ரெய்கி என்பது என்ன?


ரெய்கி என்ற சொல்லின் பொருள் 
ரெய்கி என்ற ஜப்பானிய சொல் “ரெய்” மற்றும் “கி” என்ற இரு சொற்களின் கலவையாகும். “ரெய்” என்றால் பிரபஞ்சம் அல்லது புனிதம் என்று பொருளாகும். “கி” என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருளாகும். ரெய்கி என்றால் பிரபஞ்ச ஆற்றல், பிரபஞ்ச சக்தி, அல்லது புனிதமான ஆற்றல் என்று பொருள் கொள்ளலாம்.

ரெய்கி என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றலாகும். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த உலகில் நமக்கு தேவையான அனைத்தையும் அடைய முடியும்.

ரெய்கி ஆற்றலை புரிந்துகொள்ள மின்சாரத்தை எடுத்துக்காட்டாக பயன்படுத்தலாம். மின்சாரம் என்பது ஒரு பொதுவான ஆற்றல். மின் கம்பிகளின் வாயிலாக வீட்டின் உள்ளே நுழையும் மின்சாரம் எந்தப் பொருளில் சேருகிறதோ அந்த பொருளுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. வெளிச்சமாகவும், ஒலியாகவும், ஒளியாகவும், அசைவாகவும், சேரும் இடத்திற்கேற்ப மின்சாரம் பரிமாணத்தை கொள்கிறது. வீட்டில் எத்தனை பொருட்கள் இயங்கினாலும் அத்தனை பொருட்களையும் இயக்கும் அடிப்படை ஆற்றலாக இருப்பது மின்சாரம் தான். எத்தனை நவீனமான விலையுயர்ந்த கருவியாக இருந்தாலும் மின்சாரமின்றி அது இயங்காது அல்லவா?

அதைப் போலவே ரெய்கியும் எங்கு சேருகிறதோ; அந்த நபருக்கும், விலங்குக்கும், தாவரத்துக்கும், பொருளுக்கும், இடத்திற்கும், ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. சில ரெய்கி மாஸ்டர்கள் ரெய்கியை உடலின் உபாதைகளையும், நோய்களையும், குணப்படுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ரெய்கியை மனித வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தலாம்.

காற்று எவ்வாறு ஒரு நாட்டுக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ, நம்பிக்கைக்கோ, மொழிக்கோ, சொந்தமானது கிடையாதோ; அதைப் போலவே ரெய்கியும் எந்த ஒரு நாட்டுக்கும், மதத்திற்கும், இனத்திற்கும், நம்பிக்கைக்கும், மொழிக்கும், சொந்தமில்லாதது. ரெய்கி ஒரு சுதந்திரமான பேராற்றலாகும். அதற்கு எந்த எல்லைகளும், எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

உண்மையில் ரெய்கியானது ஆதிகாலம் தொட்டு மனிதர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு தான் வந்திருக்கிறது. இந்த ஆற்றலின் பெயர் மட்டும் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுமே ஒழிய அந்த பெயர்கள் உணர்த்தும் அடிப்படை ஆற்றலானது ஒன்றுதான். சரித்திர காலம் முதலாக ஆச்சரியமான பல கதைகளையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

"அவர் தொட்டால் நோய்கள் குணமாகுமாம், உடலின் குறைபாடுகள் குணமாகுமாம். அவரை சந்தித்தால் துன்பங்கள் தீருமாம்,இவரை சந்தித்தால் பிரச்சினைகள் தீருமாம். அந்த நபரால் தீய ஆற்றல்களை கட்டுப்படுத்த முடியுமாம்", இவ்வாறு பல காலமாக பலரைப் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். பரவலாக இவ்வாறான அதிசய ஆற்றல்களைக் கொண்ட மனிதர்கள் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றும் கூட பரவலாக வாழ்கிறார்கள்.

ஒரு தனி நபர் பலரின் நோய்களை தீர்ப்பதற்கும், துன்பங்களை நீக்குவதற்கும், பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் உதவியாக இருப்பது பிரபஞ்ச ஆற்றல்தான். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்த தெரிந்த மனிதர் எல்லா மனிதர்களுக்கும் பயனுள்ளவாறு ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழலாம். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் பொழுது இயலாது, முடியாது, என்று எதுவுமே இருக்காது.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.