுதான் யின் யாங் சின்னம்.


(யின் யாங் சின்னம்)

முழுமைதான் யின் யாங் சின்னத்தின் தத்துவம். இந்த உலகில் இரு வெவ்வேறு தன்மைகள் சேரும் போது ஒரு முழுமை உருவாகிறது. உதாரணத்திற்கு இரவும் பகலும் சேரும்போது ஒரு முழுமையான நாள் உருவாகிறது. வெளிச்சமான பகலின் பகுதியும் இருளான இரவின் பகுதியும் சேருவதுதான் முழுமையாக ஒரு நாள் உருவாக காரணமாக அமைகிறது. பகலிலும் சில இடங்கள் இருட்டாகவே இருக்கும் அல்லவா? அதனால் வெள்ளையான பகுதியில் ஒரு கருப்பு புள்ளி. இரவிலும் சில இடங்கள் வெளிச்சமாகவே இருக்கும் அல்லவா? அதனால் கருப்பான பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளியை குறியீடாக காட்டுகிறார்கள்.

யின் யாங் தத்துவம் (philosophy) 
சீனாவின் தாவோயிசத்தின் தத்துவமான யின் யாங் இந்த உலகில் எதுவுமே தனியாக இல்லை என்ற தத்துவத்தையும். இரண்டு எதிர்மறையான விசயங்கள் ஒன்று சேருவதுதான் முழுமை என்ற தத்துவத்தையும் குறிக்கிறது. தாவோயிசம் அனைத்து விடயங்களிலும் முழுமை பெருவதையே முன்னிறுத்துகிறது. யின் மற்றும் யாங் இணைவதே முழுமை என்றும் ஜோடியாக இணைவதே முழுமை என்றும் குறிப்பிடுகிறது.

ஒரு ஆணோ பெண்ணோ தனியாக வாழ்வது முழுமையான வாழ்க்கையாகாது. அந்த ஆணோ பெண்ணோ ஒரு எதிர் பாலினத்தை சார்ந்த ஜோடியுடன் திருமணத்தின் மூலமாக இணைவதே முழுமையான வாழ்க்கையாகிறது. ஒரு நாள் முழுவதும் பகலாக அல்லது வெளிச்சமாக இருந்தால் அந்த நாள் முழுமைப் பெறாது. அல்லது முழு நாளும் இரவாக இருட்டாக இருந்தாலும் அந்த நாள் முழுமை பெறாது. பாதி பகலும் பாதி இரவும் ஒன்றாக இணையும் போதுதான் ஒரு நாள் முழுமை பெறுகிறது. சூரியன் மட்டுமே நாள் முழுவதும் இருந்தால் அது முழுமையாகாது. சூரியனும் சந்திரனும் பாதி அளவு நாளை பிரித்துக் கொள்வதே முழுமையான சுழற்சியாகிறது.

ஒரு பூ மலர்ந்திருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அது முழுமையான மலராகாது. அந்த பூவுடன் வாசனையும் சேரும்போது தான் அது ஒரு முழுமை பெற்ற மலராக இருக்கும். மனித உடலில் கை, கால், தலை, மற்றும் உடலின் மற்ற உள்ளுறுப்புகள் அனைத்தும் இருந்தாலும், உயிர் இல்லாவிட்டால் அது முழுமையான மனிதனாக இருக்காது. அந்த உடலில் உயிர் இருந்தால் மட்டுமே அவனை மனிதன் என்று இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. அதைப்போல் உயிர் மட்டும் இருந்து உடல் இல்லாவிட்டாலும் அது மனிதன் ஆகாது.

இந்த உலகில் எதுவுமே தனியாக இருக்காது. தனியாக இருக்கும் எதுவுமே முழுமையாகாது. இரு வெவ்வேறான விசயங்கள், வெவ்வேறு தன்மைகள் ஒன்று சேர்வதே இந்த உலகில் முழுமையாகும்.

யின் யாங் உதாரணங்கள் 
யின் - யாங்
இரவு - பகல்
நிலவு - சூரியன்
பெண் - ஆண்
நோய் - ஆரோக்கியம்
மனம் - உருவம்
நல்லது - கேட்டது
மகிழ்ச்சி - துக்கம்
உயிர் - உடல்
குளுமை - உஷ்ணம்
மென்மை - கடினம்
கருப்பு - வெள்ளை

யின் யாங் தத்துவத்தை நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம். மனிதன் என்றால் ஆரோக்கியமாக இருப்பதும், நோய்கள் உண்டாவதும் சாதாரணமாக நடக்கும் ஒரு விசயம் தான். ஆரோக்கியமாக இருப்பவர்கள் நோய்வாய்ப் படுவதும். நோய்வாய்ப் பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவதும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்தான். ஆரோக்கியத்தையும் ஆரோக்கியமின்மையையும் சமபடுத்தி வாழ்வதே சிறப்பான வாழ்க்கையாகும்.

நல்ல ஆற்றல்கள் எங்கும் நிறைந்திருப்பதைப் போன்றே தீய ஆற்றல்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டையும் புரிந்துக் கொண்டு சமபடுத்தி வாழ்வதே சிறப்பான வாழ்க்கையாகும். மனித வாழ்க்கையில் யின்னும் யாங்கும் அல்லது நல்லதும் கெட்டதும் மாறி மாறி வருவதுதான் இயல்பு. எந்த ஒரு அனுபவத்திலும் நல்ல விசயமும் தீய விசயமும் இணைந்து இருப்பதுதான் இயல்பு. 

இதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள். குறிப்பாக வாழ்க்கையையும் வாழ்க்கையில் நடப்பனவற்றையும் புரிந்துக் கொண்டு வாழுங்கள்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.