ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்

ரெய்கி என்பது மிகவும் புத்திக் கூர்மையுடைய ஆற்றலாகும் (சக்தியாகும்). ரெய்கிக்கு யாரும் எதையும் கற்றுத்தரத் தேவையில்லை. மின்சாரம் விளக்கில் கலந்தால் வெளிச்சத்தை உண்டாக்கும், மின்விசிறியில் கலந்தால் காற்றை உண்டாக்கும், வானொலியில் கலந்தால் ஓசையை உண்டாக்கும், தொலைக்காட்சியில் நுழைந்தால் காட்சிகளை உண்டாக்கும். மின்சாரம் எந்த பொருளில் நுழைகிறதோ, அந்த பொருளுக்கு ஏற்ப தனது தன்மைகளை மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. அதைப் போலவே ரெய்கியும் சேரும் மனிதர்களுக்கு ஏற்பவும், பொருட்களுக்கு ஏற்பவும், தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.

ரெய்கி ஆற்றல் ஒரு மனிதரின் உடலுக்குள் நுழையும் போது அந்த மனிதரின் குறை நிறைகளை முதலில் சரிசெய்யத் தொடங்கும். ஒரு நோயாளியின் உடலில் நுழைந்தால் அந்த நோயாளியின் நோய்களுக்கான மூலக் காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரி செய்ய தொடங்கும். ரெய்கி ஒரு பொருளிலோ, இடத்திலோ, நுழைந்தால் அந்த பொருளின் அல்லது இடத்தின் குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும். தீய சக்திகள் எங்கிருந்தாலும் அவற்றை ரெய்கி வெளியேற்றிவிடும். மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், மற்றும் கட்டடங்களின் சக்தியை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் செய்யும்.

ரெய்கி நமக்கு அந்நியமான ஒரு ஆற்றல் அல்ல. நம்மை அறியாமலேயே நமது தினசரி வாழ்க்கையில் அவப்போது ரெய்கியை பயன்படுத்தி தான் வருகிறோம். எடுத்துக்காட்டாக யாருக்காவது தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மூட்டு வலி, போன்றவை உருவானால் தன்னை அறியாமலேயே தன் கரங்களால் வலிக்கும் பகுதியை அவர் தேய்த்து கொடுப்பார். அவரின் வலிகளும் குறையத் தொடங்கும்.

ஒரு குழந்தை காரணமில்லாமல் அழுது கொண்டிருந்தால் அதன் தாய் அந்தக் குழந்தையை தன் கரங்களால் தேய்த்து கொடுப்பார், தடவி கொடுப்பார். சற்றுநேரத்தில் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். விலங்குகளுக்கு காயங்கள் உண்டானால் விலங்குகள் காயம் கண்ட பகுதியை தன் நாவினால் வருடும், அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

நம் அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப் பட்டாலோ, ஏதாவது பிரச்சனையில் சிக்கியிருந்தாலோ, அல்லது கவலையில் மூழ்கி இருந்தாலோ, நாம் அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறுவோம். அல்லது அவர்களை கட்டியணைத்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறுவோம்.

உண்மையில் மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நாம் என்ன செய்கிறோம் என்றால் தொடுவதன் மூலமாகவும், கட்டி அணைப்பதன் மூலமாகவும், வார்த்தைகளின் அல்லது ஓசைகளின் மூலமாகவும் நாம் நமது ஆற்றலை பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உடலில் பிரபஞ்ச ஆற்றல் குறைவாக இருப்பதனாலும் அதில் குறைபாடுகள் உண்டாவதனாலும் தான் பெரும்பாலான மனிதர்களுக்கு நோய்களும், வாழ்க்கையில் பல தொந்தரவுகளும் உருவாகின்றன. மற்றவர்களின் மூலமாக கிடைக்கும் ஆற்றலானது அவர்களுக்கு துன்பங்களில் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.